
காலையில் எழுந்ததும் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. டீ போட்ட பின் வடிகட்டியில் தங்கியிருக்கும் இலைகளை சிலர் ரோஜா அல்லது மற்ற செடிகளுக்கு உரமாக மண்ணில் போட்டுவிடுவது உண்டு. இதைத் தவிர, வேறு சில பயன்பாட்டிற்கும் இந்த இலைகளை உபயோகிக்கலாம். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. வீட்டில் கெட்ட வாசனை வரும் இடங்களில் இந்த இலைகளை வைத்திருப்பின் அந்த இடம் துர்நாற்றமின்றி இருப்பதற்கு இது உதவும். ஒரு சிறிய பௌலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் அங்கு நிலவும், பழைய உணவுப் பொருட்களின் வாசனை நீங்கி, ஃபிரிட்ஜின் உள்பகுதி சமநிலைத் தன்மை பெற்றுவிடும். உபயோகித்த டீ இலைகளை ஒரு துணியில் கட்டி ஷூவுக்குள் வைத்துவிட்டால், வியர்வையினால் ஷூவுக்குள் படிந்திருக்கும் கெட்ட வாசனை நீங்கிவிடும். இதேபோல், அலமாரி, இழுப்பறை மற்றும் கழிப்பறை போன்ற இடங்களிலும் வைத்துவிட்டால் ஆங்காங்கே உள்ள கெட்ட வாசனை நீங்கிவிடும்.
2. வீட்டிலேயே சருமத்தின் மீது உபயோகிக்கக்கூடிய ஸ்கிரப் தயாரித்து பயன்படுத்தலாம். பயன்படுத்திய ஈரமான டீ இலைகளுடன் தேன் அல்லது தயிர் சேர்த்து ஊட்டச்சத்து நிறைந்த ஸ்கிரப் செய்யலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மென்மையும் புத்துணர்ச்சியும் அளிக்கும். மிருதுத்தன்மையுடைய இந்த இலைகள் சருமத்திலுள்ள இறந்த செல்களை உரித்தெடுக்கவும் உதவும்.
3. டீ போட்ட பின் தங்கியிருக்கும் டீ இலைகளுடன் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். அந்த தண்ணீரை ஆற விடவும். நீங்கள் ஷாம்பு போட்டு குளித்த பின் இந்த நீரை முடியில் ஊற்றி கழுவவும். முடி உலர்ந்தபின் பளபளப்புப் பெறவும், தலையில் உள்ள பொடுகு நீங்கவும் இது பயன்படும்.
4. எண்ணெய் பிசுக்கு உள்ள சமையல் பாத்திரங்களை சுத்தப்படுத்தவும் இந்த டீ இலைகள் உதவும். காயவைத்து எடுத்த இந்த இலைகள் செதில் செதிலான அமைப்பு கொண்டுள்ளதால் விடாப்பிடி கறைகளையும் விரைவில் நீக்க உதவும். பாத்திரங்களை சேதமடையாமல் சுத்தப்படுத்தவும், சமையலறையில் சுற்றுப்புற சூழலியல் பாதுகாப்புப் பெறவும் இந்த இலைகள் உதவி புரியும்.
5. டீ போட்டபின் மீந்திருக்கும் டீ இலைகளை நன்கு காயவைத்தெடுத்து கார்பெட் அல்லது தரை விரிப்புகள் மீது தூவி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து வாக்யூம் கிளீனரால் சுத்தப்படுத்திவிட்டால், மெல்லியதொரு வாசனையுடன் கார்பெட் அழகான தோற்றம் தரும்.
6. இயற்கை முறையில் சாயம் பூசவும் இந்த இலைகள் பயன்படும். மீண்டும் ஒரு முறை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நீரை எடுக்கவும். லைட் பிரவுன் நிறம் கொண்ட இந்த திரவத்தை துணி, பேப்பர், ஈஸ்டர் முட்டை போன்றவற்றின் மீது பூசி நிறமேற்றலாம். கைவினைப் பொருட்கள் மீது இத்திரவத்தை தெளித்து துரு பிடித்தாற் போன்ற பழைய காலப் பொருட்களின் சாயலை இதில் வரச் செய்யலாம்.
டீயின் சாற்றை எடுத்துவிட்ட பிறகு, வெறும் சக்கைதானே என்று அதைத் தூக்கி எறிந்து விடாமல், மேலே கூறிய வழிகளில் உபயோகித்து பயன் பெறலாமே!