
நாம் எல்லோருமே இந்த வசனத்தை அடிக்கடி கேட்டிருப்போம். மிக அருமையான வசனம் இது. இந்த வசனத்தை உள்நோக்கி பார்த்தால் வெவ்வேறு விதங்களில் இதன் பொருள் நமக்குக் கிடைக்கும். அது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கட்டியவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு பல வீடு என்பதற்கான பொதுவான அர்த்தம் என்னவென்றால் சொந்த வீடு கட்டியவருக்கு அந்த ஒரு வீடுதான் சொந்தமாகும். ஆனால், வீடு கட்டாதவன் தன் இஷ்டம் போல் பல வீடுகளுக்கு மாறிக் கொண்டே இருக்கலாம். சொந்த வீடு கட்டியவனுக்கு அக்கம் பக்கத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் அல்லது பிடிக்கவில்லை என்றாலும் அதே வீட்டில்தான் இருக்க வேண்டும். வேறு வழி எதுவுமில்லை. ஆனால், வீடு கட்டாதவனுக்கு பல வழிகள் இருக்கின்றன.
2. ஒரு வீடு கட்டியவன் நிம்மதியாக தனது வீட்டில் தன் இஷ்டப்படி இருந்து கொள்ளலாம். ஆனால், வாடகை வீட்டில் இருப்பவன் தமது இஷ்டபடி எதையும் செய்ய முடியாது. ஆகவே, பல வீடுகளுக்கு அடிக்கடி மாற்றிக் கொண்டு குடித்தனம் புக வேண்டியிருக்கும்.
3. மாணவர்கள் தனக்கென ஒரு வட்டத்தை நியமித்து அதற்குள்ளேயே இருந்து கொண்டு ஏதாவது ஒரு குறிப்பிட்ட கல்வியை மட்டும் பயின்றால் அந்த ஒரு துறையில் மட்டும்தான் முன்னேற முடியும். மாறாக, ஒரு வட்டத்தை நியமிக்காமல் பலவிதமான கல்வியையும் பயிற்சியையும் பயின்றால் பலவிதமான துறையில் திறன் பெற்று மிகுந்த முன்னேற்றத்தை அடையலாம்.
4. ஒரு ஒழுக்கமான கட்டத்தை தனக்கென அமைத்துக்கொண்டு ஒழுக்கமாக இருப்பவனுக்கு எப்போதாவது ஏதாவது ஒருசில பிரச்னைகளையே சந்திக்க நேரிடும். அவ்வாறு ஒரு ஒழுக்கமான கட்டத்தை தனக்கென அமைத்து கொள்ளாதவன் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகளை அடிக்கடி சந்திக்க நேரிடும்.
5. கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டை தன்னோடு கட்டி வைத்திருப்பவனுக்கு வாழ்க்கையில் எப்போதாவது ஒரு தடவை வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கும். ஆனால், இவை மூன்றையும் கட்டுக்கோப்பில் வைக்காதவனுக்கு பல முறை இடையூறுகள் உண்டாகி இங்கும். இதனால் இங்கும் அங்குமாக திரிவான்.
6. ஒருவன் கோபத்தையும் முரட்டுத் தனத்தையும் தன்னோடு கட்டி வைத்துக்கொண்டால் அவனுக்கு ஒரு நண்பன் கிடைப்பதே அரிது. ஆனால், இக்குணத்தை தன்னோடு கட்டாதவனுக்கு பல நண்பர்கள் கிடைப்பார்கள்.
7. சுயக் கட்டுப்பாடோடு மனதை வைத்திருப்பவன், சில சமயம் தெரியாமல் தவறு செய்தால் திருத்திக்கொள்ள ஒரு அவகாசம் மட்டுமே போதுமானது. அவ்வாறு மனதை கட்டாதவனுக்கு திருந்த பல அவகாசங்கள் தேவைப்படும்.
8. ஆசையை அடக்கினால் ஒரு துன்பமும் வராது. அதை அடக்காதவனுக்கு பல துன்பங்கள் வரும்.
9. அடைபட்ட நதிக்கு ஒரு அணை போதும். அடைபடாத நதியை கட்டுப்படுத்த பல அணைகளைக் கட்ட வேண்டும்.
10. பெரியவர்களுக்குக் கட்டுப்படுபவனுக்கு ஒரு சொல் போதும், கட்டுப்படாதவனை சரி செய்ய பல சொற்களை, அதுவும் பல நாட்களுக்கு சொல்ல வேண்டி இருக்கும்.