காலை நடைப்பயிற்சி தரும் 7 நன்மைகள்!

morning walking
morning walkinghttps://curriedayspa.com

காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் பல்வேறு நன்மைகளை நாம் அடையலாம். அவை என்னென்ன நன்மைகள் என்பதை இந்தப் பதிவில் காண்போம்!

அதிகாலையில் விழித்தல்: நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதும் அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கம் நம்மை ஆட்கொண்டு விடுகிறது . இதனால் பகல் முழுவதும் நல்ல சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடிகிறது. தேவையான பொழுது நல்ல ஓய்வும் எடுத்துக்கொள்ள முடிகிறது. இதனால் மன அமைதி கிடைக்கிறது.

புதியவை கற்றல்: நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போட்டிருக்கும் புதுமையான அழகான கோலங்களை கற்றுக்கொண்டு, நம் வீட்டிலும் அதை கையாளுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் சிலர் அந்தக் கோலத்தின் மீது எழுதி இருக்கும் வாசகங்களை படிக்கும் போது மனதிற்கு மகிழ்வு கிட்டுகிறது. இதனால் ஏதோ ஒரு விஷயத்தை புதிதாக கற்றுக் கொள்கிறோம் என்ற சந்தோஷம் கிடைக்கிறது.

தோட்டங்களை கவனித்தல்: தினசரி ஒவ்வொரு தெருவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது எந்தெந்த வீட்டில் என்னென்ன புதிய வகை தாவரங்கள் இருக்கின்றன என்பதை பார்க்க முடிகிறது. இதனால் விதை தேவைப்படும் பொழுது அவர்களிடம் விவரம் அறிந்து நம் தோட்டத்திற்கு வேண்டிய ஐடியாக்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது. இதனால் புதிய நட்பு உருவாகிறது. அதனுடன் கூடிய தோட்டப் பராமரிப்பு பற்றிய டிப்ஸ்களையும் அறிய முடிகிறது.

தாலாட்டு ரசித்தல்: நடந்து போகும் வழிகளில் உள்ள அண்டை அயலார் வீடுகளில் குழந்தைகள் இருந்தால், அவர்களின் வீடுகளில் இருக்கும் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுவதை காதால் கேட்டு ரசிக்க முடிகிறது. இதனால் மறந்துபோன தாலாட்டு பாடல்கள் கூட நம் ஞாபகத்திற்கு வருகிறது. மேலும் இன்னும் தாலாட்டு பாடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களை மனதளவில் மானசீகமாக பாராட்ட முடிகிறது. இது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

காதில் விழும் உபயோகமான சொற்கள்: மைதானத்திற்குள் சுற்றி நடக்கும் பொழுது முன் பின் வருபவர்கள் கூறும் அல்லது செல்லில் பேசிக் கொண்டு வரும் சமையல் டிப்ஸ், மருத்துவ டிப்ஸ் ,ஊடகங்களை கையாளும் முறை, ஜோக்ஸ் போன்ற விவரங்களை காதில் போட்டுக் கொள்ள முடிகிறது. இதுவும்  சில சமயங்களில் உதவிகரமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சமையலறை சுத்தமாக இருக்க சில பளிச் ஆலோசனைகள்!
morning walking

பொது சேவை: ஒரு கிரவுண்டில் நடக்கும்பொழுது தினசரி அதே கிரவுண்டிற்கு வரும் ஒரு சிலர் மாத்திரம் எந்தவித கைமாறும் கருதாமல் அங்கு விழும் வாட்டர் பாட்டில், பாலிதீன் கவர்களை சுத்தப்படுத்தி பைகளில் நிரப்பி ஓரமாக வைப்பது, அதை குப்பை வண்டிக்காரர்களிடம் எடுத்துக் கொடுப்பது, மைதானத்தை எப்பொழுதுமே சுத்தம் செய்து கொண்டிருக்கும் வேலைகளை தினசரி சிலர் செய்வதைக் காண முடிகிறது. அதற்கு யாரும் பணம் காசு கொடுப்பதில்லை. அதை விரும்பியும் அவர்கள் செய்வதில்லை. இப்படியும் சில நல்ல உள்ளங்களை பாராட்டி விட்டு வர முடிகிறது. இன்னும் அங்கு நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களில் யாராவது மயங்கி விழுந்தால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுப்பது வரை நல்ல செயல்களை செய்யும் மனித உள்ளங்கள் காணக் கிடைக்கின்றன.

ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடுகிறது: தினசரி இதுபோல் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க முடிகிறது. இதனால் மன அமைதி கிடைக்கிறது. பசி எடுப்பதால் சரியான நேரத்திற்கு சாப்பிட முடிகிறது. செரிமான இயக்கம் நன்கு செயல்படுவதால் மந்த தன்மை ஏற்படுவதில்லை. இதனால் இரவில் ஆழ்ந்த உறக்கம் வருகிறது. உறக்கம் கலைந்து எழும்பொழுது மனது தெளிவாகவும் , கவனச் சிதறல் ஏற்படாமலும், சோர்வு உணர்வுகள் இன்றியும் நம் அன்றாட செயல்களில் கவனம் செலுத்த முடிகிறது.

இவற்றை எல்லாம் மனத்திரைக்கு கொண்டு வரும்பொழுது நல்ல ஒரு நேர்மறை எண்ணங்கள் வளர்கின்றன. அடுத்த நாள் நடைப்பயிற்சி மேற்கொள்ள இது ஒரு உந்து சக்தியாக அமைந்து விடுகிறது. ஆதலால் நடைப்பயிற்சி மேற்கொள்வோம்; ஆரோக்கியமுடன் நல்ல எண்ணங்களை சேர்ப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com