

தற்போது வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்புதல் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தொடர்பு வழியாக மாறிவிட்டது. ஆனால், இது வெறும் வார்த்தைப் பரிமாற்றம் மட்டுமல்ல, மனித உறவுகள் மற்றும் மனநிலைகளை ஆழமாக பாதிக்கும் அற்புதமான உளவியல் கலை. குறுஞ்செய்தி அனுப்புவதன் ஆறு சக்தி வாய்ந்த உத்திகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. வேண்டும் என்றே தாமதப்படுத்துதல்: ஒரு குறுஞ்செய்தி நமது போனில் வந்ததும் உடனே பதிலனுப்ப வேண்டியது இல்லை. இப்படி அனுப்பும்போது நீங்கள் வெட்டியாக இருக்கிறீர்கள் என்று அனுப்புபவர் நினைப்பார். 15 நிமிடங்கள் அல்லது அரை மணி நேரம் கழித்து பதிலளித்தால் நீங்கள் நேரத்தை மதிக்கிறீர்கள், பிஸியாக இருக்கிறீர்கள், அவர்களை மதித்து சரியான கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைக் காட்டும். குறுஞ்செய்தியை பார்த்தவுடன் பதிலளிக்காமல் சற்று தாமதித்து பதில் அளிக்க வேண்டும்.
2. பிரதிபலித்தல்: உங்களுக்கு செய்தி அனுப்புபவர் நீளமான, நுணுக்கமான, நகைச்சுவையான பாணியில் செய்தி அனுப்பினால் நீங்களும் அதே பாணியில் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். சிலர் குறுகிய சொற்றொடர்கள் மற்றும் பல எமோஜிகளுடன் துடிப்பான உரைகளை அனுப்பினால் அதற்கேற்ப எளிமையான எமோஜி கலந்த பதில்கள் அனுப்புவது அவர்களுக்கு மனதைக் கவர உதவும். இது உங்கள் நட்பு, உறவு போன்றவற்றை பலப்படுத்தும்.
3. வலுவான செய்தி: உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் உங்களது செய்தி இருக்க வேண்டும். ஒரு நல்ல பாராட்டு, கருத்து அல்லது விமர்சனம் போன்றவற்றை செய்தியாக அனுப்பிவிட்டு, அதன் பின்பு அமைதியாக இருக்க வேண்டும். நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் அதை அடுத்த செய்தி எப்போது வரும் என்று அவர்களை காத்திருக்க வைக்கும். உளவியல் ரீதியாக இப்படிப்பட்ட நல்ல உரையாடல்கள் அனைவராலும் விரும்பப்படும். ‘உங்களுடைய செய்தி என் மனதை தொட்டது. அது ஆழமாக சிந்திக்க வைத்தது’ போன்ற பாராட்டும் விதத்தில் இருந்தால் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆசைப்படுவார்கள்.
4. முதலில் முடிப்பது: உரையாடலை முதலில் முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும். உங்களது குறுஞ்செய்தியை வாசிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். அதற்கு ‘இப்போது நான் முக்கியமான வேலையில் இருக்கிறேன். பிறகு தொடர்பு கொள்கிறேன்’ என்று சொல்லி உரையாடலை முடிப்பது வரவேற்புற்குரிய விஷயமாக இருக்கும். செய்தி அனுப்புவதை ஆற்றலுடன் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
5. பெயர் குறிப்பிடுதல்: குறுஞ்செய்தி அனுப்பும்போது அவருடைய பெயரை உரையாடலில் அடிக்கடி பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். நீங்கள் அவர்கள் மீது நேரடியாக தனிக் கவனம் செலுத்துகிறீர்கள் என்று உணர்த்தும். நட்பு மற்றும் உறவுகளை ஆழமாக்கும். தன்னுடைய பெயரை குறுஞ்செய்தியில் பார்க்க நேருபவர்களுக்கு அது மகிழ்ச்சியைத் தரும்.
6. மௌனம் வலிமையானது: குறுஞ்செய்தி அனுப்பி அவரிடமிருந்து பதில் வராத போது, அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். உடனே ஏன் பதில் வரவில்லை என்று இரட்டைக் குறுஞ்செய்தி அனுப்பக் கூடாது. மௌனமாக இருந்தால் நீங்கள் சக்தி வாய்ந்த, தன்னம்பிக்கை மிகுந்த நபராக இருப்பதைக் காட்டும். அமைதியாக இருத்தல் உங்கள் மதிப்பைக் கூட்டும். உங்களது தனித்துவத்தை எடுத்துக்காட்டும்.
எனவே, இந்த ஆறு டிப்ஸ்களை கடைப்பிடித்து குறுஞ்செய்தி அனுப்பும்போது நீங்கள் குறிப்பிடத்தக்க நபராக இருப்பீர்கள். நல்ல உரையாடல்கள் வெறுமனே தகவல் பரிமாற்றமாக இருக்காமல் மதிப்புமிக்க உரையாடலாக மாறும். நவீன வாழ்க்கையில் உறவு மற்றும் நட்புகளை வலுவாக நிலைநிறுத்தும்.