மாணவர்களே, படித்தது மறக்காமல் இருக்க இந்த 6 ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க!

Tips for remembering what you read
Studying girl
Published on

மாணவர்களே, நீங்கள் படித்ததை மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். படித்ததை மறக்காமல் இருப்பதற்கு ஞாபக சக்தி மிகவும் முக்கியம். சிலருக்கு முட்டி முட்டி படித்தாலும் கூட ஞாபகத்தில் நிற்பதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அது நாம் படிக்கும் முறையில் இருந்து, எப்போது படிக்கின்றோம், எப்படிப் படிக்கின்றோம், எந்த மாதிரி உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் எனப் பல்வேறு விஷயங்களை சார்ந்து இருக்கின்றது. அதில் குறிப்பாக, முக்கியமான ஆறு விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

1. பாடத் திட்டமும் சரியான திட்டமிடுதலும்: முதலில் நாம் என்ன படிக்க வேண்டும் என்பதைத் திட்டமிடுதல் அவசியம். போட்டித் தேர்வாக இருந்தாலும், இல்லை பொதுத்தேர்வாக இருந்தாலும் சரி அனைத்திலும் உள்ள பாடத்திட்டத்தை முதலில் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை ஒரு முறைக்கு இரு முறை முழுமையாக வாசிக்கவும். அதேபோல், மதிப்பெண் பங்கீடு முறையையும் பார்க்க வேண்டும். பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் முறை, எளிமையான பாடம், கடினமான பாடம் என நீங்களே உங்களுக்கான படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இயல்பாக ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பாடங்களில் அதிக ஆர்வம் இருக்கும். சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக, பிடித்த பாடத்தையே திரும்பத் திரும்ப படிப்பார்கள். பிடித்த பாடத்தோடு நின்று விடாமல், கடினமான பாடத்தையும் படிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். படிப்பதை ஆர்வத்தோடு படிக்க வேண்டும். பாடங்கள் புரியவில்லை என்றால், அந்தப் பாடத்தைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது நண்பர்களிடத்திலோ தயங்காமல் கேட்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பூண்டை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும் 9 எளிய வழிமுறைகள்!
Tips for remembering what you read

2. மனப்பாடம்: மனப்பாடம் செய்வது என்பது ஓரளவுக்கு தற்காலிக பலனாக மட்டுமே அமையும். பொதுவாக, மனப்பாடம் செய்து படித்தால், அது எக்காலத்துக்கும் பயன்படாது. சில பாடங்கள், பகுதிகளை மட்டும் நேர மேலாண்மையை கருத்தில் கொண்டு மனப்பாடம் செய்யலாம். உதாரணமாக, கணித சூத்திரங்கள், வரலாற்றின் முக்கிய காலங்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்யலாம். உண்மையில் இவற்றைப் புரிந்து படித்தால் மென்மேலும் சிறப்பாக இருக்கும். ஆனால், தேர்வு நெருங்கும் நேரத்தில் கணித சூத்திரங்கள் எப்படி வந்தது, அதன் வரலாறு என்ன என்று பார்த்துக்கொண்டே போனால், நமக்கு நேர விரயம்தான் ஏற்படும். எனவே, நேரத்துக்கு தகுந்தாற்போல் படிக்க வேண்டும்.

3. படிக்கும் காலம்: எப்போது படிக்க வேண்டும். காலையில் படிக்கலாமா, பகலில் படிக்கலாமா அல்லது இரவில் படிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படும். இதற்கான பதில் அவர்களிடத்திலேயேதான் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் படித்தால் மட்டுமே நினைவில் இருக்கும். சிலருக்கு இரவுக்கு மேல் படிப்பது உகந்த நேரமாக இருக்கும், இன்னும் சிலருக்கு அதிகாலை நேரத்தில் படிப்பது பிடிக்கும். பொதுவாக அதிகாலை நேரம், அதாவது காலை 4.30 மணிக்கு எழுந்து படித்தால், அப்போது என்ன படித்தோமோ அது நீண்ட காலத்துக்கு நினைவில் நிற்கும் என்பது பொதுவான கருத்து.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியின் மந்திரம்: மன அழுத்தத்தைக் குறைக்க குங்குமப்பூவை எப்படிப் பயன்படுத்தலாம்?
Tips for remembering what you read

4. யோகா, தியானம்: யோகா, தியானம் செய்வதால் நூறு சதவீதம் நினைவுத் திறன் அதிகமாகும். எனவே, அடிப்படை யோகா மற்றும் தியானத்தை கற்றுக்கொண்டு, நாள்தோறும் காலை, மாலை இருவேளையிலும் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் படிப்பதற்கு முன்பாக 5 நிமிடங்கள் தியானம் செய்து விட்டு படிக்க வேண்டும். இது உண்மையிலேயே நல்ல பலன்களைக் கொடுக்கும்.

5. உணவு முறை: உணவு முறையானது நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. தேர்வு நேரத்தில் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள் என்று பெரிய பட்டியலே உண்டு. எனவே, உணவுப் பழக்க வழக்கத்தில் கடும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். நல்ல டேஸ்டாக உள்ளது என்று விரும்பி கேடு விளைவுக்கும் உணவுகளையும் தின்பண்டங்களையும் உண்பதைத் தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம், தேர்வு முடியும் வரையிலாவது அத்தகைய உணவுகளை தவிர்த்து விட்டு, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு மாறினால் நல்லது.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்கள் குழந்தைகளுடன் வெளியே செல்லும்போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள்!
Tips for remembering what you read

6. வீட்டிலும் முறையான கால அட்டவணை: பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களுக்கான நேர அட்டவணை இருப்பது போல வீட்டிலும் படிக்கும் பாடங்களுக்கான அட்டவணை இருப்பது முக்கியம். ஏனெனில், பள்ளியில் பாடங்களை கூர்ந்து கவனிப்பது எந்தளவிற்கு அவசியமோ, அதேஅளவு அந்தப் பாடங்களை வீட்டிலும் படிக்க வேண்டும். பள்ளியிலும் மற்றும் வீட்டிலும் உள்ள சூழல்களில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பள்ளியில் சக மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் இருந்துவிட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் அமைதியும், தனிமை உணர்வும் ஏற்படுகிறது. அத்தகைய தனிமை சூழலில்தான் நமது படிப்பிற்கான திட்டமிடுதலைத் தொடங்க வேண்டியுள்ளது. மேலும், அரசு தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் அதிகமாக விடுமுறைகள் இருக்கும். படிப்பதற்கென்றே விடப்படும் அந்த விடுமுறை நாட்களை படிப்பில் சரியான முறையில் செலவழிப்பதற்கு நாம் முறையான திட்டமிடுதல்களை செய்ய வேண்டும்.

பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அவ்வாறு படித்தால்தான் சிறப்பாக படிக்க முடியும் என்றும் நம்புகின்றனர். தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிப்பதை பெருமையாகவும் கருதுகின்றனர். ஆனால், இது மிகவும் தவறான ஒரு நம்பிக்கை. இதனால் மாணவர்கள் சோர்ந்துபோய் விடுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடங்கள் இடைவெளி எடுத்தாலும்கூட, தொடர்ச்சியாக 4 மணி நேரங்களுக்கும் மேலாக படிப்பது நல்லதல்ல. இதனால் மூளையின் ரசாயன செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நாம் படிப்பது நினைவில் நிற்காமல் போகலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் பாதுகாப்பான இடமாக வீட்டை மாற்ற பயனுள்ள 10 ஆலோசனைகள்!
Tips for remembering what you read

நீண்ட நேரம் தொடர்ந்து படிப்பதன் மூலம் மாணவர்களின் மூளை ஏற்புத்திறன் குறைந்து, படிப்பதை உள்வாங்கும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. எனவே, ஒரு செயல்பாடானது சரிசமமான இடைவெளியைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மூளை நன்கு செயல்படும்.

ஆனால், அந்த இடைவெளியானது விளையாடுவதற்கோ, டி.வி. பார்ப்பதற்கோ செலவிடப்படக் கூடாது. ஏனெனில், அதன் பிறகு மீண்டும் படிப்பதற்காக திரும்புவது என்பது சிரமமாகி விடும். அதேசமயம் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட வேண்டும். படிப்பின்போது இடைவெளி விடுவதற்கான முக்கிய நோக்கமே கண்களுக்கும், திசுக்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒரே முறையில் உட்கார்ந்து படிப்பதால் ஒரு மாணவர் விரைவில் சோர்வடைந்து, அதன் மூலம் மன அழுத்தமும் அதிகமாகிறது. இடைவெளி நேரத்தில் தண்ணீர், தேநீர் அல்லது காபி அருந்தலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் அசைவுகளில் ஒளிந்திருக்கும் அசாத்திய திறமைகள்!
Tips for remembering what you read

ஒரு நாள் முழுவதும் படிக்கையில், பாடத்தை மாற்றி மாற்றி படித்தால் சோர்வை தவிர்க்கலாம். உதாரணமாக, நீங்கள் வரலாற்றுப் பாடத்தை படித்துவிட்டு, பின்னர் இயற்பியலைப் படிக்கலாம். இதைத் தவிர வேறு சில வழிமுறைகளும் உள்ளன. நீங்கள் பாட சம்பந்தமாக எழுதும் வேலையை செய்துகொண்டிருந்தால், அதை முடித்துவிட்டு படிக்கும் வேலையைத் தொடங்கலாம். மேலும், அறிவியல் பாடங்களில் உள்ள படங்களையும் வரைந்து பார்க்கலாம். இதன் மூலம் உங்களின் மூளை விரைவில் சோர்வடையாமல் தவிர்த்து, பாடத்தை நன்றாக நினைவில் பதிய வைக்கலாம். இவை எல்லாவற்றையும் முடிந்த அளவுக்கு பின்பற்றினால் நாம் படித்தது மறந்து போகமல் இருக்கும்.

மேலே சொன்னதைப் போன்ற மாற்று நடவடிக்கைகள் சிறந்த பலனளிப்பதாக இருந்தாலும், இந்த செயல்முறை அனைவருக்கும் ஒரே மாதிரியாக ஒத்துவரும் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் தங்களின் மனோநிலை மற்றும் விருப்பத்திற்கேற்ப திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். படிக்கும் செயல்முறையில் நாம் வகுக்கும் திட்டமானது, முறையாக பின்பற்றக்கூடியதாகவும், நமக்கு ஒத்துவரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம்தான் நாம் அதிகமான பலன்களைப் பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com