

பெரும்பாலான மக்கள் தங்களுடைய மின்சாரக் கட்டண ரசீதைக் கண்டதும் மொத்தத் தொகையை பார்த்துவிட்டு எந்த கேள்வியும் கேட்காமல் அதை செலுத்தி விடுகிறோம். மின்சாரக் கட்டணத் தொகைகளை கணக்கிடுவது எப்படி என்பதை கற்றுக் கொள்வதும், மின்சாரக் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். மின்சார கட்டணத் தொகையை கணக்கிட தெரிந்திருப்பது தவறுகளை கண்டறிய உதவும். அத்துடன் வரவு செலவு திட்டத்தையும் சிறப்பாக திட்டமிடமும் உதவும்.
வீட்டு மின் கட்டணத்தை(Electricity Bill) கணக்கிடுவது என்பது நம் மின் மீட்டரின் தற்போதைய அளவீட்டிலிருந்து முந்தைய அளவீட்டைக் கழித்து, பயன்படுத்தப்பட்ட மொத்த யூனிட்டுகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப மின்சார வாரியத்தின் ஸ்லாப் (Slab) விகிதங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களை பெருக்குவதாகும். தமிழ்நாட்டில் வீட்டு மின்சாரக் கட்டணம் (TNEB) பொதுவாக இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வு கணக்கிடப்படுகிறது. இது டெலஸ்கோபிக் ஸ்லாப் (Telescopic Slab - படிநிலைக் கட்டணம்) மற்றும் அரசு வழங்கும் இலவச யூனிட் மானியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
மின் கட்டணத்தை கணக்கிடும் முறைகள்:
1. யூனிட்டைக் கணக்கிடுதல்:
நம் வீட்டு மின்சார மீட்டரில் உள்ள தற்போதைய ரீடிங்கிலிருந்து (current reading), கடந்த முறை வந்த பில்லின் ரீடிங்கைக் கழிக்க வேண்டும். எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் பயன்படுத்திய யூனிட்டுகள் = தற்போதைய ரீடிங் - முந்தைய ரீடிங். உதாரணத்திற்கு நம் வீட்டு முந்தைய ரீடிங் 4200 ஆகவும், தற்போதைய ரீடிங் 4600 ஆகவும் இருந்தால் 4600 - 4200 = 400 யூனிட்டுகள்.
2. ஸ்லாப் மற்றும் இலவச யூனிட் முறை (2026 நிலவரப்படி). தமிழக அரசின் அறிவிப்பின்படி இரு மாதத்திற்கு:
500 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு:
முதல் 200 யூனிட்டுகள் முற்றிலும் இலவசம். மீதமுள்ள யூனிட்டுகளுக்கு ஸ்லாப் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
201 முதல் 400 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.70
401 முதல் 500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.30.
500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால்:
முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதன் பிறகு உள்ள யூனிட்டுகளுக்கு முழுமையான கட்டணம் மற்றும் ஸ்லாப் விகிதங்கள் பொருந்தும்.
101 முதல் 400 யூனிட்டுகள் வரை ரூ. 4.70 / யூனிட்
401 முதல் 500 யூனிட்டுகள் வரை ரூ. 6.30 / யூனிட்
501 முதல் 600 யூனிட்டுகள் வரை ரூ. 8.55 / யூனிட்
601 முதல் 800 யூனிட்டுகள் வரை ரூ.9.65 / யூனிட்
801 முதல் 1000 யூனிட்டுகள் வரை ரூ.10.70 / யூனிட்
1000 யூனிட்டுக்கு மேல் ரூ. 11.80 / யூனிட்
3. இதர கட்டணங்களை சேர்த்தல் பயன்படுத்திய யூனிட்டுக்கான கட்டணத்துடன்:
எரிசக்தி கட்டணத்துடன் சேர்த்து நம் மின்சார அட்டையில் அல்லது ஆன்லைன் பில்லில் பின்வரும் இதர விவரங்களும் சேர்க்கப்பட்டு இறுதித் தொகை கணக்கிடப்படும்.
நிலையான கட்டணம் (Fixed Charges):
மின் இணைப்பு வகையைப் பொறுத்து வசூலிக்கப்படும் நிலையான தொகை இது.
மீட்டர் வாடகை (Meter Rent - தேவைப்பட்டால்)
மின் வரி/எரிபொருள் சரிசெய்தல் கட்டணம் (Electricity Duty/FAC):
மாநில அரசின் விதிமுறைகளின்படி நுகர்வு அடிப்படையில் சேர்க்கப்பட்டு இறுதி பில் தொகை கணக்கிடப்படுகிறது. அதாவது மொத்த பில்=ஸ்லாப் வாரியான யூனிட் கட்டணம் + நிலைக்கட்டணம் (Fixed Charges) + எரிபொருள் சர்சார்ஜ் (FCA) + மின் வரி (Duty)
நாமாகவே எண்களைக் கூட்டி கழிக்க சிரமப்பட்டால் TNEB Bill Calculator அல்லது BillUnits.in Calculator போன்ற இணையதளங்களில் நம் யூனிட்டை மட்டும் உள்ளிட்டு துல்லியமான பில் விவரங்களை உடனடியாகப் பெற முடியும்.
வாசகர்கள் தங்கள் இரு மாத மின் கட்டணம் கணக்கிடும் திறனையும், பில்லில் உள்ள தவறுகளை எளிதில் கண்டறிவதையும், வரவு செலவுத் திட்டத்தைச் சிறப்பாகத் திட்டமிடுவதையும் இதன் மூலம் முழுமையாகப் பெற்றுக்கொள்கிறார்கள்.