எவ்வளவு விலை கொடுத்து கார் வாங்கினாலும் எல்லோருக்கும் மைலேஜ் மீது கவனம் இருக்கும். எந்த வாகனமாக இருந்தாலும் அதன் மைலேஜ் மிகவும் முக்கியம். குறைந்த எரிபொருள் செலவுதான் ஒரு காருக்கு மிகவும் முக்கியம். பொதுவாக, கார்களின் எடை, அதன் சிறப்பம்சங்கள், வேகம் உள்ளிட்டவற்றைப் பொறுத்து மைலேஜ் மாறும்.
அதேவேளையில் சரியாகக் காரை பராமரிக்கவில்லை என்றாலும் மைலேஜ் வழக்கத்தை விட குறையும். நம் காரை சரியாகப் பராமரித்து சில டிப்ஸ்களை கடைபிடிப்பதன் மூலம் மைலேஜை அதிகரிக்க முடியும். இதன் மூலம் எரிபொருள் தேவையை குறைத்து பணத்தை சேமிக்க முடியும். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. அதிக வேகத்தைத் தவிர்க்கவும்: அதிக வேகத்தில் காரை ஓட்டினால் அதிக எரிபொருள் செலவாகும். அத்தகைய நேரங்களில் நீங்கள் காரை மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் ஓட்ட வேண்டும். அதன் மூலம், நீங்கள் எரிபொருளை சேமிக்கலாம். எரிபொருளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் வேக வரம்புக்கு மேல் வாகனம் ஓட்டினால் மைலேஜ் குறையும். கார் எஞ்சின் மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது.
2. திடீர் பிரேக்கிங்கைத் தவிர்க்கவும்: உங்கள் கார் வேகமாகச் செல்லும்போது திடீரென பிரேக் செய்வது உங்கள் காரின் மைலேஜைக் குறைக்கும். மெதுவாக வாகனம் ஓட்டுவது இயந்திரத்தின் அழுத்தத்தை குறைக்கிறது. இது எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது. ஏனெனில், கார் எஞ்சினில் அதிக அழுத்தத்தால் அதிக எரிபொருள் செலவாகும். தேவைக்கு பிரேக் பிடிப்பது பிரச்னையில்லை. தேவையில்லாமல் சிலர் திடீரென பிரேக் பிடித்து பழகுவார்கள். அவர்கள் அதனை சரி செய்துகொள்ள வேண்டும்.
3. கியர்கள் விவரம்: சரியான நேரத்தில் கியரை மாற்றினால் எரிபொருள் நுகர்வு குறையும். விருப்பத்திற்கு ஏற்ப கியர்களை மாற்றுவதும் அதிக எரிபொருள் உபயோகத்திற்கு வழிவகுக்கும். சரியான நேரத்தில் கியர்களை மாற்றுவது இயந்திர செயல்திறனை அதிகரிக்கிறது. எந்த வேகத்தில் எந்த கியரில் செல்ல வேண்டுமென்று தெரிந்து காரை ஓட்ட வேண்டும்
4. டயர் அழுத்தத்தை சரிபார்க்கவும்: டயர் அழுத்தம் சரியாக இல்லை என்றால், காரின் மைலேஜ் குறையலாம். இதற்குக் காரணம், குறைந்த காற்றோட்ட டயர்கள் அதிக உராய்வை உருவாக்குகின்றன. இது அதிக எரிபொருள் நுகர்வுக்கு வழிவகுக்கிறது. டயர் அழுத்தத்தை எப்போதும் சரியான அளவில் வைத்திருங்கள்.
5. ஏசி: காரில் ஏசியை அதிகமாகப் பயன்படுத்துவது மைலேஜை மோசமாகப் பாதிக்கும். ஏசி பயன்படுத்த வேண்டாம். தேவையில்லாதபோது ஏசி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
6. காரில் அதிக எடை வேண்டாம்: காரில் வைக்கப்படும் அதிக எடையும் காரின் எஞ்சினில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கிறது. காரில் கனமான லக்கேஜ்களுடன் பயணிக்க வேண்டாம். மிகவும் அவசியம் என்றால் பரவாயில்லை. மற்ற நேரங்களில் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்லாமல் இருப்பது நல்லது.