

‘மார்னிங் பேஜஸ்’ என்பது காலையில் எழுந்தவுடன் மூன்று பக்கங்கள் நிறையும் வரை தொடர்ந்து எழுத வேண்டும். நாம் என்ன எழுதுகிறோம் என்பதைப் பற்றி யோசிக்கவோ அல்லது சரி செய்யவோ வேண்டாம். இலக்கணம், எழுத்துப்பிழை போன்ற எவற்றைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுத்தில் வடிக்கலாம். அவை முழுமையற்றதாக அல்லது அர்த்தமில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை.
நாம் எழுதுவது முந்தைய நாள் நடந்த நிகழ்ச்சியாகவும் இருக்கலாம், கனவாகவும் இருக்கலாம் அல்லது எதைப் பற்றியும் இல்லாமல் மனதில் தோன்றுவதைப் பற்றி மனம்போன போக்கில் எல்லாம் எழுதலாம். எழுதிய பக்கங்களை மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், இதை எழுதுவதற்கு முக்கிய நோக்கம் மனதை கிளீன் செய்வது மட்டுமே. அதாவது, மனதை சுத்தமாக்குவதற்காகவும், மனதில் எந்தவிதமான அழுத்தமும் பதற்றமும் இல்லாமல் எண்ணங்களில் தெளிவு பெறுவதற்காக மட்டுமே எழுதப்படுவதாகும்.
மார்னிங் பேஜஸ் (Morning Pages) என்பது அமெரிக்க எழுத்தாளர் ஜூலியா கேமரூன் தனது, 'தி ஆர்ட்டிஸ்ட்ஸ் வே' (The Artist's Way) புத்தகத்தில் அறிமுகப்படுத்திய ஒரு தினசரி எழுத்துப் பயிற்சியாகும். இதன் மூலம் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை வெளியேற்றி, தெளிவுபடுத்தி, படைப்பாற்றலை தூண்ட உதவும் ஒரு எளிய பயிற்சியாகும். எப்படி எழுதுவது என்று தெரியவில்லை எனத் தயங்க வேண்டாம். எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு நாள் தவறவிட்டாலும் அடுத்த நாள் மீண்டும் தொடங்கலாம்.
இதனை பயிற்சி செய்வது நல்லது. இதுவும் கிட்டத்தட்ட தினமும் டைரி எழுதுவதைப் போன்றதுதான். ஆனால், இதன் நோக்கம் முற்றிலும் மாறுபடுகிறது. டைரியில் எழுதுவது என்பது நம்மை அறியவும், நம்மை வெளிப்படுத்தவும் உதவும். அத்துடன் நம்முடைய வாழ்க்கையைப் பதிவு செய்வதற்கும், நினைவுகளை பாதுகாப்பதற்கும் உதவும் பழக்கமாகும். ஆனால், மார்னிங் பேஜஸ் என்பது நம் மனதில் தோன்றக்கூடிய அனைத்தையும் அப்படியே எழுதுவதாகும். ஆனால், இதனை நாம் மற்றவருடன் கட்டாயமாக பகிர்ந்து கொள்ளக் கூடாது.
மனதில் உள்ள சோகம், சந்தோஷம், கோபம், குறைகள் உட்பட அனைத்தையும் அப்படியே எழுத வேண்டும். எதையும் சென்சார் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் இடையில் தயங்கி நிறுத்துவதும் தேவையற்றது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதமாவது எழுத, நம் மூளையில் உள்ள அனைத்து குப்பையான எண்ணங்களும், தேவையற்ற வருத்தங்களும் நம் எழுத்தில் கொட்டப்படுவதால் மனம் அமைதி அடையும். எதிர்மறை எண்ணங்கள் விலகி பாசிட்டிவ் உணர்வுகள் அதிகரிக்கும். எதையும் நல்லவிதமாக எண்ணத் தொடங்குவோம்.
புதிய ஐடியாக்கள் மனதில் பிறக்கும். கடினமான நேரங்களில் கூட நம் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்த முடியும். மன அழுத்தம் குறைந்து மனம் லேசாகும். இது மனம் மற்றும் படைப்பாற்றலை தூண்டுவதற்காக, எந்தவிதமான தடையும் இன்றி எழுதப்படும் ஒரு ‘ஸ்ட்ரீம் ஆஃப் கான்ஷியஸ்னஸ்’ (stream of consciousness) பயிற்சியாகும்.