சொந்த வீடு வாங்குவது என்பது பலரின் கனவாகும். சொந்த வீடு என்பது முக்கியமான முதலீட்டை குறிக்கிறது. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது நிதித் துறையில் மிகவும் லாபகரமான விருப்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிளாட் வாங்குவது என்று தீர்மானித்தால் அதை வாங்கும் முன்பு மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
பட்ஜெட்: ஒரு வீடு வாங்க தீர்மானித்தால் அதைப்பற்றி ஒரு யதார்த்தமான பட்ஜெட்டை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய நிதி நிலைமையை மதிப்பீடு செய்து நமது பட்ஜெட்டிற்குள் வசதியாக பொருந்தக்கூடிய ஒரு சொத்தை தேர்வு செய்ய வேண்டும். வீடு வாங்குவது என்பது கொள்முதல் விலை மட்டுமல்ல, பதிவு, பராமரிப்பு மற்றும் அலங்காரம் எனப்படும் இன்டீரியர் டெக்கரேஷன் போன்ற செலவுகளையும் கொண்டுள்ளது. எனவே. நம் பட்ஜெட்டிற்கு தகுந்த மாதிரி வீட்டை தேர்வு செய்ய வேண்டும்.
சட்ட ஒப்புதல்களை சரி பார்க்கவும்: வீடு வாங்க அதில் முதலீடு செய்வதற்கு முன்பு டெவலப்பர் தேவையான அனைத்து சட்ட அனுமதிகளையும் பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
நேரடியாக வாங்குவது: டெவலப்பர் அல்லது விற்பனையாளரிடமிருந்து நேரடியாக சொத்தை வாங்குவதன் மூலம் பணத்தை கணிசமான அளவு சேமிக்க முடியும். புரோக்கர்கள் மூலம் செல்லும்பொழுது கமிஷன் தர வேண்டி இருக்கும். எனவே, கமிஷன்களில் சேமிக்க முகவர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். நேரடியாக விற்பனையாளரிடமிருந்து வாங்க முடியாமல் இருப்பின் தேர்வு செய்யும் முகவர் நம்பகமானவராகவும், சொத்து ஒப்பந்தங்களை கையாள்வதில் அனுபவம் மிக்கவர்களாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வாங்கவும்.
பண்டிகை கால சலுகைகள்: பண்டிகை காலங்களில் டெவலப்பர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து கவர்ச்சிகரமான தள்ளுபடிகளும், சலுகைகளும் கிடைக்கும். இந்த நேரத்தில் ஒப்பந்தத்தை பெறுவது கணிசமான லாபத்தை ஈட்டித் தரும்.
வீட்டை குழுவாக வாங்குவது: நான்கைந்து பேராக கூட்டாக சேர்ந்து வீடு வாங்குவது கூடுதல் சேமிப்பிற்கு வழிவகுக்கும். டெவலப்பர்கள் ஒப்பந்தத்தை பாதுகாக்க சிறப்பு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கலாம். இது கணிசமான அளவு பணத்தை சேமிக்க உதவும்.
பேச்சுவார்த்தை நடத்துவது: சொத்து வாங்குவதற்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் மக்களிடமும், ஆன்லைன் மூலமும் சந்தையில் அந்தப் பகுதி எந்த விலைக்கு போகிறது என்பதை தெரிந்துகொண்டு விற்பனையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது நமக்கு சாதகமான ஒப்பந்தத்தைப் பெற உதவும்.
ஒரு வீட்டை வாங்குவதற்கு முன்பு கவனமான திட்டமிடலும், அணுகுமுறையும் தேவை. அப்பொழுதுதான் நம் வீடு பற்றிய கனவு நல்லபடி நிறைவேறும்.