பலரும் செல்ஃபோனை இரவு தூக்கத்தில் கூட விட்டுப் பிரிவதில்லை. படுக்கையில், அதுவும் தலையணைக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு உறங்குபவர்கள் ஏராளம். இரவு முழுவதும் அலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சீர்குலைந்த உறக்க முறைகள்: செல்ஃபோனிலிருந்து வெளிப்படும் நீல ஒளி, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கிறது. இது உடலின் இயற்கையான சர்க்காடியன் தாளத்தில் குறுக்கிடுகிறது. இது தூங்குவதில் சிரமம் மற்றும் ஒட்டுமொத்த தூக்கத்தின் தரம் குறைவதற்கு வழிவகுக்கும்.
2. அதிகரித்த கவலை மற்றும் மன அழுத்தம்: ஸ்மார்ட் ஃபோன்கள் தொடர்ந்து அறிவிப்புகள் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்ற செயல்களில் இருந்து தொடர்ந்து நோட்டிஃபிகேஷன் இரவு முழுவதும் வந்துகொண்டே இருக்கும். சிலர் நோட்டிபிகேஷன் வந்தவுடன் போனை எடுத்து நள்ளிரவில் கூட பார்க்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதில் வரும் செய்திகள் அல்லது சமூக ஊடக செய்திகள் ஒரு விதமான பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். தேவையில்லாத வெளிப்புற சிக்கல்கள் மற்றும் அழுத்தத்தை ஒருவர் தமக்குத்தாமே இரவில் தந்து கொள்கிறார். இதனால் தூக்கம் தடைப்பட்டு கவலை மற்றும் மன அழுத்தமும் அதிகரிக்கும்.
3. மின்காந்த கதிர்வீச்சு வெளிப்பாடு: மின்காந்தக் கதிர்வீச்சின் ஆரோக்கிய விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தாலும் சில ஆய்வுகள் செல்போன் கதிர்வீச்சின் நீண்ட கால வெளிப்பாடு தலைவலி அல்லது தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். புற்றுநோய் அபாயம் போன்ற நீண்ட கால விளைவுகள் கூட ஏற்படலாம் என்று கூறுகின்றன.
4. தூக்கம் குறைதல்: இரவு தூங்குவதற்கு முன்பு அல்லது அதிக நேரம் அலைபேசியைப் பயன்படுத்தும்போது அது முழுமையான தூக்கத்திற்கு வழி வகுக்காது. அடிக்கடி ஃபோனை பார்க்கும் பழக்கம் தூக்கச் சுழற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும். இதனால் குறைவான மறு சீர் அமைப்பு அனுபவம் மட்டுமே கிடைக்கும். மறுநாள் உடலும் மனமும் சோர்ந்து போகும்.
5. உடல் விபத்துக்கள்: அதிக வெப்பமூட்டும் சாதனங்களால் தீக்காயங்கள் போன்ற உடல் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஃபோனை தலையணைக்கு அருகில் வைத்திருக்கும்போது அது வெப்பமடைந்தால் ஆபத்தை உண்டாக்கலாம்.
6. தொழில்நுட்பத்தின் மீதான அடிமைத்தனம்: இரவில் அலைபேசியை அருகில் வைத்திருப்பது டிஜிட்டல் சார்புக்கு பங்களித்து தொழில்நுட்பத்தின் மீது ஒரு அடிமைத்தனத்தை உருவாக்கும். இதனால் வழக்கமான செயல்முறைகள் சிறப்பாக நடைபெறாமல் போகும். செய்யும் பணிகளில் கவனச் சிதறல்கள் ஏற்படும்.
7. மனச்சோர்வு: சமூக ஊடகங்களில் உலாவுதல், செய்திக் கட்டுரைகளைப் படிப்பது, மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பது போன்ற ஃபோனில் உள்ள உள்ளடக்கத்தில் ஈடுபடுவது அறிவாற்றல் சுமைக்கு வழிவகுக்கும். படுக்கும் முன் இந்த மனத் தூண்டுதல், உடல், மனத்தளர்வுக்கு இடையூறு விளைவிக்கும். அடுத்த நாள் சோர்வான உணர்வுகளுக்கு வழி வகுக்கும்.
8. உறவுகளில் எதிர்மறையான தாக்கம்: தலையணைக்கருகில் ஃபோனை வைத்துத் தூங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் அல்லது கணவன் மனைவிக்கிடையே கவனத்தை திசை திருப்பலாம். இது தனிப்பட்ட உறவுகளைப் பாதிக்கும். புறக்கணிப்பு அல்லது துண்டிப்பு உணர்வுகளுக்கு இட்டுச் செல்லும்.
தலையணைக்கருகில் செல்ஃபோனை வைத்திருக்கும்போது அது சைலெண்ட் மோடில் இருந்தாலும் அது நீல ஒளியை வெளிப்படுத்தும். அது குறைந்த அளவிலான மின்காந்தக் கதிர்வீச்சை வெளியிடும். சில நபர்கள் உணர்திறன் உடையவர்களாக இருப்பார்கள். நீண்ட காலம் அலைபேசியை அருகில் வைத்து தூங்கும்போது அது உளவியல் ரீதியான பாதிப்பை உருவாக்கலாம். எனவே, உறங்கும்போது செல்ஃபோனை படுக்கையை விட்டு அதிக தொலைவில் வைப்பது அவசியம். இரவில் மட்டுமாவது செல்ஃபோன் ஓய்வெடுக்க அனுமதிக்கலாம். அதன் மூலம் நாமும் நிம்மதியாகத் தூங்கலாம்.