பணம், புகழ், செல்வம் போன்றவை இல்லாவிட்டாலும் ஒரு குடும்பத்தில் நிம்மதி மட்டும் இருந்து விட்டால், அந்தக் குடும்பத்தில் சந்தோஷம், ஒற்றுமை நிலைத்து நிற்கும். குடும்பத்தின் நிம்மதியை குலைக்கும் 7 பழக்க வழக்கங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவைக்கு அதிகமாக செலவு செய்வது: சிந்திக்காமல் தேவைக்கு அதிகமாக பணத்தை செலவழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவசியத் தேவைக்கு பணம் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள். பணத்தையும், நீரையும் செலவழிப்பதில் சிக்கனம் தேவை. தேவையில்லாத ஆடம்பர செலவுகளை குறைத்தாலே வாழ்வில் நிம்மதி கிடைக்கும். செலவு செய்வதற்கு முன் நமக்கு இந்தப் பொருள் தேவையா? இதனால் என்ன பயன்? என்று ஒரு கணம் சிந்தித்தாலே போதும் தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்தி விடலாம்.
ஒப்பிட்டுப் பார்ப்பது: தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நிம்மதியை கெடுக்கும். சிலர் எப்போதும் தங்களை மற்றவுடன் ஒப்பிட்டு பார்த்துகொண்டே இருப்பார்கள். இது வீண் வேலை. இதனால் நம் மன நிம்மதி கெடுவதுடன் வாழ்க்கையை திருப்தியாக வாழவும் முடியாமல் போகும். தேவையில்லாமல் போட்டி போட்டு அதில் ஜெயிக்க முடியவில்லை என்றால் மன வருத்தம் அடைந்து நிம்மதியை தொலைப்பார்கள். விரலுக்கேற்ற வீக்கம் இருந்தால் எந்த பிரச்னையும் வராது.
சோம்பேறித்தனம்: சோம்பல்தனம் எப்பொழுதுமே வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். சோம்பேறித்தனம் உள்ளவர்கள் எந்த வேலையையும் நேரத்திற்கு செய்யாமல் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பார்கள். இதனால் வாழ்வில் வரும் நல்ல வாய்ப்புகளை இழந்து விடுவார்கள். இதனால் அவர்களுக்கு வரவேண்டிய நல்ல வாய்ப்புகளை இழந்து வாழ்வில் நிம்மதியை இழப்பார்கள்.
பலவீனம்: சிலர் பதற்றத்தில் அல்லது கவலையில் இருக்கும்பொழுது தன்னைச் சுற்றியுள்ள உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் தங்கள் பலவீனத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். இது மிகவும் தவறானது. இதனால் அவர்களது பலவீனத்தை மற்றவர்கள் சமயம் பார்த்து பயன்படுத்திக் கொள்வார்கள். நம் பலவீனத்தை எதிராளிகள் தெரிந்து கொண்டால் நம்மால் வாழ்வில் வெற்றி பெற முடியாது.
பேராசை: நம்மிடம் பேராசை என்ற குணம் வந்துவிட்டால் நம்மால் நிம்மதியாக வாழ்வை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியாது. ஆசைப்படலாம் தவறில்லை. ஆனால், ஆசைக்கும் பேராசைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பேராசை கொண்டால் மன நிறைவு என்பது வாழ்வில் கிடைக்காமல் நிம்மதி இழந்து தவிப்போம். ‘பேராசை பெரு நஷ்டம்’ என்பதை மறக்கலாகாது. தேவைக்கு மேல் ஆசைப்படுவதே பேராசை. எதைக் கொண்டும் திருப்தி அடையாமல் மேலும் மேலும் ஆசைப்படுவது நம் நிம்மதியை குலைத்து விடும். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் நியாயமான ஒன்றின் தேடல் ஆசை. நியாயமற்ற அல்லது தகுதிக்கு மீறிய ஒன்றின் மேல் வருவது பேராசை. இது நம் நிம்மதியை தொலைத்து விடும்.
தீய பழக்கங்கள்: உடலையும் மனதையும் கெடுக்கும் தேவை இல்லாத பழக்கங்களான மது அருந்துதல், புகையிலை போன்ற லாகிரி வஸ்துக்களை பயன்படுத்துதல், சிகரெட் பிடித்தல் போன்றவை நம் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.
உணவுக் கட்டுப்பாடு இன்மை: துரித உணவு, பொரித்த உணவு மற்றும் தந்தூரி உணவு வகைகளை மக்கள் மிகவும் விரும்பி உண்கிறார்கள். பெரும்பாலான மக்கள் அதிக உடல் உழைப்பின்றி பொரித்த உணவுகளையும், ஃபாஸ்ட் ஃபுட்களையும் சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியம் கெடுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவு கூடுவதுடன் நிம்மதியும் கெடுகிறது.