
தற்காலத்தில், நகரங்களில் புறாக்களின் எண்ணிக்கை காக்கைகளை விட அதிகரித்து விட்டது எனலாம். அவை குடியிருப்பு வீடுகளில் கூடு கட்டி குடும்பம் நடத்துவதும் சாதாரணமாகி விட்டது. முதலில் பால்கனி, ஜன்னல் மற்றும் பாத்ரூம் போன்ற இடங்களில் காணப்படும் சிறு இடைவெளிகளில் புகுந்து கூடு கட்டி, பிறகு அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுகின்றன. அப்போது அவை கொண்டு வந்து குவிக்கும் குச்சிகள், இடும் எச்சம், உதிர்க்கும் இறகுகள் போன்றவற்றால் சுற்றுப்புறம் சுகாதாரமற்றுப் போய்விடுகிறது. ஆரம்பத்திலேயே அவற்றை அண்ட விடாமல் தடுப்பதே நலம். வீட்டு உரிமையாளர்களுக்கு அவை தரும் இம்சைகளிலிருந்து அவர்களைக் காக்க உதவும் 7 வழிமுறைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1. புறாக்களுக்கு தீங்கிழைக்காதவாறு வடிவமைக்கப்பட்ட, கூர் முனை கொண்ட பிளாஸ்டிக் அல்லது உலோகத்திலான உபகரணங்களை வாங்கி, அவை பறந்து வந்து உட்காரவோ நுழையவோ உதவக்கூடிய இடங்களில் பொருத்தி வையுங்கள்.
2. உண்ண உணவும் குடிக்க தண்ணீரும் கிடைக்கும் இடங்களை விட்டுப் போக புறாக்களுக்கு மனம் வராது. எனவே, வீட்டின் பால்கனி மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடப்பதையும், ஏ.சி. யூனிட்டிலிருந்து வெளியாகும் தண்ணீர் தேங்கி நிற்பதையும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
3. ஒரு பௌலில் வெள்ளை நிற வினிகரை நிரப்பி பால்கனியில் வைப்பதும் புறாவை விரட்ட உதவும்.
4. புறாக்கள் வந்து கூடு கட்டும் இடங்களைக் கண்டறிந்து அந்த இடத்திற்கு அவை வரும் வழியை, நைலான் வயரிலான வலைகளால் மூடி விடுவது நிரந்தரமாக அவற்றின் வருகையைத் தடுக்க உதவும்.
5. கணிக்க முடியாதபடி ஒளிரும் வெளிச்சம் மற்றும் அதன் பிரதிபலிப்பை புறாக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. பளபளப்பான பழைய CD, பிளாஸ்டிக்காலான மினுமினுக்கும் சுருள் ரிப்பன், காற்று வீசும்போது ஒலியெழுப்பும் காற்றுக் கிண் கிணி (Wind Chimes) போன்றவற்றை பால்கனி மற்றும் ஜன்னல் பக்கம் கட்டித் தொங்க விடுவது, புறாக்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட உதவும்.
6. கிராம்பு எண்ணெய், பெப்பர்மிண்ட் மற்றும் மிளகாய்த் தூள் கரைசல் போன்ற கடுமையான வாசனை கொண்ட பொருட்களை பால்கனி கிரில், கைப்பிடி சுவர், டைல்ஸ் போன்றவை மீது ஸ்பிரே பண்ணி வைப்பதும் புறாக்களை விரட்ட உதவும்.
7. மீந்துபோன உணவுப் பொருட்கள் மற்றும் தானிய வகைகளை பறவைகள் உண்பதற்கென வீட்டின் திறந்தவெளிப் பகுதிகளில் தூவி வைக்கும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். இதனால் புறாக்கள் மீண்டும் மீண்டும் உங்கள் வீட்டுப் பக்கம் வருகின்ற வழக்கத்தை நிறுத்திவிடும்.
புறாக்கள் இடும் எச்சத்திலிருந்து உருவாகும் ஒரு வகை வைரஸ் நுரையீரல் கோளாறை உண்டுபண்ணி சுவாசப் பிரச்னை வர காரணமாகிறது என சமீப காலத்தில் கேள்விப்படுகிறோம். எனவே, புறா கூட்டத்திலிருந்து விலகி வாழக் கற்றுக் கொள்வோம்.