
சில குழந்தைகள் இயற்கையாகவே அதிக வெட்கப்படுபவர்களாகவும், வேறு சில குழந்தைகள் தைரியசாலிகளாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். உதாரணமாக ஒத்த வயதுடைய ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இரண்டு, மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்கின்றன. முதல் குழந்தை ராஜ ராஜ சோழன் வேடமிட்டு, கையில் வாளுடன் மேடையேறி, "நான்தான் ராஜ ராஜ சோழன்.. இந்த உலகையே வெல்லப் போகிறேன்" எனக்கூறி வாளை சுழற்றியபடி கீழிறங்குகிறது.
இரண்டாம் குழந்தை பட்டு மாமி வேடமிட்டு கையில் குங்குமச் சிமிழுடன் நிற்கிறது. அது சொல்லவேண்டிய வசனம், "எங்காத்துல கொலு வச்சிருக்கோம்.. எல்லோரும் வாங்க" என்பது. மேடை அருகே வந்ததும் அது தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கீழே இறங்கவே மறுத்துவிட்டது. காரணம் வெட்கம் மற்றும் தன்னம்பிக்கையின்மை. இதிலிருந்து விடுபட பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. சமூகத்தில் பழகும் திறமைகளை வளர்த்தல்:
குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வதற்கேற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போது அவர்களை கண்டிப்பாக கூட அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் சமவயதுக் குழந்தைகளுடன் பேசி உரையாடச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் உதவிக்கு நீங்கள் அங்கிருப்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருங்கள்.
குறிப்பிட்ட நாட்களில் ஓரிடத்தில் குழந்தைகள் சேர்ந்து விளையாட ஏற்பாடாகியிருக்கும் இடங்களுக்கு உங்கள் குழந்தையையும் அழைத்துச் சென்று விளையாட வைத்து அழைத்து வாருங்கள். குழுவாக செயல்படும் விளையாட்டுகளில் உங்களின் குழந்தையின் பெயரையும் பதிவு செய்து சேர்த்து விடுங்கள்.
2. உங்கள் குழந்தைக்கு தன்னம்பிக்கையை ஊட்டி விடுங்கள்: உங்கள் குழந்தையிடம் உள்ள சிறந்த, தனித்துவம் மிக்க திறமைகளைக் கண்டறியுங்கள். அதில் அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்குள் தன்னம்பிக்கை வளர உதவி புரியுங்கள். அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று அடிக்கடி அவர்களிடம் கூறிக்கொண்டிருங்கள்.
3. குழைந்தைக்கு நீங்கள் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குவது அவசியம்: பொதுவாக குழந்தைகள் பல விஷயங்களை தங்கள் பெற்றோரை உன்னிப்பாக கவனிப்பதிலிருந்தே கற்றுக்கொள்கின்றனர். சமூக அக்கறையுடன் கூடிய நன்னடத்தையைப் பிரதிபலிப்பதாக உங்கள் செயல்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் தாங்களாகவே பிற குழந்தைகளிடம் தம்மை அறிமுகம் செய்துகொள்ளவும் அவர்களுடன் எந்தவிதமான தயக்கமுமின்றி உரையாட ஆரம்பிப்பதையும் உற்று நோக்குங்கள். நீங்களே அந்த குணத்தை வளர்க்க உதாரணமாக இருப்பது அவர்களுக்கு ஓர் சக்தி வாய்ந்த பாடமாக அமையும்.
4. அவ்வப்போது பரிசு வழங்கி உற்சாகப்படுத்துதல்:
குழந்தைகள் வகுப்பைறையில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தயக்கமின்றி ஆசிரியரிடம் உரிய முறையில் கேட்டுத் தெளிவுறும்போதும், போட்டிகள், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பரிசோ, பாராட்டுதலோ பெற்று வரும்போதும், பெற்றோராகிய நீங்களும் அவர்களுக்கு நல்ல முறையில் பரிசும் பாராட்டுதலும் வழங்குவது அவர்களை கௌரவம் மிக்கவராக உணரச் செய்யும். மேலும் மேலும் அதே வழியில் முயற்சிக்கத்தூண்டும்.
5. குழந்தைகளின் உணர்ச்சிகளை மதித்து நடத்தல்:
குழந்தைகளின் வெட்கப்படும் உணர்வானது இயற்கையான ஒன்று எனப் புரிந்து கொள்ளுதல் மிக முக்கியம். அதிலிருந்து அவர்கள் விடுபட, வலுக் கட்டாயமாய் அவர்களை மாறுபட்ட சூழலுக்குள் இழுக்க முயற்சிப்பது அவர்களை வேதனைக் குள்ளாக்கவே செய்யும்.
அதற்குப் பதில், ஷாப்பிங் மற்றும் உணவகங்களுக்குச் செல்லும்போது அவர்கள் விரும்பும் ஆடை மற்றும் பொம்மைகளை அவர்களையே தேர்ந்தெடுக்கச் சொல்லலாம். உணவகங்களில் அவர்களுக்கு விருப்பமான உணவைக் கேட்டறிந்து கொண்டுவரச் செய்யலாம்.
இவ்வாறெல்லாம் குழந்தைகளுக்கு தேவையான சுதந்திரம் அளித்து அவர்களிடம் பெற்றோர் நட்புணர்வோடும் நல்ல பழக்க வழக்கங்களோடும் நடந்து கொண்டால் அவர்களின் வெட்கம் விரைவிலேயே விடை பெற்றுக்கொள்ளும்.