

‘அழகு ஒரு பலம் என்றால், புன்னகை ஒரு போர் வாள்’ என்றார் ஜான் ராய் எனும் அறிஞர். வார்த்தைகள் அற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மொழிதான் இந்த புன்னகை. ஒரு மனிதனுக்கு உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த ஆயிரக்கணக்கான வழிகள் இருந்தாலும் ஒரு புன்னகையால் அவற்றை எளிதாக சாதித்து விடலாம். ஒரு மனிதனின் புன்னகை முகத்தை, 300 அடி தூரத்தில் இருந்து கூட கண்டறிய முடியும். அந்தளவிற்கு அது சக்தி வாய்ந்தது. ஒரு புன்னகைக்கு நம் முகத்தில் 5 முதல் 53 வகையான தசைகள் இயங்க வேண்டும்.
புன்னகை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் மூளையில் உள்ள நரம்பியக் கடத்தியான டோபமைனை செயல்படுத்துவதால், ஆன்டிபாடிகள் மற்றும் பிற நோயைக் கொல்லும் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதுவே நாம் மகிழ்ச்சியாகவும் புன்னகையுடனும் இருக்கும்போது நமது நோயெதிர்ப்பு அமைப்பு திறம்பட செயல்படக் காரணமாகிறது.
புன்னகைக்கும்போது முகத்தில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு, எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், எதிர்மறை உணர்வுகள் குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். சிறு புன்னகையின் மூலம் வாழ்வின் மகிழ்ச்சியை உணரலாம். ‘நீங்கள் புன்னகைக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு நல்ல விஷயத்தை மூளைக்குக் கொண்டு செல்கிறீர்கள்’ என்கிறார் மனோவியல் அறிஞர் சாரா ஸ்டீவன்சன்.
‘சிரித்த முகத்திற்கு சிபாரிசு தேவை இல்லை’ என்பார்கள் நம் ஆன்றோர். அது உண்மைதான் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். சிரித்த முகம் எப்போதும் மனிதர்களை கூலாக வைத்திருக்கும். அதுவே அவர்களுக்கு செல்லும் இடங்களில் நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கித் தருகிறது. அவர்களின் வெற்றி ரகசியம் புன்னகை தவழும் முகமே என்பதை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
எந்த மனிதராக இருந்தாலும் சரி அவரின் சிரித்த புன்னகை முகமே கவர்ச்சிகரமானதாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெரும்பாலானோர் புன்னகையாளர்களே. நன்கு புன்னகைக்கத் தெரிந்த மனிதர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். புன்னகையுடன் ஒரு நாளை தொடங்குங்கள். கண்ணாடியில் உங்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு ஒவ்வொரு காலைப்பொழுதையும் தொடங்குங்கள். புன்னகை என்பது இருவழிப் பாதை அது மற்றவரையும் தொற்றிக் கொள்ளும்.
ஒரு சிறு புன்னகை பல உணர்வுகளை மறைக்கக் கூடியது. அதில் பயம், சோகம், மன உளைச்சல் என அனைத்தையும் மறைத்து விடலாம். அதேவேளையில் அது உங்கள் பலத்தையும் காட்டும். ஒரு சிறு புன்னகை அறிமுகமாகாத ஒருவரைக் கூட எளிதாக நட்பாக்கக்கூடிய ஆற்றல் மிக்கது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே ஏற்படுத்தும் பணியை புன்னகை செய்கிறது. ஆனால், நாம் புன்னகை புரிவது இயல்பானதாக இருப்பது அவசியம். அதில் போலித்தனம் கூடாது.
புன்னகை புரிவது இயல்பாகவே ஏற்படக்கூடிய மனப்பயிற்சி மூலமே சாத்தியமாகும். அதைக் கொண்டு வருவதும் எளிதானதே. மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொண்டாலே போதும், புன்னகை புரிவது சாதாரணமாகிவிடும். புன்னகை புரிவதால் நமக்கு மட்டும் அதன் பலன் கிடைக்காமல் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கிடைக்கிறது. அதுதான் அதன் பலம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி, அதை சிறு புன்னகையோடு கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அது உங்கள் வாழ்வை அழகாக்கும்.