
யாருமே உண்மையில் கோபப்பட விரும்புவதில்லை. கோபம் என்னும் உணர்ச்சி நெருப்பை போன்றது. ஒருவர் கோபப்படும்பொழுது அதனுடைய விளைவுகள் எதிர் தரப்பினதை பெரிதும் பாதிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது என்பது எளிதல்ல. ஈகோவால் உருவாகும் கோபம் பழிவாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தும்.
1. கோபத்தின் வெளிப்பாடு: மகிழ்ச்சி எப்படியோ அதுபோல்தான் கோபம் என்பதும் நம் மன உணர்வின் வெளிப்பாடு. யாராலும் கோபமே படாமல் இருக்க முடியாது. ஆனால், அதிக கோபம் ஆபத்தில் முடியும் என்பதை உணர வேண்டும். சிலர் கோபமடைந்தால் பொருட்களை வீசி எறிவதும், தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்வதும், வீட்டில் உள்ளவர்களிடம் வெறுப்பை காட்டுவதும் என கோபத்தை வெளிப்படுத்துவார்கள். வேறு சிலரோ காரணம் எதுவுமே இல்லாமல் அடிக்கடி கோபப்படுவார்கள்.
2. அமைதியை விரும்பினால்: கோபத்தில் அவசர அவசரமாக விடும் வார்த்தைகள் சூழ்நிலையை எப்படி பாதிக்கும் என்பதை அறிந்து கொண்டால் கோபம் காணாமல் போய்விடும். ஒருவருக்கொருவர் அன்பையும் அமைதியான சூழலையும் விரும்பினால் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. கோபத்துடன் எதிர்வினையாற்றுவதற்கு முன்பு குடும்பத்தில் அமைதி எவ்வளவு அவசியமானது என்பதை அறிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். அதற்கு வெறுப்புணர்வை கொள்வதற்கு பதிலாக, மனிதாபிமானத்தையும், இரக்கத்தையும் கொண்டு நடந்து கொண்டால் கோபம் காணாமல் போய்விடும்.
3. நிறைவேறாத எதிர்பார்ப்பு: கோபம் பொதுவாக அதிகம் நேசிக்கும் நபர் மீதுதான் வெளிப்படும். எதிர்பார்த்த அளவு நடந்து கொள்ளைவில்லை என்றாலோ, எண்ணியது நிறைவேறவில்லை என்றாலோ சட்டென்று கோபம் வெளிப்படும். கோபம் என்பது வலிமையின் அடையாளமல்ல, இது பலவீனத்தின் அடையாளமே. எனவே, எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏன் நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதை எதிர் தரப்பினரின் பார்வையிலிருந்து பார்க்க முயற்சி செய்தால் கோபத்தை தவிர்க்கலாம்.
4. மன அழுத்தம்: வேலையில் அழுத்தம், பொருளாதார நெருக்கடி, உறவுகளில் பிரச்னைகள் போன்றவை மன அழுத்தத்தை அதிகரித்து கோபப்பட வைக்கும். தவறு நம் பக்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்வது பதற்றத்தை குறைக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சரியான புரிதலுடன் வாழ்வது மிகவும் முக்கியம். கோபப்படுவது எளிது. ஆனால், கோபத்தை வெல்பவர்கள்தான் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். எந்த விஷயமாக இருந்தாலும் கோபப்படாமல் உட்கார்ந்து மனம் விட்டு பேசுவதும், விவாதிப்பதும் கோபத்தை எளிதில் வெல்ல உதவும்.
5. யோசித்துப் பேசவும்: கோபமாக இருக்கும் சமயத்தில் கடுமையாக பேசி, வீணான வார்த்தைகளை கொட்டி மற்றவர்களை புண்படுத்துவதுடன், நாமும் வருத்தப்பட வேண்டி இருக்கும். இதற்கு பேசுவதற்கு முன்பு சிறிது சிந்தித்து செயல்பட்டால் கோபம் தீர்ந்ததும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது. கோபம் வரும்போது அந்த இடத்தை விட்டு அகன்று விடுவது நல்லது. கோபப்படும் நேரத்தில் அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். தானே வேறு வழியின்றி கோபம் அடங்கிவிடும்.
6. தளர்வு பயிற்சிகள்: யோகா, தியானம் போன்ற தளர்வு பயிற்சிகள் கோபத்தை சமாளிக்க உதவும். கோபம் வரும் சமயங்களில் அந்த இடத்தில் இருப்பதை விட்டு வெளியேறி அமைதியாக சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். விரும்பிய புத்தகத்தை படிப்பதில் கவனம் செலுத்தலாம். பிடித்த நண்பர்களுடன் உரையாடலாம். கோபத்தில் முட்டாள் தனமாக செய்துவிடும் செயல்களில் இருந்து நமது பாதுகாப்பை மட்டும் உறுதி செய்து கொண்டு விட வேண்டும்.
7. கோபத்தால் ஏற்படும் பாதிப்புகள்: நாள்பட்ட கோபம் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை உண்டாக்கும். செரிமானத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும். அடிக்கடி கோபப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகலாம். பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்னைகளைக் கூட உண்டுபண்ணும். எனவே, கோபம் என்பது அடிக்கடி வராமல் பார்த்துக்கொள்வது நம் உடல் நலனையும், மனநலனையும் பாதுகாத்துக்கொள்ள உதவும்.