பொதுவாக காலை உணவு என்பது ராஜா போன்றது. இரவு தூக்கத்திற்குப் பின் அதிக இடைவெளி விட்டுத்தான் காலை உணவை உட்கொள்கிறோம். ஆதலால் காலை உணவை தவிர்க்கக்கூடாது. இது ஆரோக்கிய கேடிற்கு வழிவகுக்கும். குறிப்பாக, பெண்கள் காலையில் சரிவிகித உணவுதான் சாப்பிட வேண்டும். காலையில் அதிக கலோரிகள் நிறைந்த உணவை உட்கொள்ளும்பொழுது உடல் சுறுசுறுப்பை இழக்கிறது. அதனால் அந்த நாளுக்கான வேலைகள் கேள்விக்குறியாகி விடுகின்றன. பெண்கள் காலையில் சாப்பிடக் கூடாத 5 உணவு வகைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. சர்க்கரை உணவு: காலை நேரத்தில் இனிப்பு கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பிஸ்கட், ஸ்வீட்ஸ் போன்ற இனிப்பு கலந்த பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
2. எண்ணெய் இல்லாத உணவுகள்: காலை நேர உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆதலால் எண்ணெய் நிறைந்த உணவுகள்,பதப்படுத்தபட்ட உணவுகள், வறுத்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவதே காலை நேரத்திற்கு சிறந்தது.
3. தயிர்: காலை நேரத்தில் தயிர் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. காலை நேர புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் குறைக்கும் தன்மை கொண்டவையாக தயிர் பொருட்கள் இருக்கின்றன.
4. மைதா: காலை நேரத்தில் மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடவே கூடாது.இதனால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்படக் கூடும். மைதாவில் செய்யப்பட்ட பரோட்டா, பிஸ்கட்டுகள், நூடுல்ஸ் போன்றவை வயிற்றுப் பிரச்னையை ஏற்படுத்தி அன்றைய நாளை மோசமானதாக மாற்றி விடுகின்றன.
5. சிட்ரஸ் பழங்கள்: காலையில் வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை பழம் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், வாயுத் தொல்லை, வயிறு எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும். அதனால் இந்த வகை பழங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
பொதுவாக, காலையில் சத்து மிகுந்த ஆரோக்கிய உணவு வகைகளை சாப்பிட்டு, மேற்கூறிய உணவுகளை தவிர்த்து பெண்கள் அந்த நாளை இனிய நாளாக மாற்றிக் கொள்ளுங்கள்.