நாமே நமது அம்மா, அப்பாவை தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், புதிதாக ஒருவரைப் பார்த்துப் பழகி, பிடித்து விட்டால் நம் குடும்பத்தில் ஒருவராகப் பாவித்து நட்புடன் பழக முடியும். அது முழுக்க முழுக்க நமது தேர்வு. அப்படித் தேர்ந்தெடுத்த நண்பர்தான் நமது உள்ளும் புறமும் அறிந்து நாம் எப்படியோ அப்படியே நம்மை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருப்பவர். அப்படியிருந்தபோதும் நட்பு வளரவும் வலுவடையவும் கொஞ்சம் நாளாகும். ஒருசிலர் மற்றவருடன் விரைவில் நட்பை உண்டுபண்ணி நெருக்கமுடன் பழக ஆரம்பிப்பதில் சிறப்பாய் இருப்பர். வேறு சிலர் சிறிது காலம் தாமதித்த பின்பே நட்பை ஏற்றுக்கொண்டு பழக ஆரம்பிப்பர். அவர்களின் நட்பு வட்டம் சிறியதாகவே இருக்கும்.
எது ஒருவருக்கு பல நண்பர்களைப் பெற்றுத் தருகிறது? எது நட்பை நீண்ட காலம் தொடரச் செய்கிறது? சிலருக்கு ஏன் அது முடிவதில்லை? என்ற நோக்கில் சமீபத்தில் ஒரு பகுப்பாய்வு செய்து அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 7 முக்கியமான வழிகளில் ஒருவர் அவருடைய நண்பருடனான நட்பின் ஆழத்தை அதிகரிக்கச் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
மெனலாஸ் அபோஸ்டோலோன் (Menelaos Apostolon) என்பவர் மற்றும் அவரின் கூட்டணியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 7 முக்கியமான உத்திகள் நட்பை வலுவடையச் செய்வதற்கு கையாளப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்துவது: நண்பர் செய்யும் செயலுக்கு துணையாயிருந்து ஊக்கப்படுத்துதல்.
2. தொடர்பு கொண்டு அளவளாவுதல்: நண்பருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கும் நேரத்தை அதிகரிப்பது.
3. இடைவெளியின்றி தொடர்பில் இருப்பது: இருவரும் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பங்கள் குறையாமல் பார்த்துக்கொள்வது.
4. அவ்வப்போது பரிசளித்தல்: பிறந்த நாள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டு பரிசு கொடுப்பது.
5. நம்பிக்கை: ஒருவர் மற்றவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் விதத்தில் நடந்து கொள்ளுதல்.
6. நண்பரின் குடும்பத்தாருடனும் நெருங்கிப் பழகுதல்: நண்பரின் குடும்ப உறுப்பினர்களுடனும் பாசத்துடன் அன்யோனியமாய் பழகுவது.
7. நண்பரின் கொள்கையுடன் ஒத்துப்போவது: நண்பர் பேசும்போது எதிர்வினையாற்றி விவாதம் செய்யாதிருத்தல்.
நண்பர்களுடன் பழகி நட்பை வளர்த்துக்கொள்வதற்கு ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்க்கையில் அவரின் பாலினம், தோற்றம், வயது மற்றும் குணங்களும் அங்கு தாக்கத்தை உண்டுபண்ணுவதைக் காண முடியும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் மேலே கூறிய 7 உத்திகளையுமே நட்பில் கையாளத் தயங்க மாட்டார்கள். அதேபோல் இளம் வயதினர் நட்புகொள்ளும்போது பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதிலும், நட்பைப் பலப்படுத்த உதவும் பேச்சுக்களில் அதிக நேரம் செலவிடுவதையும் விரும்புவர்.
தனித்தன்மை வாய்ந்த குண நலனுடையவர்கள் ஒருவருடன் நட்பு கொள்ள அவரின் எல்லா செயல்களையும் ஒப்புக்கொண்டு அவருக்கு ஆதரவாக செயல்படுவதையே விரும்புவர். வெளிப்படையாகவும் சகஜமாகப் பழகும் தன்மையும் கொண்டவர்கள், நண்பர்களுடன் பழகுவதில் மேலே கூறப்பட்டுள்ள மற்ற உத்திகளைக் கைக்கொள்பவர்களாக இருப்பர். இதில் நீங்கள் எந்த வகை என்பதை கமெண்ட்டில் கூறுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.