தமிழ் மொழியில் அறநூல்கள் ஏராளமாக உள்ளன. ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, நன்னெறி போன்ற நீதிநூல்கள் அற நூல்களாகும். ‘சதகம்’ எனப்படும் நூறு பாடல்கள் கொண்ட நீதி நெறி நூலும் உள்ளது. அக்காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் மனிதர்களின் மனதில் மனிதத்தை விதைத்து அற உணர்வை வளர்க்கும் வல்லமை படைத்த இத்தகைய அற நூல்களை இயற்றினர். அறம் வளர்ந்தது. வாழ்க்கை சிறந்தது. இப்படிப்பட்ட ஒரு சிறந்த அற நூலே ‘சிறுபஞ்சமூலம்.’ இந்த நூலைப் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்ளுவோம்.
திருக்குறள், நாலடியார், பழமொழி, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக் கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது என்பன பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும்.
பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒரு அறநூலே ‘சிறுபஞ்சமூலம்’ எனும் நூலாகும். நான்கு அடிகளால் அமைந்த செய்யுள்களைக் கொண்டது இந்த அறநூல். இந்த நூலில் உள்ள பெரும்பாலான செய்யுள்களில் கருப்பொருள் தொடர்பான ஐந்து பொருள்களை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன.
கி.பி.ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலின் பெயருக்கு ஐந்து சிறு வேர்கள் என்று பொருள். சிறுவழுதுணைவேர், நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், கண்டங்கத்திரிவேர் என்ற ஐந்து வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல ஐந்து செய்திகள் மூலம் அறத்தை போதிப்பது இந்த நூலின் தனிப்பெரும் சிறப்பாகும். இந்த நூலானது, மனிதர்களின் மனதில் அறத்தையும் ஒழுக்கத்தையும் விதைக்கும் அருமருந்தாக அமைந்துள்ளது.
’பொய்யாமை பொன் பெறினும், கள்ளாமை, மெல்லியார்
வையாமை, வார் குழலார் நச்சினும் நையாமை,
ஓர்த்து உடம்பு பேரும் என்று, ஊன் அவாய் உண்ணானேல்,
பேர்த்து உடம்பு கோடல் அரிது.’
சிறுபஞ்சமூலம் - 17
‘பொன் உடைய செல்வந்தராக இருந்தாலும் பொய் பேசாதிருத்தல், பிறர் பொருளைத் திருடாதிருத்தல், எளியவர்களை வையாதிருத்தல், ஒழுக்கமில்லாத பெண்டிர் தம்மை விரும்பியபோதும் உள்ளம் தளராது இருத்தல், தன் உடம்பு வளர்வதற்காக மற்ற உயிர்களின் ஊனைத் திண்ணாதிருத்தல் பிறப்பை நீக்கும் செயல்களாகும்’ என்பதே இச்செய்யுளின் பொருளாகும்.
ஐந்து வேர்களிலிருந்து உருவாக்கப்படும் மருந்தானது உடல் நோயை நீக்க வல்லது. இதுபோல, இந்த நூலில் செய்யுள்களில் கூறப்பட்டுள்ள ஐந்து செய்திகள் மனிதர்களின் மனங்களை பண்படுத்தி அறத்தை வளர்க்கிறது. மனிதத்தை மனதில் விதைக்கிறது. இதனாலேயே இந்த நூலுக்கு சிறுபஞ்சமூலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் காரியாசான் என்பவர். காரி என்பது இவருடைய இயற்பெயராகவும் ஆசான் என்பது இவர் ஆசிரியராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரை மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கிறது. இவருடைய ஆசிரியர் மதுரையைச் சேர்ந்த மாக்காயனார் என்பதால் காரியாசானும் மதுரையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருத இடமுண்டு. இந்த நூலில் மனிதர்களுக்குத் தேவையான அறக்கருத்துகள் வெண்பா யாப்பில் செய்யுள்களாக இயற்றப்பட்டுள்ளன. காப்புச் செய்யுளான ‘மூவாதான் பாதம் பணிந்து’ என்பது சமண தீர்த்தங்கரரின் திருவடிகளை வணங்குவதாக உள்ளதால் காரியாசான் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பது புலனாகிறது.
சிறுபஞ்சமூலம் கடவுள் வாழ்த்தோடு சேர்த்து மொத்தம் 108 பாடல்களை உடையது. இதில் 85, 86, 87, 88, 89 ஆகிய ஐந்து செய்யுள்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் தற்போது மொத்தம் கடவுள் வாழ்த்தோடு சேர்த்து 103 பாடல்கள் வழக்கத்தில் உள்ளன.