
கண்ணாடி பார்க்காதவர் எவரேனும் உண்டா? அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு வேளையாவது கண்ணாடி பார்க்கிறோம். நடிகர், நடிகையர்களுக்கு கண்ணாடி தான் பிரதானம். அதற்கென்றே தனி நபர்களை தன்னுடனே வைத்து கொள்கிறார்கள்.
கண்ணாடி சுக்ர கிரகத்தின் அம்சமாகும். சுக்ரன் என்றாலே மகாலட்சுமி தெய்வத்தைக் குறிக்கும். கலைஞர்கள் அனைவருமே சுக்ரனின் ஆதிக்கத்திற்குள் அடங்கியவர்கள். அப்படிப்பட்ட கண்ணாடியில் அழகிகள் மட்டுமல்ல நாமும் தான் நம்மை நாளும் கண்டு ரசிக்கிறோம்.
நம் தலையின் ஓரத்தில் ஒரு வெள்ளை முடி இருந்தாலும் காட்டி கொடுக்கிறது. நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படியே பிரதிபலிக்கிற குணமுள்ளது கண்ணாடியாகும். நடிகர் திலகம் நடிப்பதற்கு முன்பு நிலைக்கண்ணாடி முன்பு நின்று ஒத்திகைப் பார்த்து கொள்வாராம். அவருக்கு திருப்தியாகும் வரை அந்த கண்ணாடியை விட்டு நகர மாட்டாராம்.
அத்தகைய கண்ணாடியை நம் வீட்டில் அலங்காரத்திற்கு மட்டுமல்லாது, அழகு பார்ப்பதற்கும் பொருத்தி வைத்து கொள்கிறோம். அப்படி பொருத்தி வைப்பதில் தான் இருக்கிறது சூட்சுமம். வாஸ்து நிபுணர்கள் சில டிப்ஸ் வழங்கியுள்ளனர். அவற்றைப் பார்த்து விட்டு கண்ணாடி பார்க்கலாம் தானே வாங்க பார்க்கலாம்.. ஸாரி... முதல்ல படிக்கலாம்.
கிழக்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவர்களில் கண்ணாடி பொருத்தி வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துகிறதாம். கிழக்கு திசை என்பது காலை கதிரவன் எழும் திசையாகும். அது ஓர் அழகிய ஆரம்பத்தின் அறிகுறியாகும். வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திசையாகவும் கருதப்படுகிறது. சக்தியாற்றலின் திசையாகவும் கிழக்கு கருதப்படுகிறது.
வடக்கு திசை என்பது செல்வ வளத்தை குறிக்கிறது. செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் திசை வடக்கு ஆகும். எனவே, வடக்கு திசையில் உள்ள சுவற்றில் கண்ணாடி பொருத்தி வைப்பது செல்வ வளத்திற்கு சிறப்பானதாக கருதப்படுகிறது. சாப்பாட்டு மேசைக்கு எதிரில் கண்ணாடி பொருத்தலாமா?
தாராளமாக பொருத்தலாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். நம் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து உணவு உண்ணும் இடம். இந்த இடத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதால். அந்த மகிழ்ச்சி கண்ணாடியில் பட்டு பிரதிபலிப்பது. மகிழ்ச்சியை இரட்டிப்பாக உருவாக்குகிறதாம்.
கண்ணாடி தேர்விடல்
வட்ட வடிவ அல்லது ஓவல் வடிவ கண்ணாடிகள் ஒழுங்கற்ற தன்மையில் இருப்பதால், குழப்பமான மனநிலையை உருவாக்கி மன அமைதிக்கு இடையூறாக அமையுமாம். சதுர வடிவம் அல்லது செவ்வக வடிவ கண்ணாடிகள் ஒழுங்குள்ள தன்மையில் அமையப்பெற்றுள்ளதால், அவை சக்தியூட்டலை ஒழுங்குபடுத்தி மனஅமைதியை ஏற்படுத்துகிறதாம்.
படுக்கையறையில் கண்ணாடி?
படுக்கையறையில் தெற்கு தென்கிழக்கு திசை என்பது பூமியின் ஆகர்ண சக்தியின் இருப்பிடமாம். கண்ணாடி நீரின் ஆகர்ண சக்தியாம். ஆகவே, எதிரும் புதிருமாக அமைந்து விடுவதால் மன அமைதி என்பது இல்லாமல் குழப்பமான நிலை ஏற்படுமாம். எனவே, படுக்கையறையில் கண்ணாடியை தவிர்ப்பது நலமே என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
பணப்பெட்டி அல்லது பணம் வைக்கும் அலமாரியில் கண்ணாடி?
பணப்பெட்டி அல்லது பணம் வைக்கும் அலமாரியில், தாராளமாக கண்ணாடி வைக்கலாம் என்கிறார்கள். அந்த இடத்தில வைப்பது செல்வ வளத்தை இரட்டிப்பாக ஆக்கும் வல்லமை ஆற்றல் ஏற்படுகிறதாம். ஆனால், அந்த இடத்தில் உடைந்த அல்லது சேதமடைந்த கண்ணாடியை வைப்பது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துகிறதாம். எனவே, சேதமடைநத கண்ணாடி இருந்தால் உடன் அப்புறப்படுத்திவிடுவது நல்லது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
வாஸ்துபடி கண்ணாடி வையுங்கள்... உங்கள் அழகை நீங்களே ரசியுங்களேன்.