

பெண் குழந்தைகள் முழுமையான வளர்ச்சியடையும் காலங்களில், தங்கள் எதிர்கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்குத் தேவையான சுதந்திரம், எவ்வளவு கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் தன்னை மீட்டெடுக்கும் திறன் போன்ற உயரிய பண்புகளை தங்கள் தந்தையிடமிருந்தே கற்றுக்கொள்கின்றனர். அவ்வாறு அவர்கள் கற்றுக்கொள்ளும 7 விதமான பண்புகள் என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1. உறுதியான குரல்: பெண் தனது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும்போது அவள் குரலில் தன்னம்பிக்கையுடன் கூடிய ஓர் அழுத்தம் இருக்கும். இம்மாதிரியான தருணங்களில், தனது பேச்சை தங்கு தடையின்றி தெளிவான உச்சரிப்பு மற்றும் நிதானத்துடன் பேச வேண்டும் என்பதை தனது தந்தை மூலமே கற்றுக்கொள்கிறாள். தந்தை அவளை மேலும் ஊக்குவிக்கும்போது, அவள் கூறும் கருத்துக்களின் முக்கியத்துவத்தை போல, அதனை எடுத்துக் கூறும் அவளுடைய மதிப்பும் உயர்வதை அவள் உணர்கிறாள். உலகளவில் அவள் பேச்சு பரவும்போது, அவளின் மெய்யுணர்வு கொண்ட கருத்துக்கள் எவராலும் அசைக்க முடியாததாகிவிடும். பின்வரும் காலங்களில் அவளின் பேச்சாற்றல் அவளுக்கு தலைமைப் பொறுப்பையும் பெற்றுத் தரும்.
2. மீட்சித்தன்மை (Resilience): தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, அந்தச் சூழலிலிருந்து முழுவதுமாக வெளியேறி, வெற்றிக்கான படிகளில் ஏற முற்படும் சூட்சுமத்தையும் ஒரு பெண் தனது தந்தையிடமிருந்தே கற்றுக்கொள்கிறாள். அதன் பின் அவளின் வெற்றிகளைத் தடுத்து நிறுத்த எவராலும் இயலாது.
3. நிதி நிர்வாகத் திறன்: நிதி நிர்வாகம் என்பது பல காலமாக ஆண்கள் வசமே இருந்து வந்தது. நவீன காலத்தில் பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்கள், பெண்களுக்கு நிதி நிர்வாகம் செய்வதற்குத் தேவையான அறிவையும் ஆற்றலையும் ஊட்டி வருகின்றனர். தந்தையின் வழிகாட்டுதல் மூலமே பெண்கள் நிதி நிர்வாகத்தில் அடைய வேண்டிய இலக்கு, எதிலெல்லாம் பணத்தை முதலீடு செய்தால் வருவாய் அதிகரிக்கும் போன்ற விவரங்களை கற்றுக் கொள்கின்றனர். இள வயதில் பெறும் அறிவு, பணத்தின் மதிப்பையும், சேமிப்பின் நன்மைகளையும் தெரிந்துகொள்ள உதவுகிறது.
4. தளராத உறுதி (Unyielding Determination): வேறுபட்ட சூழ்நிலைகளில், எதிர்மறை சக்தி உயர்ந்து நிற்கும்போதும் நிலையான உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் செயலாற்றி இலக்கை அடையும் பண்பையும் பெண் தனது தந்தையிடமிருந்தே கற்றுக் கொள்கிறாள். 'ஒரு கதவு மூடினால் இன்னொன்று திறக்கும்' என்ற கூற்றைப் பின்பற்றி, செல்லும் பாதையிலிருந்து பின்வாங்கிவிடாமல் வாழ்வில் வெற்றி பெறும் வரை பயணித்துக்கொண்டே இருப்பாள்.
5. ஆழ்ந்த அனுதாபம் கொள்ளும் குணம்: பிற மனிதர்களின் உணர்ச்சிகளையும் இயலாமையையும் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தேவையானதை பச்சாதாபத்துடன் செய்து கொடுக்கும் குணமும் தந்தையிடமிருந்தே பெண்ணுக்கு வருகிறது. பிற்காலத்தில் அந்தப் பெண் இதயமுள்ள நல்லதொரு தோழியாகவும், சக ஊழியராகவும், மனிதாபிமானமுள்ள ஒரு மனுஷியாகவும் உருவாக இந்த குணமே காரணமாகிறது.
6. பிரச்னைகளை சுமூகமாக தீர்க்கும் திறன்: சிக்கலான குடும்பச் சூழல், மோசமான நிதி நிலைமை, பழுதுபட்ட காரை சீராக்கிக் கொண்டுவர வேண்டிய கடமை போன்ற எந்தவிதமான பிரச்னைகளையும் சமாளிப்பதற்கு அப்பா எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும், அவரின் பொறுமையையும், யுக்திகளையும் உடனிருந்து கவனிக்கும் பெண், தந்தையின் அப்படிப்பட்ட அனைத்து நற்குணங்களையும் உள்வாங்கி, பிற்காலத்தில் பின்பற்றவும் செய்கிறாள்.
7. நிபந்தனையற்ற அன்பும் மரியாதையும்: ஒரு தந்தை தனது மகள் மீது காட்டும் அன்பு, அக்கறை, மதிப்பு போன்றவற்றின் மூலம் மகளை அவளின் சுயமதிப்பையும் கண்ணியதையும் உணரச் செய்கிறார். பெண்கள் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தான் மரியாதையுடன் நடத்தப்படத் தகுதியானவள் என்பதையும் புரிய வைக்கும் அந்தப் அன்பு. இதுவே உறவுகளின் மத்தியில் தன்னை உயர்த்திக் காட்டவும், முக்கியமான முடிவுகளை எடுக்கவும், சுய மதிப்பை இழக்காமல் இருக்கவும் அடித்தளமாக அமைகிறது. தவறு காண முடியாத தந்தைப் பாசம் மற்றும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாழ்க்கைப் பாடங்கள், ஒரு மகளின் வாழ்நாள் முழுவதுக்குமான வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. தந்தை - மகள் பாசம் என்பது பிரிக்க முடியாத ஓர் இணைப்பு என்றால் அது மிகையல்ல.