

இன்றைய அவசர உலகில் நாம் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது வழக்கமாகி விட்டது. பக்கத்து வீட்டுக்காரர் முதல் மொபைலில் வரும் செய்திகள் வரை எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துத்தான் நம்புகிறோம். ஆனால், உலகமே பயன்படுத்தும் விக்கிப்பீடியா என்ற ஒரு பிரம்மாண்டமான தளத்தை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸ், ‘நம்பிக்கை என்பது பலவீனமல்ல, அது மனித உறவுகளை இணைக்கும் ஒரு வலுவான கட்டுமானம்’ என்கிறார். அவர் தனது அனுபவத்திலிருந்து சொல்லும் 7 உத்திகள் நம் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி உதவும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. முகத்தைப் பார்த்துப் பேசுங்கள்: நம்பிக்கை என்பது வெறும் செல்போன் திரையிலோ அல்லது கம்ப்யூட்டர் கீ போர்டிலோ பிறப்பது கிடையாது. அது இரு இதயங்களுக்கு இடையே உருவாகும் ஒரு பாலம். வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புகிறோம். ஆனால், நேரில் பார்த்துப் பேசத் தயங்குகிறோம்.
அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு சக ஊழியரிடம், ‘இந்த ஃபைலை முடித்துவிட்டீர்களா?’ என்று மட்டும் கேட்பது வெறும் வேலை. அதற்குப் பதிலாக, அவர் முகத்தைப் பார்த்து, ‘இன்று ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? உடல்நிலை சரியாக இல்லையா?’ என்று ஒரு நிமிடம் அன்போடு விசாரித்துப் பாருங்கள். அந்த ஒரு வினாடி அக்கறை, ‘இவர் நம் மீது அன்பு வைத்திருக்கிறார்’ என்ற ஆழமான நம்பிக்கையை அவரிடம் உருவாக்கும்.
2. மற்றவர்களின் நல்லெண்ணத்தை நம்புங்கள்: ஒருவர் தவறு செய்யும்போது, ‘அவர் வேண்டுமென்றேதான் செய்தார்’ என்று நினைக்காமல், ‘தெரியாமல் செய்திருக்கலாம்’ என்று நினையுங்கள். இதைத்தான் 'நல்லெண்ணத்தை முன்னிறுத்துதல்' என்கிறோம். விக்கிப்பீடியாவில் பல கோடி பேர் தகவல்களைப் பகிரும்போது, அனைவரும் நல்ல எண்ணத்துடன்தான் வருகிறார்கள் என்று நம்புவதால்தான் அந்தத் தளம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்கிறார் ஜிம்மி வேல்ஸ்.
3. தெளிவான நோக்கம்: குழப்பம் உள்ள இடத்தில் சந்தேகம் தானாகவே வந்துவிடும். நீங்கள் ஒரு காரியத்தைச் செய்யும்போது, ‘இதன் நோக்கம் இதுதான்’ என்று மற்றவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவாக இருங்கள். உங்கள் சொல்லிலும் செயலிலும் தெளிவு இருந்தால், மக்கள் உங்களை தயக்கமின்றி நம்புவார்கள்.
4. விதைத்தால்தான் அறுவடை செய்ய முடியும்: நம்பிக்கை என்பது கொடுத்தால்தான் கிடைக்கும். ‘அவர்கள் என்னை முதலில் நம்பட்டும், அப்புறம் நான் அவர்களை நம்புகிறேன்’ என்று காத்திருக்கக் கூடாது. பிள்ளைகளிடமோ அல்லது உங்களிடம் வேலை செய்பவர்களிடமோ பொறுப்புகளை ஒப்படைத்துப் பாருங்கள். நீங்கள் அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை, அவர்களை இன்னும் சிறப்பாகச் செயல்படத் தூண்டும்.
5. நாகரிகமான நடத்தை: கருத்து வேறுபாடுகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால், சண்டையிடும்போது கூட நாகரிகமாகப் பேசுவது அவசியம். கோபத்தில் கத்துவதாலோ அல்லது மற்றவர்களைக் கேலி செய்வதாலோ நம்பிக்கை உடைந்துவிடும். மரியாதையுடன் பேசுபவர்களிடம்தான் மக்கள் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள்.
6. கொள்கையில் உறுதி: பணம், புகழ் அல்லது யாரோ ஒருவரின் மிரட்டலுக்காக உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல், எது சரியோ அதைச் செய்யுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் மாறாத உங்கள் குணம்தான் காலப்போக்கில் மிகப்பெரிய நம்பகத்தன்மையாக மாறும்.
7. வெளிப்படையாகச் செயல்படுங்கள்: ஒளிவு மறைவு உள்ள இடத்தில்தான் பயம் வரும். நீங்கள் என்ன செய்கிறீர்கள், ஏன் செய்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். தவறு நடந்துவிட்டால் அதை மறைக்காமல் ஒப்புக்கொள்வது உங்கள் மதிப்பைக் குறைக்காது, மாறாக, உங்களை இன்னும் அதிகமாக நம்புவதற்கு வழிவகுக்கும்.
நம்பிக்கை என்பது ஒரே நாளில் உருவாவது அல்ல. அது மெல்ல மெல்ல செதுக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த ஏழு விதிகளைப் பின்பற்றினால் மனிதர்களுடனான உறவுகளை நன்கு பலப்படுத்தலாம்.