வியர்வை என்றாலே நம்மில் பலருக்கும் அலர்ஜி. உடல் கசகசப்பு, துர்நாற்றம் என இவை எல்லாம் வேர்வையால் ஏற்படக்கூடியது என்பதற்காக எவ்வளவு தூரம் வேர்க்காமல் இருக்க வேண்டுமோ அவ்வளவு வியர்வையை வெளியேற்றாமல் இருப்பார்கள். இவை நன்மையா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. உடல் வியர்ப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. வியர்வை உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது: வியர்வையின் முதன்மைப் பணி உடல் குளிர்ச்சிக்கு உதவுவதாகும். வியர்வை என்பது வியர்வை சுரப்பிகளால் சருமத்தில் சுரக்கப்படுகிறது. அங்கு அது ஆவியாகி உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது. நீங்கள் வெப்பமான பகுதியில் வாழ்ந்தால் வியர்வை மூலம் இழக்கும் சக்தியை இழக்காமல் இருக்க நிறைய தண்ணீர் குடிப்பதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. வியர்க்கும்போது சருமம் பளபளக்கும்: உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இது உங்கள் சருமத்திற்கு உள்ளே இருந்து ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கிறது. வியர்வை உண்மையில் உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. ஆரோக்கியமான இரத்த ஓட்டம் சருமத்தின் செல்களை ஊட்டமளித்து ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது.
3. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: நீங்கள் வேலை செய்யும்போது வியர்க்க ஆரம்பிக்கும். அதிகமாக வியர்ப்பது கடினமாக உழைப்பதன் அறிகுறி. உடற்தகுதி உடையவர்களுக்கு அடிக்கடி மற்றும் விரைவில் வியர்வை வெளியாகும். இது நல்ல விஷயமே.
4. வியர்வை உடல் நச்சு நீக்குகிறது: உங்கள் உடலை சுத்தப்படுத்த மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று வியர்வை. வியர்வை உடலில் இருந்து உப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை அகற்ற உதவுகிறது. வியர்வை நச்சுகளை வெளியேற்றுவதற்கான உடலின் அங்கமாக செயல்படுகிறது. வியர்வை துளைகளைத் தடுத்து அதனால் முகப்பரு மற்றும் பிற சருமப் பிரச்னைகளை ஏற்படுத்தும் மாசுக்களிலிருந்து விடுபட வியர்வை உடலுக்கு உதவுகிறது.
5. சிறுநீரகக் கற்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது: உடற்பயிற்சி செய்வது அதிகப்படியான உப்பை வெளியேற்றவும், உங்கள் எலும்புகளின் கால்சியத்தை சரியான இடத்தில் வைத்திருக்கவும் உதவும். சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணமான உப்பு மற்றும் கால்சியம் சேர்வதை வியர்வை தடுக்கிறது. வியர்வை இயற்கையாகவே ஒருவர் அதிக தண்ணீர் உட்கொள்ள காரணமாகிறது. வியர்வையால் நமக்கு நன்மைகளே என்பதை நாம் உணர வேண்டும்.