அன்றாட வாழ்வின் ஆரோக்கியத்தில் உடற்பயிற்சி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ஸ்கிப்பிங் ஒரு எளிய மற்றும் சிறந்த முழு உடற்பயிற்சியாக இருக்கிறது. ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் 6 ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. ஓடுவதை விட வேகமாக கலோரிகளை எரிக்கிறது: ஓடுவதை விட அதிக கலோரிகளை எரிப்பதுதான் ஸ்கிப்பிங். வெறும் 10 நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி, 8 நிமிடம் ஓடுவது போன்ற அதே கலோரியை எரிக்கும் என்று கூறப்படுகிறது. ஜிம்மில் பல மணி நேரம் செலவழிக்காமல் கூடுதல் எடையை குறைக்க ஸ்கிப்பிங் ஒரு சிறந்த வழியாகும்.
2. ஆரோக்கியமான இதயத்திற்கு ஊக்கம்: ஸ்கிப்பிங் ஒரு அற்புதமான கார்டியோ உடற்பயிற்சியாக இருப்பதால் இதயத் துடிப்பை அதிகரித்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய அமைப்பை பலப்படுத்தி, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வது கூட, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
3. சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை: ஸ்கிப்பிங் செய்ய நேரம் மற்றும் செறிவு தேவைப்படுகிறது. இது உங்கள் ஒருங்கிணைப்பை கணிசமாக மேம்படுத்தும். ஸ்கிப்பிங் செய்யும்போது மீண்டும் மீண்டும் இயங்குவதால், மூளை மற்றும் உடலை ஒன்றாக வேலை செய்யத் தூண்டுகிறது. இது உங்கள் மோட்டார் திறன்கள் மற்றும் சமநிலையை கூர்மைப்படுத்துகிறது. விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் விழிப்புணர்வை மேம்படுத்த விரும்பும் எவருக்கும் இது உதவியாக இருக்கும்.
4. எலும்பு அடர்த்தியை பலப்படுத்துகிறது: ஸ்கிப்பிங் எடை தாங்குவதை உள்ளடக்கிய உடற்பயிற்சியாக இருப்பதோடு, வலுவான மற்றும் அதிக அடர்த்தியான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. அடிக்கடி உடற்பயிற்சி செய்வது எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வயதாவதால் வரக்கூடிய எலும்புப்புரை அபாயத்தையும் குறைக்கிறது. ஸ்கிப்பிங் மூட்டுகளுக்கு அதிக வேலை கொடுக்காமல் வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதற்கான ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும்.
5. பல தசை குழுக்களுக்கு பலனளிக்கிறது: கெண்டைக்கால் முதல் தோள்கள் வரை ஸ்கிப்பிங், ஒரே நேரத்தில் பல தசைக் குழுக்களை செயல்படுத்துகிறது. இது கைகள், கால்கள் மற்றும் முதுகு, வயிற்றுப் பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக ஈடுபடுத்துகிறது. முழு உடற்பயிற்சியான ஸ்கிப்பிங் சுறுசுறுப்பாக வைத்திருந்து தசைகளை வலுப்படுத்துகிறது.
6. மன கூர்மையை மேம்படுத்துகிறது: ஸ்கிப்பிங் செய்வது உடலுக்கும் மனதுக்கும் சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது. இது சிந்தனையை மேம்படுத்துவதோடு, கவனம் மற்றும் விரைவான முடிவெடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது. ஸ்கிப்பிங் செய்யும்போது எண்டோர்பின் உற்பத்தி அதிகமாகி, பதற்றத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்தி, உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க இது ஒரு மகிழ்ச்சியான முறையாகும்.
ஸ்கிப்பிங் செய்வது மேற்கண்ட ஆறு நன்மைகளை வழங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிப்பதாகவும் இருக்கிறது.