
தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாங்கள் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்று தம்மைப் பற்றியே குறைவாக எண்ணுவார்கள். தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுவதன் மூலம் யாரிடமும் சரியாகப் பழகவும் விரும்ப மாட்டார்கள். தாழ்வு மனப்பான்மை என்பது தேவையற்றது. அதிலிருந்து வெளிவர உதவும் சில எளிய குறிப்புகளை இப்பதிவில் காணலாம்.
1. சுயமரியாதையை வளர்த்துக்கொள்ளுதல்: தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள். இது தேவையற்றது. நம்முடைய பலம், பலவீனம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால்தான் நம்மால் சிறப்பாக வாழ முடியும். அத்துடன் நம்முடைய திறமைகளில் கவனம் செலுத்துவதும் சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள உதவும். முதலில் நம்மை நாமே நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். சுயமரியாதையை வளர்த்துக்கொள்வதன் மூலம் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவரலாம்.
2. பிறருடன் ஒப்பிடுவதை நிறுத்துதல்: எக்காரணம் கொண்டும் பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள். ஒவ்வொரு மனிதருமே தனித்துவமானவர்கள்தான். மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். பிறருடன் ஒப்பிடுவதை நிறுத்திக்கொண்டு சவாலான சூழ்நிலைகளை சந்திக்கத் தயாராவதுடன், நம்பிக்கையுடன் செயல்படவும் தொடங்கினால் தாழ்வு மனப்பான்மை என்பது நம்மிடம் இருந்து ஓடிவிடும்.
3. தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுதல்: தவறுகள் செய்வது மனித இயல்பு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு திரும்பவும் அவை நேரிடாமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். வாழ்வில் முன்னேறுவதற்கான இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தால் தாழ்வு மனப்பான்மை என்பது சிறிதும் உண்டாகாது. அத்துடன் நம்மை தாழ்வு மனப்பான்மை ஏற்பட வைக்கும் உறவுகள், நண்பர்களை அடையாளம் கண்டு அவர்களை விட்டு விலகி இருப்பதும் நம்மை ஊக்குவிக்கும் நபர்களுடனான உறவை வளர்த்துக்கொள்ளவும் முயற்சி செய்வதும் சிறந்த பலன் அளிக்கும்.
4. நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுதல்: மனதில் இருந்து எதிர்மறை எண்ணங்களை விரட்டி நேர்மறையான எண்ணங்களை வளர்க்க முயற்சி செய்யலாம். பிறரிடம் பாராட்டு பெறுவதற்கு செயல்படுவதை விட, நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொண்டு நமக்கு விருப்பமான செயல்களில் இறங்குவது நேர்மறையான எண்ணத்தை வளர்க்க உதவும். தாழ்வு மனப்பான்மைக்கு முக்கியக் காரணம் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பதே ஆகும். அத்துடன் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அவர்களிடமிருந்து சரிபார்ப்பை எதிர்பார்க்கிறோம்.
5. மனதை அமைதிப்படுத்துதல்: மனதை அமைதிப்படுத்த தியானம், யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நம்முடைய மனதை அமைதிப்படுத்துவதுடன் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். பிறர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணிக் கலங்குவதை விட்டு மனதை அமைதியாக வைத்துக்கொள்ள பயிற்சி பெறலாம்.
6. தனிமையைத் தவிர்த்திடுதல்: தனிமை என்பது மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும். எனவே, தனிமையில் இருப்பதைத் தவிர்த்து விடுவது நல்லது. நண்பர்களுடன் பழகுவதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் சிறந்த பலனைத் தரும். நண்பர்கள் இல்லை என்றால் ஏற்படுத்திக்கொள்வதும், நல்ல புத்தகங்களை படிப்பதும், தொலைக்காட்சியில் நகைச்சுவை காட்சிகளை கண்டு களிப்பதும், பிடித்த விஷயங்களைச் செய்வதும் தனிமையை விரட்டிவிடும்.
7. உடல், மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல்: உடற்பயிற்சி, சத்தான உணவு, போதுமான தூக்கம் ஆகியவை மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவும். மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும், தன்னம்பிக்கை உயரும். எதையும் சாதித்து விட மனம் திடம் கொள்ளும். தாழ்வு மனப்பான்மை என்பது நம்மிடமிருந்து தானாகவே விலகிச் சென்று விடும்.