
விருந்துகளில் சாப்பிடும்போது துணிமணிகளில், பட்டுகளில் கறைபடும். மற்றும் வீட்டில், வெளியில், பள்ளியில் விளையாடும்போது குழந்தைகள் சில கறைகளுடன் திரும்பி வருவார்கள். துணிகளில் பட்ட சில கறைகள் போகாது. இவற்றையெல்லாம் எப்படி போக்குவது என்பதை இப்பதிவில் காண்போம்.
துணிகளில் எண்ணெய் கறை பட்டுவிட்டால் விபூதியை அந்த துணியின் மீது கொட்டி நன்றாக கசக்கிய பிறகு துவைத்தால் கறை போய்விடும்.
துணிகளில் கிரீஸ் அல்லது தார் போன்ற கறைகள் பட்டுவிட்டால் அவற்றைத் துவைக்கும்போது சில சொட்டுக்கள் நீலகிரி தைலம் விட்டு கழுவினால் கறைகள் போய்விடும். பிறகு சோப்புதூள் கொண்டு அந்த இடத்தில் தேய்த்து அலச கறை நான் போகிறேனே மம்மி என்று ஓடிவிடும்.
கிரீஸ், எண்ணெய் துணிகளில் பட்டுவிட்டால் லேசான சுடுநீரை பயன்படுத்தி சோப்பு நீரை விட்டு நன்றாக கழுவினால் போதும்.
பழங்களின் கறை பட்டுவிட்டால் அதில் உப்புத்தூளை தடவி நன்கு தேய்த்து கழவிவிட்டு சிறிது ஏரியல் பவுடரை தேய்த்து கொதித்த நீரால் கழுவ பளிச்சென்று இருக்கும்.
லிப்ஸ்டிக் பட்ட துணிகளில் சிறிதளவு டூத் பேஸ்ட்டை தேய்த்து வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து சர்ஃப் எக்ஸெல் லிக்விட் போட்டு தேய்த்து கழுவினால் போய்விடும்.
ரீபிள் பேனா மை கறைபட்ட துணிகளில் பெட்ரோல் தடவி ஏரியல் பவுடர் போட்டு துவைக்கலாம்.
பால் பாயிண்ட் இங்க் பட்டு கறை ஏற்பட்டிருந்தால் அடியில் ஒரு பிளாடிங் பேப்பரை வைத்து கறைபடிந்த இடத்தில் ஸ்பிரிட் தடவி தேய்த்தால் கறை போயே போச்சு.
முட்டை, பால் கறைபட்ட துணிகளில் குளிர்ந்த நீரை பயன்படுத்தி சோப்பு போட்டு துவைக்கவேண்டும்.
ஜூஸ் கொட்டிய துணிகளில் சலவை சோடாவும் தண்ணீரும் கலந்து துவைத்தால் கறை போகும். பிறகு லிக்விட் சோப் கொண்டு அலசலாம்.
காபி, டீ கறைபட்ட இடங்களில் கொதித்த நீரை விட்டு தேய்த்து கழுவினால் கறை நீங்கிவிடும். பிறகு சர்ஃபில் ஊறவைத்து துவைக்கலாம்.
துணியில் சூயிங்கம் கறை பட்டுவிட்டால் அங்கு பெட்ரோலை நன்றாகத் தடவி சிறிது ஊறவிட்டு பிறகு வாஷிங் பவுடர் போட்டு தேய்த்து அலம்பவும். கறை நான் போய்விட்டேனே என்று கண்சிமிட்டும்.
சில நேரங்களில் துணிகளில் துருக்கறை படிந்து இருக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து அந்த இடத்தில் தேய்த்து அலசிவிட்டு பிறகு ஏரியல் பவுடரை நன்றாக தேய்த்து அலச வேண்டும். அப்பொழுதுதான் அந்த கறை போகும்.
வாழைப்பூ வாழைப்பட்டை கறை துணிகளில் பட்டுவிட்டால் அந்த இடத்தில் எலுமிச்சை சாற்றுடன் வினிகரையும் சேர்த்து கலந்து நன்றாக கழுவ வேண்டும். பிறகு ஏதாவது ஒரு சோப்பு பவுடரை அழுந்த தேய்த்து துவைக்க கறை போய்விடும்.
ரத்தக்கரை போன்ற சில அழுத்தமான கறைகள் எது போட்டாலும் போகாமல் இருக்கும். அதற்கு பேக்கிங் சோடா பவுடரை வினிகரில் கரைத்து கறைபடிந்த இடங்களில் தேய்த்து வைத்தால் சிறிது நேரத்தில் கறை கரைந்துவிடும்.
பட்டுகளில் படும் கறைகளுக்கு ஷாம்பு உபயோகிப்பதே சிறந்தது. ஈஸி லிக்யூட் பயன்படுத்தி கறைகளை அகற்றலாம். இப்படி செய்வதால் பட்டை மென்மையாக கையாண்டு பாழாகாமல் தடுக்க முடியும்.
பூந்தி கொட்டையை ஊறவைத்து அதில் பட்டு துணிகளை துவைத்து சிறிது எலுமிச்சைசாறு கலந்து குளிர்ந்த நீரில் அலசினால் பட்டு துணி பளபளவென்று மின்னும்.
களை இழந்துபோன டைல்ஸ் தரையை ஒரு பக்கெட் தண்ணீரில் 10 மில்லி வினிகர் ஊற்றி துடைத்தால் பளபளப்பாகிவிடும்.