

ஆதர்ச தம்பதிகளாக இருப்பதற்கு மிகப்பெரிய அளவில் மெனக்கெடல்கள் ஒன்றும் தேவையில்லை. அன்பு, அனுசரணை, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், கஷ்ட காலங்களில் ஒருவருக்கொருவர் தோள் கொடுப்பது, ஒருவர் வளர்ச்சியில் மற்றொருவர் பெருமிதம் கொள்வது ஆகியவை முக்கியமான தேவைகள். அத்துடன் இந்த 6 முக்கிய பண்புகளும் இருந்தால் நீங்கள்தான் சிறந்த ஆதர்ச தம்பதிகள். அவை என்னென்ன என்று பார்ப்போமா?
1. சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்: கணவன், மனைவிக்குள் சுதந்திரம் மதிக்கப்படுவது ஆரோக்கியமான உறவுக்கு அவசியம். இது ஒருவருக்கொருவர் தனிப்பட்ட விருப்பங்கள், நண்பர்கள், செயல்கள் ஆகியவற்றுக்கு இடமளித்து பரஸ்பர மரியாதையை உண்டுபண்ணும். இது சார்ந்து இருப்பதை குறைத்து உறவை வலுப்படுத்தும். சுதந்திரத்தைப் பேணுவதன் மூலம் தனிப்பட்ட அடையாளத்தைப் பாதுகாத்து உறவில் பிணைப்பை உருவாக்க முடியும். ஒருவருக்கொருவர் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். ஒருவர் மற்றவரை குறைவாக மதிப்பிட்டால் அந்த உறவில் விரிசல் ஏற்படும். இருவருக்கும் சம உரிமை இருக்கும் உறவே சிறந்தது.
2. நம்பிக்கை துரோகம் கூடாது: நம்பிக்கை அனைத்து உறவுகளுக்கும் அடிப்படையான விஷயம். முக்கியமாக, கணவன் மனைவிக்குள் நம்பிக்கை துரோகம், இருவருக்கும் இடையிலான தூரத்தை அதிகரித்து, உணர்வுபூர்வமான உறவை அழித்துவிடும். எனவே, கணவன் மனைவி உறவில் நம்பிக்கை துரோகம் கூடாது. அது அந்த உறவின் அடித்தளத்தையே அசைத்து, பாதுகாப்பு உணர்வையும், அன்பையும் அழித்துவிடும். வெளிப்படையான பேச்சு, மரியாதை மற்றும் உணர்ச்சி ரீதியான ஆதரவு ஆகியவை நம்பிக்கையை கட்டி எழுப்ப உதவும். அதுதான் ஆரோக்கியமான மற்றும் நீடித்த உறவின் திறவுகோல்.
3. புறக்கணிப்பு தேவையற்றது: துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழ முடியாது. உணர்வுபூர்வமான புறக்கணிப்பு கணவன் மனைவிக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி விடும். இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் புறக்கணித்தால் பிரிவு என்பது ஏற்பட்டு விடும். எனவே, இருவருக்கும் புரிதல் என்பது மிகவும் அவசியம். மனைவியின் தேவைகளை, ஆசைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்; அதேபோல், கணவரின் வேலைப் பளுவைப் புரிந்து கொண்டு ஆறுதலாக இருக்கப் பழக வேண்டும்.
4. சின்னச் சின்ன பரிசுகள் அவசியம்: கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன பரிசுகளை அவ்வப்போது பரிமாறிக் கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பரிசுகள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நம் பட்ஜெட்டுக்குள் இருக்கலாம். ஆனால், அவை அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும். துணைக்குப் பிடித்த சின்னச் சின்ன பரிசுகளை, அது பூவோ சாக்லேட்டோ அல்லது பிடித்த புத்தகமோ எதுவாகவும் இருக்கலாம். அன்பான அரவணைப்பு, அவருக்காக மட்டும் சிறிது நேரம் ஒதுக்குவது, உதவி செய்வது போன்ற செயல்களும் சிறந்த பரிசுகளே!
5. உறவை வலுப்படுத்தும் பாராட்டுகள்: கணவன் மனைவிக்குள் பாராட்டு என்பது உறவை வலுப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும். சமையல், வேலை, குழந்தைகளை கவனித்தல் போன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்காகவும், குணங்கள், சாதனைகள், உதவும் மனப்பான்மை போன்றவற்றிற்காகவும் ஒருவருக்கொருவர் மனதார பாராட்டிக் கொள்ளலாம். இது அன்பையும், மரியாதையையும் அதிகரித்து உறவில் நேர்மறை எண்ணங்களை வளர்க்கும். எனவே, கணவன் மனைவி இருவருமே சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வது உறவை ஆரோக்கியமாக வளர்க்க உதவும்.
கணவன் சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் பாராட்டும்போது மனைவி மிகவும் மகிழ்ச்சி அடைவாள். அதேபோல் கணவனும் மனைவியிடம் இருந்து பாராட்டு பெறும்போது மகிழ்ச்சி அதிகரிக்கும். ‘நன்றி, அருமையாக உள்ளது, சூப்பர்’ போன்ற வார்த்தைகள் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும்.
6. மனைவி குடும்பத்தை மதிக்கும்போக்கு: மனைவியின் குடும்ப உறுப்பினர்களை மதிப்பது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருக்க வைக்கும். எந்த ஒரு பெண்ணுமே தனது குடும்பத்தை மதிக்கும் கணவனை மிகவும் நேசிப்பாள். மனைவியின் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் பிற உறவினர்கள் மீது அன்பு, மரியாதை காட்டுவது பரஸ்பர புரிதல், ஆதரவு, நல்லுறவு மற்றும் குடும்ப அமைதிக்கு வழிவகுக்கும். மேலும், குழந்தைகள் நல்ல குணங்களை கற்றுக் கொள்ளவும் இது உதவும். முக்கியமாக இந்த மதிப்பு என்பது இரு தரப்பினருமே தங்கள் சொந்த குடும்பத்திற்கு கொடுக்கும் அதே மரியாதையை மற்றவரின் குடும்பத்திற்கும் கொடுப்பது திருமண உறவை வலுப்படுத்தும்.