வாசிப்புப் பழக்கம் நம் வாழ்க்கையை மேம்படுத்தும். புத்தகம் வாசித்தல் என்பது ஒரு வரம். ஒவ்வொருவரும் தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிறுவயது முதலே நமது குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
பல பள்ளிகளில் தினமும் காலை வேளைகளில், தலைப்புச் செய்திகளை ஒரு மாணவர் மூலமாக பிற மாணவர்களுக்கு வாசிக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒரு மிகச்சிறந்த பழக்கம். நம்மைச் சுற்றி நடைபெறும் செய்திகளை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
சிறுவர்களுக்கு முதலில் காமிக்ஸ் எனப்படும் படக்கதைப் புத்தகங்களை வாங்கித் தந்து ஊக்கப்படுத்த வேண்டும். சிறுவர்களுக்கு படங்களின் மீது அதீத ஈர்ப்பு இருக்கும். வண்ணப் படங்களைப் பார்க்கத் தொடங்கும் சிறுவர்கள் பின்னர் மெல்ல சிறு சிறு வாக்கியங்களை வாசிக்கத் தொடங்குவார்கள்.
விடுமுறை தினங்களில் பிள்ளைகளை பெற்றோர் வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். நூலகத்தில் சிறுவர்களுக்கான பகுதியில் நூல்கள் நிறைய இருக்கும். அதிலிருந்து அவர்களுக்கு விருப்பமான நூல்களை எடுத்து வாசிக்கும்படி ஊக்கப்படுத்தலாம்.
பிறந்த நாள் அன்று படக்கதை மற்றும் சிறுவர் சிறுகதை நூல்களை பிறந்த நாள் பரிசாக வாங்கித் தந்து வாசிக்கும்படி ஊக்கப்படுத்த வேண்டும். இதன் பின்னர் வாசிப்புப் பழக்கம் அவர்களோடு தொடரும் ஒரு பழக்கமாகி விடும்.
பள்ளிப் புத்தகங்களோடு அறிவியல், சிறுகதைகள் முதலான நூல்களை வாசிக்கும்படி ஊக்கப்படுத்த வேண்டும். சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்கள் இலக்கியங்களைத் தாங்களாகவே வாசிக்கத் தொடங்குவார்கள்.
பல சாதனையாளர்களின் வரலாற்றை வாசித்தால் அவர்கள் சிறுவயதில் வாசிக்கும் வழக்கத்தைத் தீவிரமாகக் கடைபிடித்தவர்களாக இருப்பதை அறிய முடிகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஏழைச் சிறுவன் புத்தகங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். தந்தை தச்சு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். அந்த சிறுவனோ புத்தகத்தின் மீது கொண்ட பற்றினால் பலரிடம் புத்தகங்களை இரவல் வாங்கி வந்து படிக்கும் வழக்கத்தை வைத்திருந்தான்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியாகி இருந்தது. அந்த புத்தகம் ஒருவரிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அவரிடம் கேட்டு அதை இரவல் வாங்கிக் கொண்டு வந்து ஒரு இரவில் அதைப் படிக்கத் தொடங்கினான். எரிந்து கொண்டிருந்த விளக்கு எண்ணெய் தீர்ந்து போன காரணத்தினால் அணைந்து போனது. மேற்கொண்டு படிக்க இயலாத காரணத்தினால் அந்த புத்தகத்தை ஜன்னல் ஓரம் வைத்து விட்டு தூங்கி விட்டான்.
அன்று இரவு கடுமையான மழை பெய்ய மழையில் அந்த புதிய புத்தகம் நனைந்து போயிருந்தது. புத்தகத்தின் சொந்தக்காரருக்கு என்ன பதில் சொல்வது என்று பயந்து போன சிறுவன் நீரில் நனைந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதன் சொந்தக்காரரைச் சந்தித்தான்.
மழையில் புத்தகம் நனைந்து போய் விட்டதாகவும் அதற்காக தன்னை மன்னிக்கும்படியும் கேட்டுக் கொண்டான். ஆனால் அதன் உரிமையாளர் அவனை மன்னிக்கவில்லை. அந்த புத்தகத்திற்கான விலைக்கு பதிலாக தனது வயலில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்றார். அந்த சிறுவனும் புத்தகத்தின் விலைக்காக அவருடைய வயலில் மூன்று நாட்கள் வேலை செய்தான். மூன்று நாட்களுக்குப் பின்னர் அந்த புத்தகத்தை அவனிடமே கொடுத்துவிட்டார். அந்த சிறுவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.
அமெரிக்காவின் ஜனாதிபதி வாஷிங்டனின் வாழ்க்கை வரலாறு அவனுடைய வாழ்க்கையையே மாற்றி விட்டது. ஆம். அந்த ஏழைச் சிறுவனும் பிற்காலத்தில் அமெரிக்காவின ஜனாதிபதியானான். அந்த சிறுவனின் பெயர் ஆபிரகாம் லிங்கன்.
நெருக்கடிகள் பல நிறைந்த தற்கால வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் தங்கள் மனஉளைச்சலைப் போக்க கலை இலக்கியம் மிகவும் அவசியமாகிறது. நல்ல நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக மனதில் மகிழ்ச்சி நிறைந்து நம் மனதை லேசாகும். புத்தகங்கள் நம் மனதை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். நம் வாழ்வையும் உயர்த்தும்.