

நட்போ அல்லது காதலோ எந்த வகையான உறவாக இருந்தாலும் அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதிலும் காதல் அல்லது நட்பு என்பது மற்ற உணர்ச்சிகளை விட சற்று மேலானது. அந்த வகையில் காதல் மற்றும் நட்பில் செய்யக் கூடாத சில விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. காதல் என்னும் மேக வெடிப்பு: காதல் இயல்பாக இருக்கும் வரை அழகானதுதான். இயல்புக்கு மீறி உங்கள் பார்ட்னரிடம் அதிகமான எதிர்பார்ப்பை காட்டினாலோ அல்லது நீங்கள் எதிர்பார்த்தாலோ, அது மற்றவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். நம் நிலைமை இதேபோல் தொடர்ந்தால் என்ன ஆகுமோ என யோசிக்க ஆரம்பித்தால் விளைவு விபரீதமாவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, காதலிக்கிறோம் என்பதற்காக புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் என நினைப்பது, பரிசுகள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது போன்றவை உங்கள் பார்ட்னரை எரிச்சலடையச் செய்யும் என்பதால் இத்தகைய விஷயங்களை தவிர்த்து விடுங்கள்.
2. எல்லைகளை மதிக்க வேண்டும்: உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காதலில் இரண்டு பேருக்கும் சில எல்லைகள் இருப்பதை இருவருமே மதிக்க வேண்டும். எல்லைகளை மதிக்காமல் புறக்கணிக்கும்போது அதனால் மற்றவருக்கு அசௌகர்யங்கள் ஏற்படுவதோடு, இதனால் பின் நாட்களில் பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்பதால் காதலிலும் சில எல்லைகள் உண்டு என்பதை உணர்ந்து மதிக்க வேண்டும்.
3. காதல் குறைவு என்ற சந்தேகம்: உங்களுடைய ஓவர் எக்சைட்மென்ட்டை போல, உங்களது பார்ட்னரும் இருக்க வேண்டும் என நினைப்பது காதல் உறவில் நீங்கள் செய்யக் கூடாத முக்கியமான விஷயமாகும். ஏனென்றால், ‘நான் இவ்வளவு காதலுடன் இருக்கிறேன், நீ அப்படி இல்லையே’ என நினைக்க ஆரம்பிக்கும்போது சந்தேகம் எழுந்து மொத்தமாக காதலுக்கே வேட்டு வைத்து விடும்.
4. முன்னுரிமை கொடுப்பது: சிலர் காதலிக்கும்போது காதலிக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து, மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருப்பதை பார்க்கும் காதலிகளே, ‘இவர் மற்றவர்களை மதிக்கத் தெரியாதவர்’ என எண்ணக் கூடும். அதேபோல், நம் காதலிதானே அதனால் மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம் என நினைப்பதால், ‘நமக்கே முன்னுரிமை கிடைக்கவில்லை’ என காதலிகள் நினைத்து விலக ஆரம்பிப்பார்கள் என்பதால் எப்பொழுதும் எந்த இடத்திலும் சமமாக அனைவரையும் பேலன்ஸ் செய்து முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
5. பொசசிவ் மற்றும் பொறாமை: காதலனும் காதலியும் தன்னுடைய நண்பர்கள் அல்லது அவர்களுடைய நண்பர்களிடம் கொஞ்சம் அதிக நெருக்கமாக பழகுவதைப் பார்க்கும்போது பொசசிவ்னஸ் இருப்பதோடு பொறாமை படவும் செய்வார்கள். காதலில் பொசசிவ்னஸ் அழகாக தெரிந்தாலும், ஒரு எல்லைக்கு மேல் இருந்தால் உங்களது பார்ட்னர் உங்களை விட்டு விலகிச் செல்ல முடிவெடுக்கலாம் என்பதால் பொசசிவ்னஸ், பொறாமை இரண்டையும் அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்.
மேற்கூறிய ஐந்து பழக்கங்களையும் அளவோடு வைத்துக்கொண்டு தவறுகளை நிறுத்தி விட்டால் உங்களது காதலோ அல்லது நட்போ நிலையானதாக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.