வெற்றிகரமான வாழ்க்கைக்கு தவிர்க்க வேண்டிய 6 குணங்கள்!
ஒவ்வொருவரது நல்வாழ்வையும் வளர்ச்சியையும் தடுக்கும் அம்சங்களில் முக்கியமானது எதிர்மறை எண்ணம். ஒருவரது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அவசியம் தவிர்க்க வேண்டிய 6 குணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. சுய சந்தேகம்: ஒரு வேலையை திறம்பட தன்னால் செய்ய முடியுமா? முடியாதா? என்று ஒருவர் சந்தேகப்படும்போது அந்தச் செயலை செய்யாமல் விட்டு விட்டு விடுகிறார். தன்னுடைய திறமை மீது தமக்கே சந்தேகம் ஏற்படுவது என்பது முயற்சிக்கு வழி வகுக்காது என்பதால் நம்முடைய வளர்ச்சி கேள்விக்குறியாகிவிடும். அதனால் சந்தேகத்தை சந்தேகம் இன்றி அப்புறப்படுத்த வேண்டும்.
2. பரிபூரணத்துவம்: நாம் செய்யும் எல்லா செயல்களிலும் முழுமையை எதிர்பார்க்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுத்து இலட்சியத்தை அடைய முடியாமல் தோல்வியில் துவளும் நிலையை உருவாக்கி விடும். படைப்பாற்றல் மற்றும் புதுமைகள் படைப்பதை இந்த பரிபூரணத்துவ உணர்ச்சி தடுத்துவிடும். பரிபூரணவாதிகள் வெற்றிகளை விட குறைபாடுகளில் அதிக கவனம் செலுத்துவதால் சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது.
3. மோசமானது நடக்கும் என்று கருத்துக்கள்: தன் மீது நம்பிக்கை இல்லாமல்போவது, அவநம்பிக்கையை விதைத்து மோசமான எண்ணங்களை ஏற்படுத்தி சாதாரண விஷயங்களில் கூட முடிவு மோசமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். இது நிகழ்காலத்தை அனுபவிக்க விடாமல் செய்து எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுத்து, ஒரு செயலில் கவனக்குறைவை ஏற்படுத்தும். அதோடு, புதிய வாய்ப்புகளை தடுத்துவிடும் என்பதால் மோசமாக நடக்கும் என்ற கருத்தை மோதிப் பார்க்க வேண்டும்.
4. கவலை: நாள்பட்ட நோய்களுக்குக் காரணமே கவலைதான். இந்தக் கவலை இருதய பிரச்னைகள், செரிமான பிரச்னைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட உடல் ஆரோக்கிய பிரச்னைகளுக்கு வழி வகுத்து, மன ஆற்றலை குறைத்து முக்கியமான பணிகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் என்பதால் கவலையை கடத்தி விடுங்கள்.
5. புகார்: எதிர்மறையான கண்ணோட்டத்தை வலுப்படுத்தும் குணங்களில் ஒன்று பிறரை விமர்சித்து புகார் சொல்லிக்கொண்டே இருப்பது. இந்த குணம் நல்லதை காண்பதை தடுத்துவிடும் என்பதால் புகார் கூறும் குணத்தை புதைத்து விடுங்கள்.
6. எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயற்சிப்பது: சிலர் பிறரை தேவையே இல்லாமல் எல்லா விஷயங்களிலும் கட்டுப்படுத்தும் முயற்சியை செய்வார்கள். இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு வழிவகுக்கும். பிறரை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது உறவுகளில் மனக்கசப்பை ஏற்படுத்தும். அதோடு, பெரும்பாலான மக்கள் தங்களைக் கட்டுப்படுத்துவதை விரும்புவதில்லை என்பதால் இது மோதல் மற்றும் உறவுச் சிக்கலுக்கு வழி வகுத்து ஆரோக்கியமற்ற மன நிலைக்கு வழிவகுக்கும் என்பதால் முடிந்தவரை எல்லாரையும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
மேற்கூறிய 6 விஷயங்களில் ஒருவர் கவனம் செலுத்தினால் வெற்றி அவரவர் வசப்படும்.