குளிர் காலங்களில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு உஷ்ணம் குறைவது போல், வயதானவர்களின் எலும்புகள் ஆரோக்கியம் குறைந்து தினசரி வாழ்வில் பல சவால்களை சந்திக்கச் செய்கின்றன. குளிர்காலத்தில் சுற்றுப்புற சூடு குறைந்து எங்கும் குளிர்ச்சி பரவுகிறது. அப்போது வயதானவர்களின் மூட்டுக்களைச் சுற்றியுள்ள தசைகள் மற்றும் ஜவ்வுகள் இறுகி கடினத் தன்மை கொண்டு அசௌகரியங்களை உண்டுபண்ணும். அப்போது மூட்டுக்களில் வலியும் வீக்கமும் உண்டாகிறது.
ஏற்கெனவே ஆஸ்ட்டியோ ஆர்த்ரைடிஸ் நோய் உள்ளவர்களுக்கு குளிர் காலம் மிகக் கொடியதாகிவிடும். இந்த சீசனில் மூட்டுக்களின் உராய்வைத் தடுக்க உதவும் சினோவியல் (Synovial) என்ற திரவத்தின் அளவு குறையவும், அதன் செயல்பாடுகள் மந்த நிலையுறவும் செய்யும். இதனால் உண்டாகும் தசைகள் மற்றும் ஜவ்வுகளின் இறுக்கம் வலியையும் அசௌகரியங்களையும் அதிகரிக்கச் செய்யும்.
குளிர்காலங்களில் பகல் பொழுது குறைவாகவும், எப்பொழுதும் குளிர் அதிகமாகவும் இருப்பதால் வயதானவர்கள் அதிகமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிவிடுகின்றனர். இவ்வாறு செயல்பாடின்றி இருப்பதே அவர்களின் மூட்டு வலி அதிகரிக்கக் காரணமாகி விடுகிறது. கால நிலையில் திடீரென குளிர் அதிகரிப்பதும் (barometric pressure changes) மூட்டு வலி அதிகரிக்க மற்றொரு காரணமாகி விடுகிறது.
மூத்த குடிமக்களின் வேதனைகளையும் அசௌகரியங்களையும் குறைப்பதற்கான வழிமுறைகள்:
1. தினசரி கை, கால்களை நீட்டி மடக்குவது போன்ற எளிய பயிற்சிகளை வீட்டிற்குள்ளிருந்தே செய்யலாம். இது அவர்களின் மூட்டுக்களையும் தசைகளையும் பலமுடனும் இலகுவாகவும் வைக்க உதவும். ஆன் லைனில் பயிற்சியாளர் கற்றுத் தரும் யோகா, டை-ச்சி போன்றவை மற்றும் சுலபமான ஏரோபிக் பயிற்சிகளையும் செய்யலாம். இவை அனைத்தும் குறிப்பிட்ட அளவு நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வர உதவும்.
2. வெப்பம் தர உதவும் ஆடைகள், நீ ராப் (Knee Wrap), ப்ளாங்கெட் (Blanket) போன்றவற்றை உபயோகித்து உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்லாம். இதனால் இரத்த ஓட்டம் சீராகி வலி குறைய வாய்ப்புண்டாகும்.
3. பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் சேர்த்த ஜங்க் ஃபுட் போன்றவற்றைத் தவிர்த்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பச்சை இலைக் காய்கறிகள், நட்ஸ் ஆகியவற்றை உட்கொள்வது வலி குறைய உதவும். மேலும் இந்த உணவு முறை உடலின் வீக்கங்களைக் குறைக்கவும் செய்யும். அதிகளவு தண்ணீர் குடிப்பதும் மூட்டுக்களின் உராய்வை தடுத்து வலி குறைய உதவி புரியும்.
4. வலியுள்ள இடங்களில் வென்னீர் ஒத்தடம் அல்லது ஹீட்டிங் பாட் (heating pad) மூலம் மசாஜ் செய்வதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து வலி குறைய உதவும்.
மூத்த குடிமக்கள் மேலே கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றி, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மூட்டுக்களை ஆரோக்கியத்துடன் வைக்கவும், செயலாற்றும் விதத்தில் வைத்துப் பராமரித்துப் பாதுகாக்கவும் முடியும் என்பதில் சந்தேகமில்லை.