
மளிகைச் சாமான்களை வாங்க குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது நாம் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த சமயங்களில் நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளும் நம்முடன் அந்தக் கடைக்கு வருவதாகக் கூறி அடம் பிடிப்பார்கள். நாமும் அவர்களைக் கூட்டிச் சென்றால் கூடுதல் செலவு மற்றும் பொருட்களை வாங்குவதோடு, அவர்களையும் சேர்த்துப் பார்த்துக்கொள்ள வேண்டுமே என்பதற்காக அவர்களைத் தவிர்த்துவிட்டு அல்லது ஏமாற்றி விட்டு கடைகளுக்குச் சென்று விடுவது வழக்கம்.
ஆனால், குழந்தைகளையும் நம்முடன் மளிகைக் கடைகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்கள் மனதளவில் பெறும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து உளவியல் வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. குழந்தைகளை அதுபோன்ற கடைகளுக்கு நாம் கூட்டிச் செல்வதால் அவர்களின் பேச்சுத் திறனும் கணித அறிவும் வளர ஏதுவாக இருக்கும்.
2. நமது குடும்பத்திற்கு என்னென்ன தேவை என்பது போன்ற அறிவுத் திறமையும் முதிர்ச்சியும் அவர்களுக்கு ஏற்படும்.
3. குழந்தைகளை அடிக்கடி கடைகளுக்குச் கூட்டிச் செல்வதால், அவர்களின் கற்கும் திறன் கூடுவதாகக் கூறப்படுகிறது.
4. மற்றவர்களோடு குழந்தைகள் பேசும் வாய்ப்பு இதனால் அதிகரிப்பதால், அடுத்தவர்களிடம் சரளமாக உரையாடும் ஆற்றல் கூடுவதோடு, மற்றவர்களை மதிக்கும் பண்பையும் அவர்கள் அறிந்து கொள்ள உதவியாக உள்ளது.
5. குழந்தைகள் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பிறகு அந்தப் பொருள் பிடிக்கவில்லையென்றால், மீண்டும் கடை உரிமையாளரிடம் பேசி மாற்றிக்கொள்வது எப்படி என்பதையும் அறிந்துகொள்ளும் அறிவுத் திறன் ஏற்படும்.
6. ஒரு பொருளை எடுக்கும்பொழுது, குழந்தைகள் அதை சேதமில்லாமல் கையாளும் முறையை தெரிந்துகொள்ள வழி வகை செய்கிறது.
7. பல்வேறு கடைகளுக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்லும்போது அங்கு அவர்கள் மற்றவர்களிடம் உரையாடுகையில் அவர்களின் மொழி ஆற்றல் கூடுவதாகக் கூறப்படுகிறது.
8. பழ வகைகள், காய்கனிகள் ஆகியவற்றைத் குழந்தைகளே தேர்ந்தெடுக்கும்பொழுது, அவற்றின் தரம், நிறம் ஆகியவற்றை கடை உரிமையாளரிடம் பேசி அவர்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது.
9. நம் வீட்டுக் குழந்தைகள் அந்தக் கடைப் பொருட்களின் விலைகளைத் தெரிந்து கொள்வதோடு, வீட்டிற்குத் தேவையானவை எவை, தேவையில்லாதவை எவை என்பதை தெரிந்துகொள்வதோடு, பிற்காலத்தில் குடும்பத்தின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது எப்படி என்பதையும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.