
எதிர்மறை ஆற்றல் என்ற ஒன்றை கண்களால் பார்க்க முடியாது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை இல்லை என்றாலும் கூட எதிர்மறை ஆற்றலின் விளைவுகளை ஒருவரால் உணரமுடியும். ஒருவர் எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்த்தும் ஆறுவிதமான அறிகுறிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. எதிர்மறை எண்ணங்கள்:
மனதில் எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். எதிலும் ஒரு அவநம்பிக்கையும், ஓவர் திங்கிங் எனப்படும் அதீத சிந்தனையும் இருக்கும். தன் மீது இருக்கும் நம்பிக்கை குறைவது மட்டுமல்லாமல் பிறர் மீதும் நம்பிக்கை இழப்பு, அதன் காரணமாக அவர்களைப் பற்றி குறை சொல்லுதல், பிறர் மீது தேவையின்றி கோபப்படுதல், எரிச்சல்படுதல், போன்றவை ஒருவருடைய உணர்ச்சி சமநிலையில் இல்லை என்பதை குறிக்கிறது. இது எதிர்மறை ஆற்றலின் விளைவாகும்.
2. சோர்வு:
நன்றாக உறங்கி எழுந்த பின்பும் காலையில் மிகவும் சோர்வாக உணர்வார்கள். நாள் முழுவதும் அந்த சோர்வு நீடிக்கும். எந்த வேலையும் செய்ய ஆர்வம் இல்லாமல் போகும். முன்பு ரசித்து செய்த வேலைகளில் கூட ஆர்வமிழப்பு ஏற்பட்டு சமூக தொடர்புகளில் கூட விருப்பம் இல்லாமல் போகலாம். மறதி அதிகரிக்கும். உடலும் மனமும் சோர்ந்து போய் எதிலும் ஒரு விட்டேத்தியான மனநிலை உருவாகும். சத்தான உணவுகளை எடுத்து கொண்டாலும் கூட உடலில் ஆற்றலே இல்லாததுபோல உணர்வார்கள்
3. பதட்டமும் அச்சமும்:
இவை எதிர்மறை ஆற்றலின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று. எந்த காரணமும் இல்லாமல் தேவையில்லாமல் பதட்டம் அடைவதும், எதற்கெடுத்தாலும் அச்சமாகவும் இருக்கும். மனதில் பரபரப்பான எண்ணங்கள் ஓடும். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று தன்னை கண்காணிப்பதுபோல உணர்வார்கள்.
4. இழப்புகள், தோல்விகள்:
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம், அலுவலகப் பணியில் சிக்கல்கள், சிரமங்கள், நிதி தொடர்பான பிரச்னைகள், இழப்புகள், தோல்விகள் போன்றவை ஏற்படும். மேலும் உறவுகளிலும் சிக்கல்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் அடிக்கடி தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும். மனதில் குழப்பமான எண்ணங்கள் தோன்றி தெளிவாக சிந்திக்க முடியாமல் போகும். முன்னேற முடியாமல் முட்டுக்கட்டைகள் ஏற்படும்.
5. மோசமான கனவுகள்:
இரவு நேரத்தில் கூட தூங்குவதில் சிரமம் ஏற்படும். மோசமான கனவுகள் உருவாகலாம். தேவையில்லாமல் கனவுகள் வருவது, எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப் பட்டிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். சரியான தூக்கம் இல்லாததால் விழித்தவுடன் பதட்டமான மனநிலை உருவாக்கும்.
6. உடல் உபாதைகள்:
எதிர்மறை ஆற்றலின் காரணமாக உடல் உபாதைகள் ஏற்படலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரித்தாலும் கூட தலைவலி, உடல் வலி, பொதுவான உடல்நல பிரச்னைகள் தோன்றலாம், சிலருக்கு பதட்டம் காரணமாக விபத்துகள் கூட ஏற்படலாம்.
எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கு தியானம், சுவாசப்பயிற்சி, நடைப் பயிற்சி ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்தல், பூமியில் வெறுங்காலுடன் நடத்தல், போன்றவற்றை முயற்சிக்கலாம். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நேர்மறையான கூற்றுக்களை தொடர்ந்து சொல்ல வேண்டும். கோபம், கசப்பு போன்ற சுமைகளை விடுவித்து மன்னிப்பு மற்றும் நன்றியுணர்வை பயிற்சி செய்யவேண்டும்.