
பறப்பதைவிட ரயில்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயண வழி. மக்கள் ரயில் பயணங்களில், அதுவும் ஜன்னலோர சீட்டு கிடைத்துவிட்டால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. ரயில் பயணங்களில் போக்குவரத்து நெரிசல்களைப் பற்றிய கவலை இல்லை. விரும்பிய புத்தகங்களைப் படிக்கலாம், அக்கம்பக்க பயணிகளுடன் சுவாரஸ்யமாக உரையாடலாம். வண்டிகள் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் பொழுது டீ, காப்பி போன்ற லாகிரி வஸ்துக்களின் விற்பனை உயர்ந்த ஸ்தாயியில் இருக்கும் சத்தங்களை ரசிக்கலாம். வழி நெடுக ஆடம்பரமான இடங்களையும், அமைதியான கிராம சூழல்களையும் ரசிக்கலாம்.
ரயில் பயணத்தின் சுவாரசியங்கள்:
ரயில் பயணம் எப்போதுமே சுவாரசியங்கள் நிரம்பியதுதான். பயணத்தின் பொழுது வாழ்க்கையின் எல்லா தரப்பு மக்களையும் காணமுடியும். வசதி உள்ளவர், வசதியற்றவர் என எல்லா தளங்களிலும் வாழும் மனிதர்களை சந்திக்க முடியும். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லா வகையான வயதுக்காரர்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும்.
குறுகிய பயணமோ நீண்ட தூர பயணமோ எதுவாக இருந்தாலும் ரயில் பயணங்கள் ரசிக்க தக்கவை. தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள அழகிய இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியும். மலைகள், ஆறுகள், பசுமையான வயல்வெளிகள் போன்றவை நம் கண்களுக்கு விருந்தளிக்கும்.
ரயில் பயணம் அமைதியானது. ரயிலின் மெதுவான அசைவு பயணிகளின் மனதிற்கு நிம்மதியைத் தருகிறது. நீண்ட தூர பயணங்களில் மற்ற பயணிகளுடன் பழகவும், புதிய விஷயங்களை தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைப்பதுடன் பயணத்தை சுவாரஸ்யமாகவும் ஆக்கும்.
ரயில் நிலையத்தின் சலசலப்பும், பலவிதமான மனிதர்கள் பல்வேறு மொழிகளில் பேசும் சத்தமும், கனத்த குரலில் அறிவிப்பாளர்களின் பல மொழிகளில் அறிவிப்பு பேச்சும் நமக்கு தனிப்பட்ட அனுபவத்தைத்தரும். ரயில் பயணம், விமானம் அல்லது பேருந்து பயணத்தைவிட மலிவானது. நீண்ட தூர பயணங்களுக்கு வசதியாகவும் உள்ளது.
பயணிகள் ஏன் இன்னும் ரயில்களால் ஈர்க்கப் படுகிறார்கள் தெரியுமா?
நிலப்பரப்புகளை-பாலைவனங்கள் மற்றும் காடுகள் முதல் மலைகள் வரை இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை அனுபவிக்க முடியும்.
பட்ஜெட்டுக்கு ஏற்ற பயணமாக இருக்கிறது.
ரயில்களில் ஈ கேட்டரிங் சேவைகளின் உதவியுடன் ரயிலில் உணவை ஆர்டர் செய்வது மிகவும் எளிதானது மற்றும் வசதியானது. ஹைதராபாத் பிரியாணியின் நறுமண சுவை, மும்பையின் வடா பாவ், குஜராத்தின் ஆடம்பரமான தாலிகள் வரை உணவு விநியோக செயலியில் இருந்து ஆர்டர் செய்வதன் மூலம் வெவ்வேறு உணவு வகைகளை ருசிக்க முடியும்.
ரயில் பயணங்கள் மிகவும் கவர்ச்சிகரமானது. ஒரு வசதியான பயணத்தை அனுபவிக்க விரும்பினால் ரயில் பயணங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். பெரிய மற்றும் விசாலமான பெர்த்கள், உயர் தொழில்நுட்ப வசதிகள், நீண்ட அகலமான இருக்கைகள், மின் கேட்டரிங் சேவைகள் என ரயில் பயணத்தை சுவாரஸ்யமாக்குகிறது. நாட்டில் அதிகப்படியான மக்களால் விரும்பப்படும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து உள்ளது. தொலைதூரம் செல்ல விரும்புபவர்களுக்கு ரயில் பயணம்தான் முதல் விருப்பமாக உள்ளது.