

நம்மில் பலர் வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்போம். அவை நாய், பூனை, கிளி போன்ற எதுவாகவும் இருக்கும். பொதுவாக இவை தம்மை வளர்ப்போரிடம் நெருக்கம் காட்டி அன்புடன் பழகுவதை விரும்பும் குணமுடையவை. இவற்றில் விளையாட்டுத்தனம் மிக்க சில வகை பூனைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. அபிஸினியன் (Abyssinian): நடுத்தரமான அளவுடைய இந்த வகை பூனை குறைந்தளவு நீளம் கொண்ட முடியுடன் பளபள தோற்றம் கொண்டிருக்கும். இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் வளரும் பழங்கால இனத்தை சேர்ந்தது. சும்மா இருப்பதை ஒருபோதும் விரும்பாது. அலமாரி, கதவு போன்றவற்றின் மீது ஏறுவது, குதிப்பது, பொம்மைகளைப் பற்றிக்கொண்டு விளையாடுவது, சுற்றுப்புறத்தில் உள்ள எதையாவது ஆராய்ச்சி பண்ணுவது போன்றவை இதற்கு பிடித்தமான தினசரி விளையாட்டுகளாகும்.
2. பெங்கால்: சதைப் பற்று நிறைந்த உடலில் கண்கவர் புள்ளிகள் மற்றும் கோடுகள் உடையது. கலப்பினத்தை சேர்ந்த, வன விலங்கு போல் தோற்றமளிக்கும் வீட்டுப் பூனை இது. நல்ல திறமையும், புத்திசாலித் தனமும் அதிக சக்தியும் கொண்டது. நாள் முழுக்க எதையாவது துரத்திக் கொண்டிருப்பது, எதன் மீதாவது ஏறுவது, பிரச்னைகளை தீர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு நேரத்தை கழித்துக் கொண்டிருக்கும். எதுவும் இல்லாதபட்சத்தில் தனக்குத்தானே எதையாவது உருவாக்கி விளையாடிக் கொண்டிருக்கும். தன்னை வளர்ப்பவர் அல்லது பிற மனிதர்களின் கூட்டணியுடன் சேர்ந்து விளையாடும்போது இது தனது சக்தியை நேர்மறை வழியில் உபயோகித்து அதிக மகிழ்ச்சியடைவதாக உணரும்.
3. சியாமீஸ் (Siamese): தாய்லாந்தை பிறப்பிடமாகக் கொண்டது. வெளிப்படைத் தன்மை கொண்ட முக பாவம், குறைந்த நீளம் கொண்ட உரோமங்கள் நிறைந்த உடல், மெலிந்த உருவம் கொண்டு சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும். தனியாக சுற்றித் திரிவதை விட, மனிதர்களுடன் ஆழ்ந்த அன்பு கொண்டு தனது மொழியில் பேசியபடி விளையாடுவதில் ஆர்வம் அதிகம் கொண்டது.
4. டெவோன் ரெக்ஸ் (Devon Rex): மிருதுவான சுருள் முடியும் பெரிய காதுகளும் உடையது. இதன் பிறப்பிடம் இங்கிலாந்து. தனித்துவமான தோற்றம் கொண்டது. இதன் விளையாட்டுத் தனமும் குறும்புகளும் மனிதர்களை கவர்ந்திழுக்கக்கூடியது. பொருட்களின் மீது ஏறுவது, குதிப்பது, புதுப்புது விளையாட்டுக்களைக் கண்டுபிடித்து விளையாடுதல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம். மனிதர்களுடன் விளையாடுவது இதற்கு மிகவும் பிடிக்கும். தன்னை வளர்ப்பவருடன் கூடவே சென்று, உரசியபடி நின்று மகிழ்வதில் திருப்தியடையும்.
5. டோங்கினீஸ் (Tonkinese): இவ்வகை பூனை மிகவும் புத்திசாலி. புதுப்புது விஷயங்கள் மற்றும் தந்திரங்களைக் கற்றுக்கொள்ள உதவும் ஃபுட் பசில் (Food puzzle) போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இயல்புடையது. வீட்டிலுள்ளவர்கள், அருகிலுள்ள வெளியிடத்துக்குச் சென்று வரும்போது நண்பனைப் போல் கூடவே சென்று திரும்பும். விளையாடும் நேரம் இதற்கு மகிழ்ச்சியான இணைப்பை உண்டுபண்ணவும், ஓய்வான உணர்வு பெறவும் உதவி புரியும்.
6. மேன்க்ஸ் (Manx): மென்மையான, விசுவாசம் நிறைந்த குணம் கொண்டது இவ்வகைப் பூனை. இயற்கையாக குட்டையான வால், வலுவான பின்னங்கால்கள், உருண்டையான உடலமைப்பு கொண்டது. அதிக வேகமாக ஓடும். ஆக்ரோஷமாக விளையாடும். நடுவில் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளும். சுற்றுச் சூழலில் புதுப்புது விஷயங்களைக் கண்டறிவதில் இதற்கு ஆர்வம் அதிகம். தன்னை வளர்ப்பவருடன் கூடவே நடந்து செல்வதில் இதற்கு அலாதி பிரியம். வீட்டில் உள்ள அனைவருடனும் நெருங்கிய இணைப்பை உண்டுபண்ணிக் கொள்வது இதற்கு மிக்க மகிழ்ச்சி தரும் விஷயம். நாய் போன்ற மற்ற செல்லப் பிராணிகளுடனும் சேர்ந்து விளையாடும்.
அதிக உடல் வலிமையுடன், பரண் போன்ற உயரமான இடங்கள் மீது தாவி ஏறுவது, குதித்தோடி விளையாடுவது, மற்ற பூனைகளுடன் நட்புடன் பழகி, புது விளையாட்டுகளை கண்டுபிடித்து விளையாடி மகிழ்வது போன்ற செயல்களால் பூனைகள் தம் வாழ்க்கையில் சந்தோஷத்தை நிலைநிறுத்தி சமநிலைத் தன்மையுடன் வாழ்ந்து வருகின்றன.