
சில தாவர வேர்கள் நமக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என்று கூறப்படுகிறது. குப்பைமேனி வேர், வெள்ளை எருக்கன் வேர் மற்றும் துளசி வேர் போன்றவற்றை மக்கள் அதிர்ஷ்டத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் 6 அற்புத வேர்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. குப்பைமேனி வேர்: குப்பைமேனியின் வேர்களை குளிக்கும் நீரில் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் குளித்து வர தீய சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது. குப்பைமேனி வேர் துர்சக்திகளை விலக்கி, எதிர்மறை ஆற்றல்களை நீக்கும் தன்மை கொண்டது. இதை வீட்டில் வைக்க நிதி நிலைமை மேம்படுவதாகவும், பணக் கஷ்டம் தீருவதாகவும் நம்பப்படுகிறது.
2. வெள்ளை எருக்கன் வேர்: வெள்ளெருக்கு வேரில் விநாயகர் செய்து அதை வீட்டில் வைத்து வழிபட, அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் செல்வமும், அதிர்ஷ்டமும் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. வெள்ளை எருக்கன் வேர் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் என்றும், அவற்றை வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவது நல்ல பலன்களைத் தரும் என்றும் கருதப்படுகிறது. வெள்ளை எருக்கன் வேரை மஞ்சள் துணியில் கட்டி வீட்டில் வைத்திருக்க அதிர்ஷ்டம் உண்டாகும் என்றும், திருமணத் தடை விலகும், செல்வம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.
3. துளசி வேர்: துளசி வேர் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்றும், எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றும் சக்தி கொண்டதும் என்று நம்பப்படுகிறது. துளசி வேர் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்றும், புனிதமானது என்றும் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் துளசி வேர் மிகவும் மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது. துளசி வேரை தலைகீழாக வீட்டு வாசலில் தொங்கவிட அதிர்ஷ்டம் வரும் என்று சிலர் கருதுகிறார்கள். இது நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். துளசி வேரில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம். இது தடைகளை நீக்கும் தன்மை கொண்டது.
4. வெட்டிவேர்: இயற்கையாக நல்ல வாசம் தரக்கூடிய ஒரு வேர் எதுவென்றால் அது வெட்டிவேராகத்தான் இருக்க முடியும். அது நம் வீட்டில் இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் வரும் என்று நம்பப்படுகிறது. வாசம் மிகுந்த இடத்தில் மகாலக்ஷ்மி குடியிருப்பாள். வெட்டிவேர் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் விட்டு அதில் ஒரு எலுமிச்சை பழத்தையும் போட்டு இந்த வெட்டிவேரையும் சிறிதளவு அந்த தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். இந்த தண்ணீரையும், எலுமிச்சம் பழத்தையும் வாரத்திற்கு ஒரு முறை மாற்றவும். தண்ணீரில் இருக்கும் வெட்டிவேர் கெட்டுப் போவதில்லை. எனவே, இதனை மாதத்திற்கு ஒரு முறை மாற்றினாலே போதும். வெட்டிவேர் என்பது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் மூலிகை வேராகக் கருதப்படுகிறது. இது பண வரவை அதிகரிக்கவும், வாழ்க்கை முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் உதவும். இந்த வேர்களை பயன்படுத்தி வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் பெறலாம்.
5. நாயுருவி வேர்: நாயுருவிச் செடியின் வேர் நமக்கு வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது. இதற்கான விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி நம் வீட்டுத் தொட்டியில் போட்டால் கூட எளிதில் வளர்ந்து விடும். இந்த செடியின் வேரை அறுபடாமல் வேரோடு பிடுங்கி, வேர் பகுதியை மட்டும் தனியாக உடைத்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவும். பின்பு அதில் சிறிது தண்ணீரில் குழைத்த மஞ்சளைத் தடவி தாயத்தினுள் போட்டு மூடி கையில் அல்லது கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். இதற்கு கருப்பு அல்லது சிவப்பு கயிறை பயன்படுத்தலாம். இதன் மூலம் பண வரவு அதிகரிக்கும்; தொழிலில் வெற்றியும் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.
6. நெல்லி மர வேர்: நெல்லி மர வேர் அதிர்ஷ்டத்தை தரும் என்று கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நெல்லி மரம் செல்வத்தையும், செழிப்பையும் ஈர்க்கும் என்றும், வீட்டில் துர்சக்திகளையும், கண் திருஷ்டிகளையும் போக்கும் என்றும் நம்பப்படுகிறது. நெல்லி மரத்தை வீட்டில் வளர்க்க நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அம்ல நவமி நாளில் நெல்லி மரத்தை வழிபடுவது சிறப்பு. இது மகாலக்ஷ்மியின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.