உயிர் வாழ, உடல் இயங்கத் தேவையான சக்தியைத் தரும் காலை உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். இவை இருந்தால்தான் நாள் முழுவதற்குமான சக்தி நம் உடலுக்குக் கிடைக்கும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நாம் உண்ணும் முதல் உணவு நம் குடலை பாதிக்காத, அமில சுரப்பு அதிகம் இல்லாத உணவாக இருக்க வேண்டும்.
எலுமிச்சை சாறுடன் சிறிது நீர் கலந்து பருகுவது காலைப் பொழுதை உற்சாகமாக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை காலையில் எடுத்துக்கொள்வது வளர்ச்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி மூளைக்கு அதிகமான ஆக்சிஜனைத் தரும். வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் நாள் முழுக்க நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
சமச்சீர் காலை உணவில் புரதம், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கும். ஓட்ஸ் மற்றும் பெர்ரிகள், நட்ஸ், முட்டை மற்றும் வெண்ணெய் பழங்கள் போன்றவை சத்தானதாகவும், ஆற்றலை தருவதாகவும் இருக்கும். முளைகட்டிய பயறுகள், உடைக்காத முழு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், கஞ்சி, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள் போன்றவை வைட்டமின் சி அதிகம் கொண்டவை.
அத்துடன் சுண்ணாம்பு சத்து நிறைந்த பால், தயிர், பன்னீர் துண்டுகள் நம் மூளைக்கும், நரம்புகளுக்கும் தேவையான வலிமையை தரக்கூடியவை. இட்லி, தோசையுடன் பருப்புகள் சேர்த்த தால், காய்கறி கலவையும் நம்மை தெம்புடன் உலா வரச் செய்யும்.
காலை உணவைத் தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியம். புரதம், நல்ல கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சமச்சீரான, ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன், இரத்த சக்கரை அளவை ஒழுங்குபடுத்தி உறுதிப்படுத்த உதவுகிறது. காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக்கொள்வது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை பெருக்குகிறது. சிக்கலை தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகிறது. அன்றைய நாள் முழுவதும் நம் பணிகளை சிறப்பாக செய்ய உதவுகிறது.
நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும் காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக்கொள்வது நம் மனநிலையை மேம்படுத்தும். புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த முட்டைகள், நார்ச்சத்து மிகுந்த, எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் ஓட்ஸ், குறைந்த கலோரி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த பெர்ரிகள், வேகவைத்த முழு தானிய உணவுகள், கோதுமை உப்புமா, இட்லி, கேரட், தக்காளி, வெங்காயம், வெள்ளரி சேர்த்த வெஜ் சாண்ட்விச்கள் போன்றவை சிறந்த காலை உணவாகும்.
ஊட்டச்சத்துமிக்க முளைவிட்ட பயறுகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்தவை. இவை நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
தென்னிந்திய உணவான இட்லி பெரும்பாலும் இந்தியாவின் நம்பர் ஒன் காலை உணவாகக் கருதப்படுகிறது. ஆவியில் வேகவைத்த, சத்துக்கள் நிறைந்த, எளிதில் ஜீரணமாகக்கூடிய இதனை பருப்புகள் சேர்த்த சாம்பார், சட்னியுடன் சாப்பிடலாம். இது நாடு முழுவதும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான உணவாகும். காலை உணவை தவறாமல் எடுத்துக்கொள்வது எடை கட்டுப்பாட்டை ஆதரிக்கும். கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவற்றைக் கொண்ட சமச்சீரான காலை உணவு இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், பசியை குறைக்கவும், நீடித்த ஆற்றலை வழங்கவும் உதவுகிறது.
காலை உணவை தவிர்ப்பது தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். நாளின் முதல் உணவை சாப்பிடாமல் ஒதுக்கும்பொழுது சர்க்கரை அளவுகளில் வீழ்ச்சி ஏற்படும். இன்சுலின் மற்றும் ஆற்றல் அளவை சீராக வைத்துக்கொள்ள ஆரோக்கியமான காலை உணவு அவசியம்.
காலை உணவை தவிர்ப்பது முடி உதிர்வை ஏற்படுத்தும். பதற்றத்தை உண்டுபண்ணும். கவனமின்மை, நாள் முழுவதும் சோர்வு, நினைவாற்றல் குறைவு போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, நல்ல ஆரோக்கியத்துடன் சரியான உடல் எடையை பராமரிக்க நினைத்தால் சத்தான காலை உணவை தவறாமல் சாப்பிடுங்கள்.