பொதுவாக, வைரஸ் காய்ச்சல் தொற்று பரவுகின்ற இடங்களில், அங்குள்ள அனைவருக்கும் அது பரவுவதில்லை . யாருக்கெல்லாம் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கிறதோ அவர்களுக்கு அது முதலில் தொற்றிக் கொள்கிறது. குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், நமது நோயெதிர்ப்பு அமைப்பு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. இது ஜலதோஷம் போன்ற பருவகால நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறது.
நோயின் அபாயத்தை முற்றிலுமாக அகற்றுவது சாத்தியமற்றது என்றாலும், சில வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை கணிசமாக வலுப்படுத்தும். இது குளிர்காலங்களில் உடல் ஆரோக்கியமாகவும் எதையும் தாங்கும் திறனுடனும் இருக்க உதவுகிறது.
குளிர் காலத்தில் பரவும் ப்ளூ காய்ச்சலை குணப்படுத்த மருந்து, மாத்திரைகளை விட தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு வகைகளே சிறந்தது. நோய் எதிர்ப்பாற்றல் குறைபாட்டில் முதலிடம் வகிக்கிறது வைட்டமின் சி சத்து குறைபாடு. வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி இவை எல்லாம் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இதனுடன் புரோபயாடிக் உணவுகள் மற்றும் துத்தநாக சத்தும், செம்பு சத்தும் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றன.
வைட்டமின் சி சத்தை நமது உடல் உருவாக்குவதில்லை. நாம் சாப்பிடும் உணவுகள் மூலமே அது கிடைக்கும். இதற்கு சிட்ரஸ் அதிகமுள்ள பழங்களான நெல்லி, ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினசரி 30 ml நெல்லிச்சாறு பருகுவது மிகவும் நல்லது.
ப்ளூ காய்ச்சலை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளை அழிக்க துத்தநாக சத்து மிகவும் அவசியமாகும். தானிய வகைகளில், குறிப்பாக தினையில் இது அதிகம் உள்ளது. பழங்களில் சீதாப்பழத்தில் அதிகமுள்ளது. நட்ஸ், விதைகள் மற்றும் கடல் உணவுகள் மூலம் துத்தநாகம் கிடைக்கிறது. நோயெதிர்ப்பு உயிரணு செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு இந்த தாது முக்கியமானது. தயிர் போன்ற புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகள், வலுவான குடல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
துத்தநாக சத்து தவிர்த்து தாமிர சத்தும் காய்ச்சலை எதிர்க்கும் சக்தி வாய்ந்தது. நம் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்தான் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்க்கிறது. தாமிர சத்து அதிகமுள்ள உணவு வகைகள் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை இரத்தத்தில் அதிகரிக்கின்றன. பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை, தாமரைத் தண்டு, கருப்பு சாக்லேட் போன்றவற்றில் தாமிர சத்து அதிகமுள்ளது.
தாவர வேதிப் பொருட்களுக்கும் காய்ச்சலை எதிர்க்கும் சக்தி இயல்பாகவே உள்ளது. அதில் குறிப்பிட்டத்தக்கது திராட்சை, தக்காளி, வெங்காயம், ஆப்பிள், மிளகு, கருப்பு தேயிலை, பூண்டு, பெர்ரி போன்றவற்றில் இந்த குறிப்பிட்ட வேதிப்பொருள் அதிகம் உள்ளது.
குழந்தை பருவத்தில் இருந்தே வைட்டமின் இ அதிகமுள்ள உணவுப்பொருள்களை சாப்பிட்டு வளர்ந்தவர்களுக்கு அவர்களின் வயோதிக காலம் வரை புளூ காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன. வைட்டமின் இ யின் அளவு அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு உயிர் அணுக்கள் அளவானது இரு மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள். சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பட்டாணி, கோதுமை, முட்டை, கோழிக்கறி போன்றவற்றில் வைட்டமின் இ அதிகமுள்ளது. இரத்த வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புப் பணியை ஒழுங்காகச் செய்ய வைட்டமின் பி12 ம் கண்டிப்பாகத் தேவை.
உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது நோயெதிர்ப்பு அமைப்பு மட்டுமல்ல, உடலில் உள்ள ஒவ்வொரு அமைப்பையும் பாதுகாக்கிறது. நீர் சுவாச அமைப்பில் சளி சவ்வுகளை பராமரிக்க உதவுகிறது. அதோடு குளிர்கால வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.