ஹோட்டல் ரூம், PG, வாடகை வீடு எனத் தனியாக தங்கியிருக்கும்போது நம் ரூமில் ரகசிய கேமரா (hidden camera) இருக்குமோ என்ற பயம் இருக்கும். இன்றைய டிஜிட்டல் உலகில், மைக்ரோ சைஸ் கேமராக்களை எளிதாக வாங்கி மறைத்து வைத்துக் கொள்ள முடியும். இந்த கேமராக்கள் நம்மை அறியாமலேயே நம் தனியுரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, ரூமில் ரகசிய கேமரா (hidden camera) இருக்கிறதா என கண்டறிவது எப்படி? என்று பார்ப்போம்.
1. அறையை நன்கு கவனியுங்கள்:
முதலில், நீங்கள் அறைக்குள் நுழைந்ததும் சுற்றுமுற்றும் கவனமாகப் பாருங்கள். அறையில் உள்ள பொருட்கள், அலாரம், கடிகாரம், சுவிட்ச் போர்டு, சுவரில் மாட்டி இருக்கின்ற பெயிண்டிங்ஸ் அல்லது போட்டோஸ் மற்றும் கண்ணாடிகள் போன்றவற்றை உற்று நோக்குங்கள். ஏதாவது ஒரு பொருள் வழக்கத்திற்கு மாறாக ஒரு வினோதமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தால், அதை இன்னும் நெருக்கமாகச் சோதித்துப் பாருங்கள்.
சில சமயங்களில், நாம் தினமும் பார்க்கும் அலாரம் கடிகாரம் அல்லது சார்ஜர் போன்ற பொருட்களுக்குள் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்படலாம்.
2. வைஃபை நெட்வொர்க்கை சோதியுங்கள்:
பெரும்பாலான ரகசிய கேமராக்கள் வைஃபை மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். உங்கள் போனில் வைஃபை அமைப்புக்குச் சென்று, அந்த நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் பட்டியலைப் பாருங்கள். அதில், உங்களுக்குத் தெரியாத, வினோதமான குறியீடு கொண்ட சாதனம் ஏதேனும் இருந்தால், அது ரகசிய கேமராவாக இருக்கலாம். இதற்கு நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் பட்டியலைக் காட்டும் பல செயலிகளும் கிடைக்கின்றன, அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
3. டார்ச் லைட்டை பயன்படுத்துங்கள்:
அறையில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, உங்கள் போன் அல்லது தனியான டார்ச் லைட்டைப் பயன்படுத்தி அறையைச் சுற்றும்முற்றும் கவனமாகத் தேடுங்கள். ரகசிய கேமராக்களின் லென்ஸிலிருந்து சில சமயங்களில் ஒரு சிறிய ஒளிக்கீற்று தெரியும். குறிப்பாக, கண்ணாடிகள், ஏர் வென்ட்கள் மற்றும் அறையின் மூலைகளை டார்ச் அடித்து கவனமாகச் சரிபார்க்கவும்.
4. கண்ணாடியை நெருக்கமாகச் சரிபார்க்கவும்:
பல நேரங்களில், ரகசிய கேமராக்கள் (hidden camera) கண்ணாடிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும். அதைக் கண்டறிய, கண்ணாடியின் மேற்பரப்பில் உங்கள் விரலை வையுங்கள். உங்கள் விரலுக்கும் அதன் பிம்பத்திற்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருந்தால், அந்தக் கண்ணாடி சாதாரணமானது. ஆனால், இடைவெளி இல்லை என்றால், அது இருபக்கக் கண்ணாடியாக (Two-way mirror) இருக்க வாய்ப்புள்ளது. அதன் பின்னால் கேமரா இருக்கலாம்.
5. போன் கேமராவை பயன்படுத்துங்கள்:
சில ரகசிய கேமராக்கள் இரவில் பார்க்க அகச்சிவப்பு (infrared) ஒளியைப் பயன்படுத்துகின்றன. இதைக் கண்டறிய, இருண்ட அறையை உங்கள் போன் கேமராவைக் கொண்டு சோதியுங்கள். கேமரா லென்ஸில் ஏதேனும் ஒரு சிறிய ஒளி தெரிவது போல இருந்தால், அந்த இடத்தைப் பாதுகாப்பாகச் சோதித்துப் பாருங்கள்.
6. ரேடியோ ஃப்ரீக்வென்சி டிடெக்டரைப் பயன்படுத்துங்கள்:
ரேடியோ ஃப்ரீக்வென்சி டிடெக்டர் (Radio frequency detector) கருவியை ஆன்லைனில் வாங்கலாம். இந்தக் கருவி ரகசிய கேமராக்கள் மற்றும் மைக்ரோபோன்களில் இருந்து வரும் சிக்னல்களைக் கண்டறியும். அறையில் மெதுவாக இந்தக் கருவியை நகர்த்திச் செல்லும் போது, அது பீப் சத்தம் எழுப்பினால் அல்லது ஒளி மின்னினால், அந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய சாதனம் இருக்கக்கூடும்.
இனிமேல் இந்த 6 சூப்பர் டிப்ஸை ஃபாலோ பண்ணி, நீங்கள் எங்கு சென்றாலும் சேஃப்டியாக இருக்கலாம்.