
காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதோடு ஆரம்பிக்கும் நமது வாழ்க்கை, இரவில் தூங்கப் போவதற்கு முன்பு பல் தேய்ப்பதோடு அந்த நாள் முடிகிறது. ஆனால், பற்களை சுத்தப்படுத்தும் பற்பசை, நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு, அன்றாட வாழ்வில் பல அதிசயங்களைச் செய்கின்றன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. நகைகளை சுத்தம் செய்ய: தங்கம், வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய டூத் பேஸ்ட்டை தண்ணீரில் கலந்து நகைகளின் மீது தடவவும். பிறகு, நகைகளை காட்டன் துணி கொண்டு சுத்தம் செய்தால் நகைகள் பளபளக்கும்.
2. டைல்ஸ் சுத்தம் செய்ய: வீடு மற்றும் பாத்ரூமில் இருக்கும் டைல்ஸ்களை சுத்தம் செய்ய டூத் பேஸ்ட்டில் வெதுவெதுப்பான நீரைக் கலந்து, டைல்ஸ் மீது தடவி, சிறிது நேரம் கழித்து ஸ்க்ரப் மூலம் தேய்த்தால் டைல்ஸ் பளபளக்கும்.
3. துளைகளை அடைக்க: வீட்டின் சுவர்களில் உள்ள துளைகளில் டூத் பேஸ்ட் கொண்டு அடைத்தால், காய்ந்த பிறகு துளைகள் முழுமையாக மூடிவிடும்.
4. குழாயை சுத்தம் செய்ய: டூத் பேஸ்ட் மற்றும் வெள்ளை வினிகர் இரண்டையும் நன்கு கலந்து அழுக்காக இருக்கும் வீட்டுக் குழாயில் தடவி விட்டு, பிறகு ஸ்க்ரப் கொண்டு தேய்த்தால் குழாய் பளபளக்கும். வெள்ளை வினிகர் இல்லையெனில், எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம்.
5. கண்ணாடியை பளபளப்பாக்கும்: வீட்டில் இருக்கும் கண்ணாடி அழுக்காகவும், மங்கலாகவும் இருந்தால், அதனை சுத்தம் செய்ய ஒரு துணியில் டூத் பேஸ்ட் கொண்டு கண்ணாடியைத் தேய்க்கவும். பிறகு சுத்தமான துணியால் கண்ணாடியை துடைக்க கண்ணாடி பிரகாசிக்கும்.
6. பருக்கள் குணமாக: முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் டூத் பேஸ்ட்டை தடவி, இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு, காலை முகத்தை கழுவுங்கள். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
7. கைகளின் துர்நாற்றம் நீங்க: வாயில் துர்நாற்றம் வீசுவதை டூத் பேஸ்ட் தடுப்பது தெரியும். அசைவ உணவு ஏதாவது சாப்பிட்ட பிறகோ அல்லது வீடு மற்றும் வாகனங்களை சுத்தம் செய்த பிறகு கைகளில் அடிக்கும் நாற்றத்தை போக்க டூத் பேஸ்ட்டை கைகளில் தடவி, பின் கழுவினால் துர்நாற்றம் அடிக்காது.
8. கார் ஹெட்லைட்கள் சுத்தம் செய்யலாம்: கார் ஹெட்லைட்கள் சுத்தம் செய்ய ஒரு மென்மையான துணியில் டூத் பேஸ்ட் தடவி சுத்தம் செய்யுங்கள். பிறகு ஈரமான துணியைக் கொண்டு மீண்டும் சுத்தம் செய்தால், அவை பார்ப்பதற்கு புதிதாக இருக்கும்.
9. லிப்ஸ்டிக் கறையைப் போக்க: இதற்கு ஜெல் அல்லாத டூத் பேஸ்ட்டை ஒரு துணியில் தடவி தேய்க்கவும். பின் ஈரமான துணியில் மீண்டும் கழுவினால் கறை விரைவில் நீங்கிவிடும். இது லிப்ஸ்டிக் மட்டுமல்லாமல், மை, காபி கறைகளையும் நீக்கும்.
10. தடிப்புகளை குணமாக்கும்: தடிப்புகளால் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது டூத் பேஸ்ட்டை தடவி, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் எரிச்சல் நீங்கும். தடிப்புகள் விரைவில் குணமாகும்.
11. ஷூக்களை சுத்தம் செய்ய: ஷூக்களில் படிந்திருக்கும் விடாப்படியான கறைகளை சுத்தம் செய்வதற்கு டூத் பேஸ்ட்டை ஒரு துணியில் எடுத்து அதை கறை உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து ஈரமான துணி கொண்டு துடைத்தால், கறை நீங்கி ஷூ பார்ப்பதற்கு புதிதாக இருக்கும்.