
இன்றைய கால பரபரப்பான சூழலில் கணவன், மனைவி இருவரும் முழு நேர பணிக்குச் சென்றுகொண்டு இருப்பவர்களானால், அலுவலகம் மற்றும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்தி, மகிழ்ச்சியையும் வெற்றியையும் நிரந்தரமாக தனதாக்கிக்கொள்ள, வார இறுதி நாட்களில் அவர்கள் செய்யவேண்டிய 5 விஷயங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை அதிகம் தொடாமலிருப்பது: வீட்டிலிருக்கும் நேரங்களில் தொடர்ந்து நம் கவனத்தை திசை திருப்பக் கூடியது இந்த இரண்டும்தான் எனலாம். தொடர்ந்து மெசேஜ் அனுப்புவது, ஈமெயில் பார்ப்பது, சோஷியல் மீடியாவுக்குள் வலம் வருதல் போன்றவற்றைத் தவிர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். தொழில் நுட்ப சாதனங்கள் கூடியவரை வாழ்வியலை சிதைக்காமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகிறது. கணவன், மனைவி இருவரும் தனித்திருக்கையில், பேசிக்கொண்டே ஒரு கப் காபி குடிப்பது, வெளியில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது, ரொம்ப காலமாக கையில் எடுக்காத தினசரி பத்திரிக்கையை எடுத்து அன்றைய செய்திகளை இருவரும் பகிர்ந்து மகிழ்வது என நேரத்தைப் பயன்படுத்தலாம்.
2. பேரல்லெல் பிளே (Parallel Play): ஒரே நேரத்தில் இருவரும் தனித்தனியாக அவரவர்க்குப் பிடித்த செயலில் ஈடுபடுவதை 'பேரல்லெல் பிளே' என்கின்றனர். அதாவது, ஒரே அறையில் இருந்துகொண்டு கணவன் புத்தகம் படிப்பது, மனைவி தலையணை உறையில் எம்பிராய்டரி போடுவது போன்றவற்றை கூறலாம். ஓரிடத்தில் இருவரும் ஒன்றாய் சேர்ந்து இருப்பது ஸ்ட்ரெஸ் குறைய உதவும்.
3. படைப்பாற்றலை வெளிப்படுத்துதல்: அன்றைய மதிய உணவுக்கு இருவரும் சேர்ந்து ஒரு புதிய டிஷ் செய்ய முயற்சிக்கலாம். மனைவி, ‘எனக்கு வெண்டக்கா காரக் குழம்பு வைக்கத் தெரியாது’ என்று சொன்னால், கணவன் ஓடிப்போய் யூட்யூப் சேனலை ஆன் பண்ணி காரக்குழம்புக்குத் தேவையான பொருட்களை காகிதத்தில் குறித்துக்கொண்டு கடைக்கு ஓடணும். பின் இருவரும் சேர்ந்து செய்முறையைப் பார்த்து குழம்பை சமைக்கணும். சாப்பிடும்போது குறை ஏதும் இருந்தால், ‘பரவாயில்ல.. அடுத்த முறை செய்யும்போது சரியா வந்துரும்’னு இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசும்போது அங்கு மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.
4. அந்தரங்கம் காக்கவும் நேரம் ஒதுக்குதல்: அந்தரங்க செயல்பாடுகளின் நெருக்கத்திற்கும் நேரம் ஒதுக்கி ஆர்வமுடன் ஈடுபடுவது, கடந்த நாட்களில் வேலைப் பளுவினால் ஏற்பட்ட சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெற உதவும்.
5. எந்தவித கட்டுப்பாடுமின்றி சிரித்து மகிழ்தல்: சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றும் சின்னச் சின்ன கேளிக்கை விளையாட்டுக்களில் கணவன், மனைவி இருவதும் ஈடுபட்டு சிரித்து மகிழ்வது உறவை பலப்படுத்த சிறந்த முறையில் உதவும். பொறுப்புகளின் அழுத்தத்தால் புதைந்துபோன குறும்புகளை மீண்டும் ஒரு முறை செய்து காட்டி பார்ட்னரை மகிழ்விப்பது பல நன்மைகளை கொண்டுவர உதவும். மனைவி பல்லாங்குழி ஆட விரும்பினால் கணவரும் பங்கேற்று, விதி முறைகளைத் தெரிந்து கொள்ளாமல் 'போங்காட்டம்' ஆடி அவளை விளையாட்டாக வெறுப்பேற்றுவதும், சிரிக்க வைப்பதும் சுவாரஸ்யமாக நேரம் போக உதவும்.
மேற்கண்ட இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கணவன், மனைவி இருவதும் தாம்பத்யம் தங்கள் பக்கம் என்று உரக்கக் கூறிக் கொள்ளலாம்.