
‘வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்’ என்பார்கள். இரண்டுமே எளிதான காரியம் அல்ல. இரண்டும் காலம் காலமாய் நிலைத்து நிற்க நிறைய பாடுபடத்தான் வேண்டும். தம்பதியரின் அன்பு என்பது சண்டை போடாமல் வாழ்வதில் இல்லை. எவ்வளவு சண்டை வந்தாலும் திரும்பவும் வந்து மனதை சமாதானப்படுத்துவதில்தான் இருக்கிறது. உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் கூட கொண்டாடப்படுகிறது.
1. சகிப்புத்தன்மை தேவை: தம்பதியர்களுக்கு இடையே சின்னச் சின்ன சண்டைகளும், கோபமும் வருவது இயற்கைதான். ஆனால், அவற்றை ஊதி பெரிதாக்கி விடாமல் உடனுக்குடன் பேசி ஒருவருக்கொருவர் சமாதானம் ஆகிவிட வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் கெட்டுப்போவதில்லை என்பது முதுமொழி. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதும், மன்னிப்பதும், மறப்பதும்தான் உறவை இனிமையாகத் தொடர உதவும். இல்லறத்தை நல்லறமாக்க சகிப்புத்தன்மை என்பது அவசியம்.
2. காயப்படுத்தக் கூடாது: வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும், கனிவாகப் பேசி பழகுவதும் தம்பதியர்களுக்கு இடையே சண்டைகள் வருவதைக் குறைக்கும். வார்த்தைகள் ஒருபோதும் தடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காயப்படுத்தாமல், மதிக்கின்ற பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் இல்லறம் நல்லறமாக இருக்கும். தவறுகள் நேரும்பொழுது அதை மன்னித்து ஒருவருக்கொருவர் மீண்டும் புதுப்பிக்கும் மனநிலையுடன் இருத்தல் அவசியம்.
3. அன்பை வெளிப்படுத்துதல்: தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பு, பாசம், மரியாதை செலுத்துவது ஒற்றுமைக்கு மிகவும் அவசியம். கடினமான நேரங்களில் ஆறுதல் சொல்வதும், மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வதும் வாழ்வில் சந்தோஷத்தை உண்டுபண்ணும். கணவன், மனைவி இருவருமே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தங்களுடைய அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தால்தான் உறவு பலப்படும். சின்னச் சின்ன பரிசுகள், பாராட்டுக்கள், மலர்ந்த முகம், கனிவான பேச்சு, அனுசரித்துப் போகுதல் போன்றவை அன்பை வெளிப்படுத்தும் வழிகள். சிறிய சிறிய சந்தோஷங்களையும் ரசித்து, பகிர்ந்து கொள்வது உறவை பலப்படுத்தும்.
4. விட்டுக்கொடுக்கும் மனநிலை: கடந்த கால தவறுகளைப் பற்றி அதிகம் பேசி விவாதிக்காமல் எதிர்காலத்தை நோக்கி மகிழ்ச்சியுடன் பயணிப்பது நல்லது. ஏதேனும் குறைகள் இருந்தாலும் பிறருக்கு எதிரில் நம் துணையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது உறவை பலப்படுத்தும். ஒருவருக்கொருவர் விரும்பும் விஷயங்களில் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது சிறந்தது.
5. உண்மையாய் இருப்பது: ஒருவருக்கொருவர் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படையாக பரிமாறிக் கொள்வதால் பிரச்னைகள் எளிதில் எழாது. தம்பதியர்கள் தங்களுக்குள் பொய் பேசுவதைத் தவிர்ப்பதும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்பதும் சிறந்த தம்பதியராய் இருக்க உதவும். பண விஷயத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஒளிவு மறைவு கூடாது. ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவராய் இருப்பது இல்லறம் செழிக்கவும், வாழ்வில் இன்பம் பெருகவும் வழி வகுக்கும்.
6. மனம் விட்டுப் பேசுதல்: சின்னச் சின்ன பிரச்னைகள் வரும்பொழுது சச்சரவுகள் எழாமல் இருக்க எந்தப் பிரச்னை வந்தாலும் இருவரும் அமர்ந்து நிதானமாக மனம் விட்டுப் பேச, பிரச்னைகள் காணாமல் போய்விடும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருக்கும் தம்பதிகள் தங்களுக்கு இடையே உருவாகும் கருத்து வேறுபாடுகளை திறமையாக எதிர்கொள்கின்றனர். இது ஆரோக்கியமான உறவை பேணுவதற்கு உதவும். ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள ஒன்றாக நேரத்தை செலவிடுவதும், குடும்பத்தின் வேலைச்சுமைகளை பகிர்ந்து கொள்வதும் உறவு மேம்பட உதவும்.