
குழந்தைகளின் கற்பனை ஊற்றெடுப்பது கிறுக்குவதில் இருந்து ஆரம்பமாகிறது. அப்படி கிறுக்கும்போது என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
சிறுவன் ஒருவன் நடந்து வரும் வழியில் ஒரு பனம்பழத்தின் விதை காலில் இடறியது. அதை எடுத்து அருகில் கிடந்த ஒரு பானை சில்லால் அவனது தாயின் முகத்தை வரைந்தான். அதைக் கண்ட அவனது தாய்க்கு சொல்ல முடியாத சந்தோஷம். அப்படியே அந்த பனம்பழ விதையைக் கொண்டு வந்து வருவோர் போவோரிடம் எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தாள்.
அதன் பிறகு அந்தச் சிறுவன் யார் வீட்டிற்குச் சென்றாலும், எதில் கிறுக்கி படம் வரைந்தாலும் அதில் ஏதாவது அசத்தும்படியாக ஒரு உருவம், இயற்கைக் காட்சிகள் என்று இருக்கும். ஆதலால் அவன் வரைவதை ஊக்கப்படுத்தும் விதமாக ஸ்லேட்டுகளை கொடுத்து சிலர் உதவுவர். இன்னும் சிலர் பேப்பர், கலர் பென்சில் போன்றவற்றைக் கொடுத்து வரையச் சொல்வார்கள். யாரும் அவனைத் திட்டுவது இல்லை. ஆதலால் அந்தச் சிறுவனுக்கு வரைதலில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது. இப்படியாக ஆரம்பத்தில் இருந்து யாருமே சொல்லித் தராமல் வரைந்து பழகியதால் முறைப்படி ஓவியக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்கள்.
வாலிபப் பருவம் வந்ததும் அவனின் முறை பெண்கள் யாரும் அவனைக் கண்டால் வெளியில் வர மாட்டார்கள். பார்த்த மாத்திரத்தில் வரைந்து விடுவான் என்ற பயம், அச்சம், நாணம். இதனால் அவனைக் கண்டால் ஓடி ஒளிந்த முறைப் பெண்கள் அதிகமாக உண்டு. கீதா உபதேசம் போன்ற படங்களை வரைந்து கேட்ட அனைவருக்கும் விநியோகம் செய்தான். இதனால் நல்ல சம்பாத்தியம் கிடைத்தது. பேரும், புகழும் கிடைத்தது. இன்று அந்த சிறுவனின் வயது 72.
கனடாவில் உள்ள டொரண்டோ கல்வி சபை ஒரு கவிதையை சிறந்த கவிதையாக ஒரு முறை தெரிவு செய்திருந்தது. கல்வி கற்கும் மாணவர் ஒருவர் இக்கவிதையை எழுதி இருந்தார். டொரண்டோ போக்குவரத்து சபையினால் பிரயாணிகள் பகுதியில் இந்த ஆங்கிலக் கவிதை பொதுமக்கள் பார்வைக்காக எழுதப்பட்டிருந்தது. அந்த கவிதையின் தமிழாக்கம் இது.
நான் அப்பாவின் மடியில் இருந்தேன். வயது இரண்டு.
வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தார்.
அவர் ஒரு தப்பு பண்ணினார்.
வெளியே சென்றார், திரும்பி வந்தார்.
என்னைப் பார்த்தார், என் தலை முடி ஒரு நிறம்,
உடல் ஒரு நிறம், உடை ஒரு நிறம்,
தரையைப் பார்த்தார் பல வர்ணங்கள்.
என்னை மீண்டும் பார்த்தார், வாரி அணைத்தார்.
தூக்கினார், துள்ளிக் குதித்தார், முத்தமிட்டார்.
‘நீ ஒரு நல்ல ஓவியன்’ என்றார்.
என்பதுதான் அந்தக் கவிதை.
படம் வரையத் தேவையானவற்றினைக் கொடுத்து கற்பனை செய்து ஏதாவது வரையத் தூண்டலாம். படம் வரைதலுக்குப் பதிலாக வர்ண பென்சில்களால் அலங்கோலமாகக் கீறி பேப்பரை மடித்து, கசக்கி, கிழித்து தான் இருக்கும் இடத்திலும் வர்ணம் தீட்டி எல்லாம் ஒரே கலராக மாற்றி விடுவார்கள். அங்கு வரைதல் மட்டும் இடம் பெறவில்லை. அலங்கோலமாக மாற்றுதலும் இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து பிறந்ததுதான் சித்திரம், குழந்தையின் அனுபவம், பிள்ளையின் கற்பனை திறம், ரசனை. ஆதலால் எது சிந்தினாலும் சுத்தப்படுத்தலாம்.
புதிதாகத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால், குழந்தையைத் திட்டி, ‘இதே வேலையை செய்து கொண்டிருக்காதே’ என்று கூறாமல் உற்சாகப்படுத்த வேண்டும். இது அவர்களுக்கு உயர்ந்த மனப்பான்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
வீட்டில் இருக்கும் போட்டோ ஆல்பம் கொடுத்தால் அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் படங்கள் சிறப்பான நிகழ்ச்சிகள் போன்றவற்றை பிள்ளைகள் பார்த்து மகிழ்வார்கள். இதனால் குழந்தைக்கு தன்னைப் பற்றிய உயர் எண்ணம், உயர் உணர்வு, உயர் சுய மதிப்பு ஏற்படும். மற்றவர்களை மதிக்கவும், மற்றவர்களுடன் சேர்ந்து பழகவும் தூண்டலாக அமையும். இந்த ஆல்பத்தின் ஊடாக பிள்ளையின் பிரதிபலிப்பை அறிவதன் மூலம் அவர்களை நன்றாகப் புரிந்துகொள்ளவும் முடியும். பெற்றோரையும் பிள்ளை நன்றாகப் புரிந்து கொள்ளும்.
தன் வழியில் உருவாக்க குழந்தையை அனுமதிக்கலாம். குழந்தையின் வழியில் சென்று குழந்தையுடன் சேர்ந்து செயல்பட்டு குழந்தைக்கு கற்றலாக அமையக்கூடிய முறையில் ஏற்ற தகவல்களைக் கொடுக்கலாம். ஆலோசனை வழங்கலாம். கற்பனை செய்து ஏதாவது வரையத் தூண்டலாம். இதனால் பிள்ளைக்கு தன்னைப் பற்றிய உயர்ந்த நம்பிக்கை ஏற்படும்.
எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் பிள்ளை மீது பொறுமை இழக்காமல் நிதானமாக இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இது வாழ்நாள் முழுவதும் கைக்கொள்ளப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வருவது சிரமமாகத் தோன்றினாலும், நாளடைவில் சாலச் சிறந்ததாக மாறிவிடும்.
வளைத்தாலும் ஒடிந்து விடும், நிமிர்த்தினாலும் உடைந்துவிடும். வளைக்கும்போதும், நிமிர்த்தும்போதும் 'உணர்வை' ஒடிக்காமல் மதித்து நடந்தால் பிள்ளைகளும் நாம் கூறுவதைக் கேட்பார்கள். அதை விடுத்து, ‘எப்பொழுதும் என்ன படம் வரைகிறாய்? படிப்பதைப் பார்’ என்று கூறக் கூடாது.
இப்படியாக, குழந்தைகளின் திறமையை கண்டுபிடித்து வளர்த்து வந்தால் அவர்கள் எதிலும் துணிச்சலாகவும் தன்னம்பிக்கையுடனும் முயன்று வெற்றி பெறுவார்கள். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம்.