
அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீடும் தனித்தனியாக இருக்கும். அப்படி இருக்கும் வீட்டின் கொல்லைப்புறத்தில் (பின்புறம்) துவைப்பதற்காகவே அமைக்கப்பட்ட கருங்கல் கம்பீரமாக வீற்றிருக்கும். கூட்டுக் குடும்பப் பெண்கள் துணிகளை ஊற வைத்து அரட்டை அடித்தபடி அதை அடித்து துவைத்து வெயிலில் காயவைத்து எடுப்பது ஒரு உடற்பயிற்சி கலையாகவே அன்று பார்க்கப்பட்டது.
ஆனால் இன்றோ, அது ஒரு கடினமான வேலையாகி விட்டது. இருக்கும் நேரத்தில் துணி துவைத்து விட்டு பணிக்குச் செல்வது என்றால் எவரால் முடியும்? இப்போதெல்லாம் தனி வீடுகளில் பின்புறங்களும் இல்லை, அதில் இருக்கும் துவைக்கும் கற்களும் பெரும்பாலும் இல்லை. கிராமங்களிலும் சிறு நகரங்களில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் துவைக்கும் கல் இப்போது காட்சிப் பொருளாகவே உள்ளது. காரணம், அறிவியல் கண்டுபிடிப்பு சாதனமான துவைக்கும் இயந்திரங்கள் எனப்படும் வாஷிங் மெஷின் (Washing Machine).
எட்டுக்கு எட்டடி இருக்கும் சிறு வீடுகளிலும் நிச்சயமாக இருக்கும் வீட்டு உபயோக சாதனமான வாஷிங் மெஷின்களை அதன் வேலை முடிந்ததும் நமது கவனத்தில் இருந்து அப்புறப்படுத்துகிறோம். ஆனால், மாதம் ஒரு முறையாவது அதனை அக்கறையுடன் சுத்தம் செய்து பராமரித்தால் அதுவும் நீண்ட நாட்கள் உங்களுக்காக உழைக்கும். வாஷிங் மிஷினை சுத்தம் செய்ய எளிமையான வழிகளை இந்தப் பதிவில் காண்போம்.
வாஷிங் மெஷின்களை ஏன் சுத்தம் செய்ய வேண்டும்?
வாஷிங் மெஷின்களில் ஏற்படும் விரும்பத்தகாத துர்நாற்றங்களைத் தடுக்க இந்த சுத்தம் உதவுகிறது. முறைப்படி மாதந்தோறும் சுத்தம் செய்வது அதன் செயல்திறனைப் பராமரிக்க உதவுகிறது. வாஷிங் மெஷின் உள்ளே கண்ணுக்குத் தெரியாமல் வளரும் கவனிக்கப்படாத பூஞ்சைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. தவறுதலாக அதில் மாட்டி இறக்கும் சிறு உயிரினங்களை கவனித்து நீக்கும் வாய்ப்பு உண்டு. மொத்தத்தில் வாஷிங் மெஷின் மீதான முறையான பராமரிப்பு அதன் ஆயுளை நீட்டித்து நமக்கு உதவுவதாக அமையும். சிரமம் பாராமல் சிறிது நேரம் ஒதுக்கி சுத்தம் செய்யும்போது மெஷின் பழுதாகாமல் இருக்கும். நமது பணமும் வீணாகாது.
எப்படி சுத்தம் செய்யலாம்?
துர்நாற்றங்கள் மற்றும் வாஷிங் மெஷினில் படிந்துள்ள கசடுகளை அகற்ற 1 முதல் 2 கப் வெள்ளை வினிகரும் பேக்கிங் சோடாவும் முதல் சாய்ஸ். 2 கப் வினிகரை வாஷிங் மெஷின் டிரம்மில் ஊற்றி ஒரு முறை அதிவேகத்தில் இயக்கவும். அதையடுத்து, அரை கப் பேக்கிங் சோடாவை சேர்த்து, அதேபோல இயக்கி சூடான நீர் சுழற்சி வசதி இருந்தால் அதைப் பயன்படுத்தி மீண்டும் இயக்கவும். வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவால் வாஷிங் மெஷின் உள்ளிருக்கும் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் நீங்கி துர்நாற்றம் அகலும்.
பூஞ்சை காளான்களைத் தடுக்க அது குடியிருக்கும் கேஸ்கெட் (ரப்பர் சீல்) மற்றும் டிரம்மை தண்ணீர் மற்றும் வினிகர் கலவையால் இரு தினங்களுக்கு ஒரு முறை துடைக்கவும். சூடான நீர் கொண்டு சுழற்சியை இயக்கி அன்றாடம் சுத்தம் செய்யலாம். கிருமி நாசினி மற்றும் ப்ளீச்சிங் செயலுக்கு உதவும் வேதியியல் சேர்மமான ஹைட்ரஜன் பெராக்சைடு (H2O2) எனும் திரவத்தை தண்ணீரில் கலந்து, அதில் காட்டன் துணியை நனைத்து வாஷிங் மெஷினின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் நன்கு துடைக்க வேண்டும். இதனால் பாசி, உப்பு நீரால் ஏற்படும் கறைகள், அழுக்கு போன்ற அனைத்தும் நீங்கி சுத்தமாக இருக்கும்.
முக்கியமாக, துவைத்து முடித்ததும் உடனே மூடி விடாமல் மூடியைத் திறந்து வைக்க வேண்டும். இதனால் மிஷினில் படிந்த நீர் உலரவும் இதனால் ஈரப்பதம் குவிவதைத் தடுக்கவும் உதவும். ஆனால், வாஷிங் மெஷினில் துணிகளைப் போடுவதிலும் கவனம் தேவை. முதலில், துணிகளை வாஷிங் மெஷினில் போடுவதற்கு முன்பு, துணிகளில் உள்ள பாக்கெட்டுகள் மற்றும் ஜிப்களை சரியாக மூட வேண்டும். குழந்தைகள் சீருடை மற்றும் ஆண்களின் சட்டையில் உள்ள காகிதங்கள், காசுகள் போன்ற பொருள்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கற்கள் வேலை செய்த (ஆரி வொர்க்) துணிகளைப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வாஷிங் மெஷின் கொள்ளும் அளவுக்கு மட்டுமே துணிகளை நிரப்ப வேண்டும். கையேட்டில் உள்ள அளவில் சோப்பு திரவத்தை சேர்க்க வேண்டும். இப்படிப் பல முறைகளுடன் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் சுத்தம் செய்வதைப் பழக்கமாக்கிக் கொண்டால் நல்ல பயன் பெறலாம்.