
1. நம் வீட்டுக்கு வந்து தங்கும் விருந்தினர்கள் அறையில் ஒரு ஜீரோ வாட் பல்பு அல்லது தலைமாட்டில் ஒரு டார்ச் லைட் இருப்பது நல்லது. புதிய இடத்தில் அவர்கள் தடுமாறாமல் இருக்க இந்த ஐடியா உதவும்.
2. சில மருந்து டப்பாக்கள் மற்றும் பாட்டில்கள் மேல் உள்ள எழுத்துக்கள் சிறிதாக விஷயங்களைப் படிக்க முடியாமல் இருந்தால் ஒரு டார்ச் லைட்டின் வெளிச்சத்தை அந்த எழுத்துக்களின் மேல் காட்டினால் எழுத்துக்கள் பளிச்சென்று தெளிவாகத் தெரியும்.
3. செருப்புகளை அடுக்கி வைக்கும் அலமாரிக்கு அருகில் எப்போதும் ஒரு டப்பாவில் நாப்தலின் உருண்டைகளைப் போட்டு வையுங்கள். ஷூக்களை கழட்டியதும் சில நாப்தலின் உருண்டைகளை ஷூக்களில் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.
4. இரவில் சமையலறையை சுத்தம் செய்யும்போது ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு ஸ்பூன் உப்பை கரைத்து சிங்க் உள்ளே கொட்டவும். இதனால் சிங்க் துளை சுத்தமாகி விடும்.
5. பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களின் ஓரங்கள் மடங்கியிருந்தால், மெல்ல மடிப்புகளை நீக்கி, பக்கங்களை நேராக்கி, துணி உலர்த்தும் க்ளிப் ஒன்றை இரவு முழுவதும் போட்டு வைத்தால், அடுத்த நாள் புதுப் புத்தகங்களின் பக்கங்கள் போல நேராகி இருக்கும்.
6. வீட்டில் பிளாஸ்டிக் சேர் பயன்படுத்துகிறீர்களா? அவற்றின் நான்கு கால்களையும் அவற்றின் நிறத்துக்கு ஏற்ற பிளாஸ்டிக் கொடிக்கயிற்றால் குறுக்கு, நெடுக்காகக் கட்டி விட்டால் நாற்காலி தரையில் வழுக்காமலும், கால்கள் விரிந்து உடையாமலும் இருக்கும்.
7. வீட்டில் உள்ள எவர்சில்வர் குழாய்களில் உப்பு படிந்து மங்கலாக இருக்கிறதா? இரண்டு ஸ்பூன் விபூதியும், சம அளவு உப்புத்தூளும் கலந்து ஒரு ஈரமான துணியால் குழாயின் மேல் அழுத்தித் தேய்த்துக் கழுவி விட்டால் பளிச்சென்று ஆகிவிடும்.
8. வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியூர் செல்லும்போது, பூட்டின் சாவித் துவாரம் வெளியே தெரியாதபடி பூட்டை திருப்பி வைத்துப் பூட்டவும். மழையில் நனையும் இடமாக இருந்தால், பிளாஸ்டிக் கவருக்குள் பூட்டை நுழைத்து கட்டி விட்டால் தண்ணீர் இறங்காமல் இருப்பதோடு, பூட்டும் துருப்பிடிக்காது.
9. விளக்கில் திரி போடும் முன், சிறிது மெழுகுத்துகள்களை திரியில் தடவி தீபம் ஏற்றுங்கள். சட்டென்று பற்றிக்கொள்வதுடன், இடைவிடாமல் நின்று நீண்ட நேரம் பிரகாசமும் தரும்.
10. வீட்டிலேயே எடை பார்க்கும் மெஷின் வைத்து அடிக்கடி எடையைப் பார்த்துக் கொள்கிறீர்களா? மெஷினுக்கு பக்கத்தில் ஒரு நோட்டு புக்கையும், பேனாவையும் வைத்துக்கொள்ளுங்கள். எடை பார்க்கும் போதெல்லாம் பெயர், எடை, தேதி போன்றவற்றை குறித்து வைத்து அவ்வப்போது உடல் எடையில் வரும் மாற்றங்களைக் கண்டுபிடிக்கலாம். குறிப்பாக வளரும் குழந்தைகளின் உடல் எடையில் வரும் மாற்றங்களைக் கண்காணிக்க இது உதவும்.
11. ஃப்ரிட்ஜ், ஸ்டீல் பீரோ என எதிலாவது பெயிண்ட் உதிர்ந்து போயிருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அந்த இடங்களில் மேக்னடிக் ஸ்டிக்கரை ஒட்டி விடுங்கள். கீறல் விழுந்த இடம் காணாமல் போய் விடும்.
12. வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்கும்போது ஜிப், எலாஸ்டிக் பொருந்திய சிறிய உள்ளாடைகளை ஒரு வலைப்பையில் போட்டுக்கட்டி, வாஷிங்மெஷினில் மற்ற துணிகளோடு சேர்த்துத் துவைத்தால், மற்ற துணிகளுக்கு எந்த சேதமும் வராமல் இருப்பதோடு, வாஷிங் மெஷினும் பாதிக்கப்படாமல் இருக்கும்.