பழக்கங்களால் சூழ்ந்ததுதான் வாழ்க்கை என்றால் மிகையாகாது. நம் அன்றாட வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையைச் செய்யும்பொழுதும் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் செய்தோமானால் அதற்குப் பழகி விடுவோம். அதன் பிறகு செய்யும் வேலைகள் சிறப்பாக இருக்கும். அந்த வேலையைச் செய்வதும் எளிதாக மாறிவிடும். இதனால் குழப்பம் மற்றும் பதற்றம் அடையாமல் இருக்கலாம். அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
அதிகாலையில் கண் விழித்தல்: அதிகாலையில் கண் விழித்தோமானால் குறிப்பிட்ட நேரங்களில் அந்தந்த வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுப்பதற்கு நீண்ட நேரம் கிடைக்கும். ஒட்டுமொத்த நாளுக்கான திட்டமிடல் மேற்கொள்வதற்கும், இலக்குகளின் மீது கவனம் செலுத்துவதற்கும் அதிக நேரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அவற்றை நாம் விரும்பும்படி பயனுள்ள வகையில் செலவழிக்கலாம்.
திட்டமிடலை பட்டியலிடுதல்: எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும், திட்டமிடுவதாக இருந்தாலும் அதுகுறித்த விஷயங்களை நன்றாகத் தீர்மானித்து முடிவெடுத்து வைத்திருக்க வேண்டும். எளிமையாக முடிக்கும் பணிகள், விரைவாக, அவசரமாக முடிக்கும் வேலை, கடினமான பணிகளுக்கு என்று அதிகமான நேரத்தை செலவிடுவது போன்றவற்றை செய்வதற்குத் திட்டமிடுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், வெளியில் எங்காவது செல்ல வேண்டுமென்றால், யார் வீட்டுக்காவது செல்ல வேண்டும் என்றால் அதற்கும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தால் சென்று வர வசதியாக இருக்கும். இதற்கு அவரவர் வீட்டிலும் நாம் விசிட் செய்வதற்கு தகுந்த நேரத்தை கேட்டு வைத்திருப்பது நம் மீது நல்ல மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
ஆனந்தமாக இருத்தல்: அந்தந்த பொழுதை ஆனந்தமாகக் கழிக்கக் கற்றுக் கொண்டோமானால் எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருக்காது. இன்று போல் நாளை இருக்கும் என்ற எண்ணம் ஏற்படும். இதனால் மனதில் எந்தவிதமான சங்கடங்களும் தோன்றாமல் எதிர்ப்படுவோரிடம் சின்ன சிரிப்புடன் இயல்பாகப் பேசி, சந்தோஷமாக நேரத்தைக் கழிக்க முடியும்.
சரியாக அமர்தல்: நாம் மற்றவர்கள் முன்னிலையில் அமரும்போது முதுகு பகுதி நேர் நிலையிலும் தோள்கள் தளர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். அப்படி உடல் தோரணையை சரியாகப் பின்பற்றுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பலன் அளிக்கும். அதேபோல், புன் சிரிப்புடன் ஒருவரின் கண்களைப் பார்த்து பேசும்பொழுது நம் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். அது நமக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். இந்தத் தோற்றம் மற்றவர்களிடம் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தி, அவர்களையும் இந்த வழிக்குக் கொண்டு வரச் செய்யும்.
செவிக்கு உணவு: தினசரி சிறிது நேரம் படிப்பது, மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது, வித்தியாசமாகப் பார்த்த நிகழ்வுகளை அசைபோடுவது போன்றவற்றை பின்பற்றினால் அவை நல்ல கருத்துக்களை போதிப்பதோடு, நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். எண்ணம் சரியாக அமைந்தால் செய்யும் செயல் அத்தனையிலும் வெற்றி பெற முடியும். சில சமயங்களில் கால தாமதம் ஆனால் கூட கட்டாயமாக நினைத்தது நிறைவேறும்.
உணர்வுகளை மதித்தல்: பிறர் செய்யும் உதவிகளுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்லுதல், செய்த நன்றியை மறக்காமல் செயல்படுதல், உதவி தேவைப்படுவோருக்கு குறிப்பறிந்து தக்க சமயத்தில் உதவுதல், பேருந்து, ரயில் நிலையங்களில் தவறுதலாக யார் காலையாவது மிதித்து இருந்தாலும் கூட சட்டென்று மன்னிப்பு கேட்டல் போன்ற பழக்கங்களை கையாண்டால் நாம் பண்புள்ளவர்களாக மதிக்கப்படுவோம்.
இதுபோல் அன்றாட வாழ்க்கையில் நாம் பின்பற்றும் சிறிய பழக்கங்களால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காணலாம். ஆதலால் நல்ல பழக்கங்களால் மாற்றங்கள் சூழ வாழ்வோம்!