
விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாகத் திகழ்கின்றன. இதில் விருந்தினர்களுக்கு பரிசுகள் கொடுப்பதுவும், பெறுவதுவும் பொதுவான ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது. நம் வாழ்வில் திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள், மதம் சார்ந்த பண்டிகைகள், திருமண ஆண்டு விழாக்கள் போன்ற பலவிதமான நிகழ்வுகளில் பரிசுப் பொருட்களை நாம் பரிமாறிக்கொள்கிறோம். இந்தப் பரிசுகள் சில்லறை பரிசுப் பொருட்கள், டிபன் பாக்ஸ், எவர்சில்வர் தட்டுக்கள், ஆன்மிகப் பொருட்கள், மொய் பணம் என பல்வேறு வகைகளில் இருக்கின்றன. விழாக்களில் எந்தப் பரிசைத் தேர்வு செய்வது என்பது விழாவின் தன்மை மற்றும் உறவின் அடிப்படையில் அமையும்.
மத பண்டிகைகளின்போது, பூஜைப் பொருட்கள் அல்லது ஆன்மிகப் பொருட்களையும், சில விழாக்களில், மொய் பணத்தை பரிசாகக் கொடுப்பதும் ஒரு பொதுவான வழக்கமாக உள்ளது. சில விழாக்களின்போது பரிசுப் பொருட்கள், சில்லறைப் பொருட்களிலிருந்து, பரிசுக் கூப்பன்கள் (gift vouchers) போன்றவற்றை நாம் தேர்ந்தெடுப்பதும் உண்டு.
பரிசுப் பொருட்களில், இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மக்களிடையே மொய் பணம் வைப்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பழக்கமாகும். திருமணம், காது குத்து, சடங்கு, வளைகாப்பு, கிரகப் பிரவேசம் போன்று நம் வீடுகளில் நடைபெறும் எல்லா விழாக்களின்போதும் உறவினர்களும், நண்பர்களும் மொய் வைப்பது தமிழ்நாட்டில் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது. அப்படி மொய் வைக்கப்படும் தொகைகள் எப்போதும் 51, 101, 501, 1001 முதல் 1000001 வரை நீண்டு கொண்டே இருக்கும். இவற்றில் தொடங்கும் எண்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனால், முடியும் எண் எப்போதும் 1 ஆகத்தான் இருக்கும். இந்த நடைமுறை நம் முன்னோர்களால் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு நம்மிடமும் தொடர்ந்து வருகிறது.
பணத்தை மொய்யாகக் கொடுக்கும்போது, மக்கள் பெரும்பாலும் 1 என முடியும் ஒற்றைப்படைத் தொகைகளைத் தேர்வு செய்வது அவர்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது. அந்தக் கூடுதல் ரூபாயைச் சேர்ப்பது என்பது தம்பதியினரின் பிணைப்பைப் போலவே, அந்தத் தொகையை இரண்டு இரட்டைப் பகுதிகளாகப் பிரிக்க முடியாது என்பது ஒரு கூடுதல் தகவல் ஆகும்.
மொய் பணத்துடன் சேரும் ஒரு ரூபாய் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாகவும், உறவை பலப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. பிரிக்க முடியாத இந்தத் தொகை தம்பதியினரின் ஒற்றுமையையும் அவர்களின் உறவு வலுவாக இருப்பதையும் உறுதி செய்கிறது. மகிழ்ச்சியான திருமண உறவிற்கு தம்பதிகளிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்பதையும் இது குறிக்கிறது.
உறவில் புதிய தொடக்கம் ஒரு ரூபாயைச் சேர்ப்பது என்பது ஒரு குறியீட்டு மதிப்பையும் கொண்டுள்ளது. '0' என்ற எண் ஒரு முடிவைக் குறிக்கும். ஆனால் '1' என்பது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. அந்த ரூபாயைச் சேர்ப்பதன் மூலம், மெய்யாக வைக்கும் தொகை பூஜ்ஜியத்தில் முடிவடையாமல் புதிய ஒன்றைத் தொடங்குகிறது. இது மொய் வைப்பவரின் நல்வாழ்த்துக்களை வெளிப்படுத்தி மொய் பணத்தின் மதிப்பை மேலும் பொருளுடையதாக மாற்றுகிறது.
உறவுகளின் நெருக்கம், மொய் பணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் என்பது குறியீட்டை விட அதிகமாகும். இது உறவுகளின் நெருக்கத்தைக் குறிக்கிறது. இந்த சிறிய தொகை பெறுபவரின் மீது ஒரு கடமையை சுமத்துவதாக நம்பப்படுகிறது, அவர்கள் தங்கள் பிணைப்பை வலுப்படுத்த மீண்டும் மொய் வைப்பவரை சந்திக்க வேண்டும். இது உறவுகளில் தொடர்ச்சியை ஏற்படுத்துகிறது. மீண்டும், மீண்டும் சந்திப்பதற்கான வாக்குறுதியை நம்மை அறியாமலேயே மொய்ப்பணம் நமக்கு அளிக்கிறது.
மொய்யுடன் சேர்க்கப்படும் ஒரு ரூபாய் நாணயம் முதலீட்டையும் வளர்ச்சியையும் குறிக்கிறது. மகாலட்சுமியின் பிரதிநிதியாகவும் நாணயம் செல்வத்தைக் குறிக்கிறது. இந்த சிறிய தொகையை புத்திசாலித்தனமாக மொய் பெறுபவர்கள் முதலீடு செய்யலாம் அல்லது விழாவின் ஏதேனும் செலவின் பகுதியாக மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு நிலையான தொகையுடன் ஒரு ரூபாயை சேர்ப்பதன் மூலம், அதைப் பெறுபவர்கள் நல்வாழ்வை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த செயல் கருணை மற்றும் அரவணைப்பின் செயலாக நம்பப்படுகிறது. மேலும், அதைப் பெறுபவருக்கு அதிக மகிழ்ச்சியையும் செல்வத்தையும் மொய் பணம் தருகிறது என்பதே நம் அனுபவ உண்மை.