

ஒரு சாதனத்தில் உள்ள நட்சத்திரக் குறியீடு (BEE Star Rating) அந்த சாதனம் எவ்வளவு குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி அதிகத்திறனுடன் செயல்படுகிறது என்பதைக் குறிக்கிறது. ஏசி, ஃபேன் என எதுவாக இருந்தாலும் ஃபைவ் ஸ்டார் (5 Star) ரேட்டிங் மின்சாரத்தை மிச்சப்படுத்தும். ஏசி மற்றும் ஃபேன் ஆகிய இரண்டிலுமே ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் இருந்தால் நிச்சயம் மின்கட்டணம் குறையும். ஆனால் இவை இரண்டுக்கும் இடையே மின்சாரம் சேமிக்கப்படும் விதத்திலும், சேமிக்கப்படும் தொகையிலும் பெரிய வித்தியாசம் உள்ளது.
நட்சத்திரக் குறியீட்டின் உண்மை என்ன?
இந்திய அரசின் BEE (Bureau of Energy Efficiency) அமைப்பு மின்சாதனங்களின் ஆற்றல் திறனை சோதித்து 1 முதல் 5 வரை நட்சத்திரங்களை வழங்குகிறது.
மின்கட்டணம் சேமிப்பு :
நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மின்சார நுகர்வு குறையும். அதாவது 1-ஸ்டார் சாதனத்தை விட 5-ஸ்டார் சாதனம் மிகவும் குறைவான மின்சாரத்தையே எடுத்துக்கொள்ளும்.
ஏசி:
3-ஸ்டார் ஏசியை விட 5-ஸ்டார் ஏசி சுமார் 15% முதல் 25% வரை மின்சாரத்தை மிச்சப்படுத்தும். தினமும் 8 மணி நேரம் ஓட்டினால் 3-ஸ்டார் ஏசி மாதத்திற்கு சுமார் 384 யூனிட்டும், 5- ஸ்டார் ஏசி சுமார் 312 யூனிட்டும் எடுக்கும். கோடைக்காலம் அதிகமுள்ள சென்னை போன்ற பகுதிகளில் தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் ஏசியை பயன்படுத்துகிறோம் என்றால் ஃபைவ் ஸ்டார் ஏசி வாங்குவது மின் கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்கும்.
தினமும் 2 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஏசி பயன்படுத்துபவர்கள் என்றால், 5-ஸ்டார் ஏசிக்கு அதிக விலை கொடுத்து வாங்குவது லாபகரமானதாக இருக்காது. அதற்கு த்ரீ ஸ்டார் ஏசியே போதுமானது.
ஃபேன் (Ceiling Fan - BLDC தொழில்நுட்பம்):
சாதாரண ஃபேன்கள் (1-ஸ்டார் அல்லது ரேட்டிங் இல்லாதவை) மணிக்கு சுமார் 70 முதல் 80 வாட்ஸ் மின்சாரத்தை எடுக்கும். ஆனால் 5-ஸ்டார் ரேட்டிங் கொண்ட நவீன BLDC ஃபேன்கள் வெறும் 28 முதல் 35 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதனால் ஃபேன் மூலம் ஏற்படும் மின் கட்டணம் கிட்டத்தட்ட 50% முதல் 65% வரை மின்சாரம் மிச்சமாகும்.
ஒரு ஃபேனை தினமும் 8-10 மணி நேரம் பயன்படுத்தினால், ஆண்டிற்கு சுமார் ₹600 முதல் ₹1000 வரை மின் கட்டணம் குறையும். இதனால் காற்றின் வேகம் குறையுமா என்றால் குறையாது. 5-ஸ்டார் ஃபேன்கள் குறைந்த மின்சாரத்தில் அதிக காற்றைத் தள்ளும் திறன்கொண்டவை.
3-ஸ்டார் vs 5-ஸ்டார்: எதை தேர்ந்தெடுப்பது?
த்ரீ ஸ்டார் ஆரம்ப விலை சற்று குறைவாக இருக்கும். மின் கட்டணமோ நடுத்தரமாக இருக்கும். இது தினமும் சில மணி நேரம் மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றது. அதுவே 5 ஸ்டார் ஆரம்ப விலை சற்று அதிகம் தான். ஆனால் மின் கட்டணம் மிகக் குறைவாக இருக்கும்.
தினமும் நீண்ட நேரம் அதாவது 8+ மணி நேரம் பயன்படுத்துபவர்களுக்கு இது ஏற்றது. ஃபைவ் ஸ்டார் சாதனங்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், மின்கட்டணத்தில் மிச்சமாகும் பணம் மூலமாக ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் அந்த கூடுதல் செலவை நாம் திரும்பப் பெற்றுவிடலாம். மேலும் ஸ்டிக்கரில் உள்ள உற்பத்தி ஆண்டு (label period) சமீபத்தியதாக இருப்பதை சரிபார்த்து வாங்கவேண்டியது அவசியம்.
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
அரசாங்கம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விதிமுறைகளைக் கடுமையாக்கும். பழைய ஆண்டின் ஃபைவ் ஸ்டார் ஏசி, புதிய விதிமுறைப்படி 4-ஸ்டார் அல்லது 3- ஸ்டாருக்கு சமமாக இருக்கலாம். எனவே ஸ்டிக்கரில் உள்ள ஆண்டை சரிபார்த்து வாங்கவும்.
ஏசியை 24°C - 26°C அளவில் வைத்துவிட்டு, கூடவே ஃபைவ் ஸ்டார் ஃபேனை மெதுவாக ஓடவிட்டால், குளிர்ந்த காற்று அறை முழுவதும் வேகமாகப் பரவி ஏசி கம்ப்ரெஸர் அதிக நேரம் ஓடுவதைத் தடுக்கும். இதனால் கூடுதலாக 10% வரை மின்சாரம் மிச்சமாகும்.