புகைப்பிடிப்பது பல நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, நுரையீரல், இதயம் மற்றும் ஒட்டுமொத்த சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. புகைப்பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று தெரிந்திருந்தும், இந்தப் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், நீங்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டிய வருடாந்திர 6 மருத்துவப் பரிசோதனைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நுரையீரல் செயல்பாட்டு சோதனை (ஸ்பைரோமெட்ரி): ஸ்பைரோமெட்ரி என்பது உங்கள் நுரையீரல் எப்படி செயல்படுகிறது என்பதை அளவிடும் ஒரு சோதனை ஆகும். இந்த எளிய சுவாசப் பரிசோதனை, நோயாளியின் நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வளவு காற்று நகர்கிறது என்பதை கண்காணிக்க உதவுகிறது. குறிப்பாக, புகைப்பிடிப்பவர்களுக்கு சிஓபிடி போன்ற நோய்களை இது ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது. சிஓபிடி என்பது நுரையீரலின் காற்றுப்பாதைகள் அல்லது பிற பாகங்களில் ஏற்படும் சேதம் ஆகும். இந்த சேதம் காற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் சுவாசத்தை கடினமாக்குகிறது.
லோ-டோஸ் CT ஸ்கேன்: புகைப்பிடிப்பவர்களுக்கு, குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது நீண்ட நாட்களாக புகைப்பிடித்தவர்கள், நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய ஆண்டுதோறும் லோ-டோஸ் CT ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது நுரையீரல் புற்றுநோய் போன்ற முக்கிய பிரச்னைகளைக் கண்டறிய உதவுகிறது. மேலும், நுரையீரல் புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதன் ஆபத்துகளை குறைக்க உதவுகிறது. இந்த ஸ்கேன் உங்கள் நுரையீரலின் விரிவான படத்தை வழங்குகிறது.
கார்டியாக் ஸ்கிரீனிங்: கார்டியோவாஸ்குலர் நோய்க்கான முக்கிய ஆபத்து காரணங்களில் ஒன்று புகைப்பிடித்தல் ஆகும். எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி), லிப்பிட் ப்ரோஃபைல் மற்றும் இரத்த அழுத்த கண்காணிப்பு போன்ற வருடாந்திர கார்டியாக் ஸ்கிரீனிங்கள் இதில் அடங்கும். இந்தச் சோதனைகளானது, உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மதிப்பிடவும், புகைப்பிடிப்பவர்களுக்கு பொதுவாகக் காணப்படும் கரோனரி அர்டேரி டிசீஸ், உயர் இரத்த அழுத்தம் அல்லது அரித்மியா போன்றவற்றை கண்டறியவும் உதவுகின்றன.
கம்ப்ளீட் பிளட் கவுண்ட் (சிபிசி): சிபிசி சோதனை மூலம் உங்கள் இரத்தத்தில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் அசாதாரணங்களை அடையாளம் காண முடியும். அதாவது, வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை, வீக்கம் அல்லது ஹீமோகுளோபின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை இதில் அடங்கும்.
வாய் புற்றுநோய் ஸ்கிரீனிங்: புகைப்பிடிப்பவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஒரு பல் மருத்துவர் அல்லது சுகாதார மருத்துவரிடம் ஆண்டுதோறும் வாய்வழி புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இது வாய், தொண்டை அல்லது நாக்கில் புற்றுநோய் புண்களை முன்கூட்டியே கண்டறிந்து, ஆரம்ப சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது.
கல்லீரல் செயல்பாட்டு சோதனை (LFT): புகைப்பிடிக்கும் நபர்கள், குறிப்பாக ஆல்கஹால் குடிக்கும் நபர்களுக்கு கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படலாம். எனவே, ஆண்டுதோறும் LFT பரிசோதனை மேற்கொள்ளது கல்லீரல் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து, ஆரம்ப சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது.