
பொதுவாக, எல்லோருக்கும் அவரவர் நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என நினைப்பது இயற்கை. பிறப்பு, இறப்பை தவிர நாம் எது நினைக்கிறோமோ அது நடக்கும். அந்த வகையில் நாம் நினைத்த காரியங்கள் நடக்க கீழ்கண்ட 5 விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. நல்ல சிந்தனை: கஷ்டம் நம்மை சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நினைப்பதை விடுத்து, சின்னச் சின்ன விஷயங்களுக்கு வேதனைப்படுவதை குறைத்து நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை முதலில் மனதில் பதிய வைத்து அதைப் பற்றியே எப்பொழுதும் சிந்தனையில் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த விஷயத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலே நாம் நினைத்த காரியம் எளிதில் நடந்து விடும்.
2. எதிர்மறை சிந்தனை வேண்டாம்: ‘என்னால் முடியாது என்று அவர் சொல்லி விட்டார்’ என்பதை முதலில் தூக்கி எறிந்து, எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் மற்றவருடைய எதிர்மறை கருத்தைக் கேட்டு முடிவு எடுக்காமல் வெற்றி பெற முடியும் என்ற ஒரே நேர்மறை எண்ணத்தோடு பயணப்பட்டால் நினைத்ததை அடைவது வெகு தூரத்தில் இல்லை. வெற்றி பெற்ற அனைவரும் அவர்கள் வெற்றி பெற முடியும் என நினைத்ததால் வெற்றி பெற்றார்கள்.
3. திட்டம்: எந்த ஒரு விஷயத்திலும் நினைத்த இலக்கை அடைய நினைப்பவர்கள் முதலில் திட்டமிட்டு காரியத்தைத் தொடங்க வேண்டும். என்ன தேவை, எவ்வளவு நாட்கள் அதற்கு வேண்டும், அதற்கான உழைப்பு, முதலீடு முதலிய சிறு விஷயங்களை கூட தெளிவாகத் தெரிந்து திட்டமிட்டு நாள்தோறும் அதற்கு உங்கள் உழைப்பைப் போட நினைத்த காரியம் எளிதில் ஈடேறும் என்பதில் ஐயமே இல்லை.
4. நல்ல மனிதர்கள்: எப்போதும் நல்ல மனிதர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பதில் நம்பிக்கை பிறக்க அதிக வாய்ப்புண்டு. பிறரை ஊக்குவிக்கும் நபர்களோடும் வெற்றி பெற்ற மனிதர்களோடும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் அவர்களுடைய அணுகுமுறை நாம் நினைத்த காரியம் வெற்றி அடைவதற்கு வழிகாட்டியாக இருக்கும்.
5. ஆரோக்கியம்: நாம் நினைத்த காரியம் நடப்பதற்கு முதலில் நம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவு, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றிற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி தவறாமல் பின்பற்ற வேண்டும். ஏனெனில், சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
மேற்கூறிய ஐந்து விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் நினைத்த காரியம் எண்ணியபடி விரைவில் ஈடேறும்.