

குழந்தை வளர்ப்பு என்றவுடன் அவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, கல்வி இதெல்லாம்தான் பெரும்பாலானோர் நினைவுக்கு வரும். ஆனால், இவற்றைப் போலவே மிக முக்கியமான வேறொன்றும் இருக்கிறது. அதுதான் சமுதாயத்தில் வாழத் தகுந்த வகையில் நம் குழந்தையை வளர்த்தெடுப்பது. பெரும்பான்மையான பெற்றொர்கள் இதில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால், உண்மையில் இது குழந்தை வளர்ப்பில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
‘மனிதன் ஒரு சமூக விலங்கு’ என்ற உண்மை அனைவரும் அறிந்ததே. மனிதனால் சமூகமாகத்தான் வாழ முடியும். அப்படித்தான் அவன் வடிவமைக்கப்பட்டிருக்கிறான் என்பது உளவியல் உண்மை. அப்படி சமுதாயத்தில் வாழ வேண்டுமானால் குழந்தைப் பருவத்திலேயே அதற்குத் தயார்படுத்த வேண்டுமல்லவா?
ஒரு புதிய நபர் பெயர் கேட்டால் கூட பதில் சொல்லாமல் இருக்கும் குழந்தைகள் இன்று அதிகமாகி விட்டனர். நகரத்து வாழ்க்கை முறை, தனிக்குடும்ப வாழ்க்கை முறை, ஒற்றைக் குழந்தை ஆகியவை இப்படிப்பட்ட ‘சமூக பழக்க சிக்கல்கள்’ கொண்ட குழந்தைகளை உருவாக்குகின்றன. வளர வளர சக மனிதர்களோடு அவர்கள் சகஜமாக இருக்கவே சிரமப்படுபவர்களாக, தனிமை விரும்பிகளாக, இன்ட்ரோவர்ட்டுகளாக இந்தக் குழந்தைகள் மாறி விடுகிறார்கள். இது வாழ்வில் பல்வேறு நடைமுறை இடைஞ்சல்களைத் தரலாம். ஆகையால் இப்படிப்பட்ட நிலையில் அல்லாமல், நல்ல சமூகப் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளும் குழந்தையாக வளர்த்தெடுக்க வேண்டிய கடமை பெற்றவர்களுடையதே. இதற்கு உதவும் நான்கு விஷயங்களை இக்கட்டுரையில் காண்போம்.
1. உணர்வுகளை அறிமுகம் செய்தல்: சமூகத்தில் நன்றாக ஒருங்கிணையத் தடையாய் இருப்பது நம் உணர்வெழுச்சிகள்தான். அதனால் குழந்தையிலேயே உணர்வுகளை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். ‘இவர்தான் உன் மாமா, இவள்தான் உன் அத்தை’ என்று அறிமுகப்படுத்துவோமே! அதைப்போல் நீ இப்போது உணர்வது ஏமாற்றம்; நீ இப்போது கோபப்படுகிறாய்; நீ சோகமாக உணர்கிறாய்; நீ பயப்படுகிறாய் என்று அந்தச் சூழ்நிலையில் குழந்தை உணரும் உணர்வின் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தல் முதன்மையான நடைமுறையாகும். உணர்வுகளைப் பிரித்தறியத் தெரிந்துகொண்டால்தான் அதனை நல்ல முறையில் அவர்களால் கையாள முடியும்.
2. மனதை அமைதிப்படுத்தப் பயிற்சி அளித்தல்: உணர்வெழுச்சிகளின்போது உடலினை அமைதிப்படுத்தப் பயிற்சி அளிக்க வேண்டும். கோபம், பயம், மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுகள் மேலோங்கும்போது ஆழ்ந்த மூச்செடுப்பது, கண்களை மூடிக்கொண்டு அமர்வது, அவ்விடம் விட்டு நகர்வது போன்ற ஏதேனும் ஒரு முறையினைக் கையாள அறிவுறுத்தலாம். சமூகப் பழக்கம் வளர்க்க உணர்வெழுச்சியான நேரங்களில் அமைதி காப்பது அவசியம் அல்லவா?
3. காட்டுவதா? சொல்வதா?: எல்லா நேரங்களிலும் உணர்வுகளை வெளிக்காட்டாமல் அமைதி காப்பது சமூக வாழ்வில் நடக்காத காரியம். அப்படிச் செய்தல் மன அழுத்தம் ஏற்படலாம். அல்லது ஏமாளி ஆக்கப்படலாம். அதனால் பொருத்தமான சூழ்நிலைகளில் உணர்வுகளை வார்த்தைப்படுத்தவும், முறையாக வெளிப்படுத்தவும் குழந்தைக்குப் பயிற்சி அளித்தல் வேண்டும்.
உதாரணமாக, கோபத்தைச் சொல்லுதல் சரி. ஆனால், திட்டுதல் சண்டையிடுதல் காயப்படுத்துதல், அடித்தல் ஆகிய முறையில் கோபத்தினை வெளிக்காட்டுவது தவறு என்று சொல்லிக்கொடுத்தல் வேண்டும். தனது உணர்வுகளை வார்த்தைப்படுத்தத் தெரிந்த குழந்தை மிக நல்ல சமூகப் பழக்கம் கொண்ட நபராக வருங்காலத்தில் மாறும்.
4. செய்த தவறை சரி செய்தல்: தெரியாமல் ஏதேனும் தவறிழைத்தால் உடனடியாக எதிர்வினையாற்றி அந்தத் தவற்றினைச் சரிசெய்து விடப் பயிற்சி அளித்தல் இப்பதிவின் நிறைவுப் பகுதியாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் வருங்காலத்தில் எதிரிகளின் எண்ணிக்கையினைக் குறைத்துக்கொள்ளவும் உறவுப்பாலத்தின் விரிசல்களைப் பூசி சமன்படுத்திச் சமாளிக்கவும் தெரிந்த நபராக நம் குழந்தை உருவாகும். டாட்லர் எனப்படும் 1 முதல் 3 வயது பருவத்திலேயே இந்தப் பயிற்சிகளைத் துவங்கிடும்படி அறிவுறுத்துகிறார்கள் உளவியல் வல்லுநர்கள். முயற்சித்துப் பாருங்களேன்.